

எழுதித் தீராதவை பெண்களின் பிரச்சினை என்பது எந்த அளவுக்கு உண்மையோ பெண்களின் வரலாறு முழுமையாக எழுதப்படவே இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. பெண்கள் எழுதவருவதே பெரும்பாடாக இருக்கிற நிலையில், பெண்கள் சார்ந்து படைப்புகள் வெளியாவதும் மிகக் குறைவு. பெரும்பாலான புனைவுகளில் உயர்த்திப்பிடிக்கப்படும் ஆணாதிக்கப் பெருமிதத்தில் பெண்கள் இழிவான வர்களாகச் சித்தரிக்கப்படும் அவலமும் இலக்கிய உலகில் நேர்வதுண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் பெண்ணியக் குரல்களை வரவேற்கும் இயல்புத்தன்மைகூடப் பலரிடம் இல்லை. இப்படியொரு சூழலில்தான் வாசிப்பைப் பெண்கள் மிக முக்கியமானச் செயல்பாடாகக் கைகொள்ள வேண்டும். வாசிக்க, வாசிக்கத்தான் இடமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையைப் பெண்கள் உணர்ந்து, தெளிந்து செயல்படுவார்கள். 2023இல் பெண்கள் சார்ந்தும் பெண்களால் எழுதப்பட்டதுமான படைப்புகளில் சில இவை. நம் வாசிப்பை விசாலமாக்க இவை வழிகாட்டும்.
வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டில் பயின்று மருத்துவரான முதல் தமிழ் பெண் என்கிற வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்நூல். முத்துலட்சுமியோடு பழகியவர்கள், பணிபுரிந்தவர்கள், உறவினர்கள் போன்றோருடன் உரையாடி, சிறுகதையின் சுவாரசியத்தோடு அவற்றை இந்நூலில் தொகுத்துள்ளார் வி.ஆர். தேவிகா. இந்த நூலின் மூலமாக டாக்டர் முத்துலட்சுமியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அந்தக் காலத்தின் அரசியல் நிகழ்வுகள், பெண்களுக்கான அமைப்புகள் - அவற்றின் பணிகள், சென்னையின் முக்கிய இடங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
முத்துலட்சுமி ரெட்டி
l ஆசிரியர்: வி.ஆர்.தேவிகா
தமிழாக்கம்: பட்டு எம். பூபதி, அக்களூர் இரவி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-42009603
சிறுகதைகள்
தமயந்தி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கற்பனையைவிட எதார்த்தம் குரூரமானது. புனைவுகளில் எழுதப்படும் எல்லாமே புனைவல்ல என்பதை தமயந்தியின் கதைமாந்தர்கள் நமக்கு உணர்த்தத் தவறுவதில்லை. எளிய சொற்களில் வலிய கருத்தைச் சொல்வது தமயந்தியின் பாணி. பெண்களை, அவர்களது அக உலகத்தை அறிந்துகொள்ள இந்தச் சிறுகதைகள் நமக்கு உதவும்.
தமயந்தி சிறுகதைகள்
l ஆசிரியர்: தமயந்தி
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூ.680
தொடர்புக்கு: 8925061999
நாவல்
பெண்ணின் ஆடை எப்போதும் பேசுபொருளாக இருந்திருக்கிறது. பெண்களை ஒடுக்கும் கருவியாகவும் ஆடை செயல்பட்டுவருகிறது. ஆடை என்பது பெண்ணின் தேர்வா, சமூகத்தின் நிர்ப்பந்தமா என்பது காலந்தோறும் நீடித்துவரும் விவாதம். கலாச்சார விழுமியமாகவும் மத அடையாளமாகவும் பெண்ணின் மீது ஆடை வலிந்து திணிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மத்தியில் உலகம் முழுவதுமே பர்தா என்பது பெரும் விவாதப் பொருளாக இருக்கிற இந்நாளில் அது குறித்துத் தெளிவான ஒரு குரல் எழுந்திருப்பது காலத்தின் தேவை. இஸ்லாமியப் பெண்களின் ஆடையான பர்தா குறித்த இந்நாவல் உலகத்துப் பெண்கள் அனைவரும் தங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது.
பர்தா
l ஆசிரியர்: மாஜிதா, வெளியீடு: எதிர் வெளியீடு, விலை: ரூ.200
தொடர்புக்கு: 04259-226012
ஆய்வுக் கட்டுரை
வரலாற்றை நோக்கிப் பயணப்படுவது என்பது நம் மூதாதையரை அறிவதற்கான வழிகளுள் ஒன்று. விருப்பு, வெறுப்பில்லாமலும் எவ்விதச் சார்பும் இல்லாமலும் எழுதப்படுகிற ஆய்வுகளே உண்மைக்கு நெருக்கமானவையாக இருக்கும். சொல்லப்படுகிற கதைகளைவிட ஆதாரங்களே ஆய்வுகளைச் செம்மைப்படுத்தும். அய்யனார் வழிபாட்டையும் அதைக் கடைப்பிடித்த சமூகங்களைப் பற்றியும் கோ.சசிகலா எழுதியிருக்கும் இந்நூல் பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், கள ஆய்வுகள் எனப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்
l ஆசிரியர்: கோ.சசிகலா
வெளியீடு: தடாகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8939967179
மொழிபெயர்ப்புகள்
பெண்ணியப் படைப்பாளர்களை ஊக்குவித்துவரும் ‘ஹெர் ஸ்டோரீஸ்’, கடந்த ஆண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பெண் படைப்பாளர்கள், பெண்கள் சார்ந்து எழுதுபவர்கள் இந்த இரண்டு தரப்புதான் இவர்களது மையம். ‘ஹெர் ஸ்டோரீஸ்’ தளத்தில் தொடராக வெளிவரும் படைப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏழு நூல்கள் ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட்டப் பட்டன. இதில் சிறாருக்கான நூல்களும் அடக்கம்.
ஹெர் ஸ்டோரீஸ்
தொடர்புக்கு: 7550098666.