Published : 01 Jan 2018 12:15 PM
Last Updated : 01 Jan 2018 12:15 PM

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆர். காம்?

பி

ரச்சினைகளின் விளிம்பில் ஆர்.காம் என்னும் கட்டுரை சில வாரங்களுக்கு முன்பு எழுதினோம். அதில் அனில் அம்பானி செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன என குறிப்பிட்டோம். கடந்த சில வாரங்களாக நிறுவனத்தை மீட்கும் வேலையை தொடங்கி இருக்கிறார் அனில் அம்பானி. நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி அளவுக்கு கடன் இருந்தது. இதில் ரூ.39,000 கோடியை வரும் மார்ச் மாதத்துக் குள் குறைக்க ஆர்.காம் முடிவெடுத்திருக்கிறது. கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இருந்து விலகுவதாகவும், எந்த நிறுவனத்துக்கும், வங்கிகளுக்கும் கொடுக்க வேண் டிய தொகையில் எந்த தள்ளுபடியும் இருக்காது என கடந்த வார தொடக்கத்தில் அனில் அம்பானி கூறினார்.

ஆர்.காம் நிறுவனத்தின் டவர், ஸ்பெக்ட்ரம், பைபர் ஆப்டிக் ஆகிய பிரிவுகளை விற்க முடிவெடுத்திருக்கிறது. இந்த சொத்துகளை விற்பதற்கு வங்கி, சட்ட வல்லுநர்கள் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தலைமையில் ஏலம் நடந்தது. இதில் அதிக தொகையை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ வாங்க இருக்கிறது. இதன் மூலம் 43,000 டவர்கள், 1.78 லட்சம் கிலோமீட்டர் பைபர் ஆப்டிக் கேபிள் உள்ளிட்டவை ஜியோ வசம் செல்லும். கடந்த 28-ம் தேதி இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டன. ரிலையன்ஸ் குழும நிறுவனம் திருபாய் அம்பானியின் பிறந்த நாளில் இதற்கான கையெழுத்து போடப்பட்டிருக்கிறது. 2006-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் பிறந்த பிறகு சகோதரர்கள் ஒன்றாக இணைவது தற்போதுதான். இந்த சொத்துகள் எவ்வளவு தொகைக்கு கைமாறுகிறது என்பது குறித்து இரு நிறுவனங்களும் முறையாக அறிவிக்கவில்லை. ஆனால் ரூ.25,000 கோடி இருக்கும் என இந்த துறை வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

தொடர் ஏற்றத்தில் ஆர்.காம்

ஆர்.காம் நிறுவனத்தின் கடனை குறைக்கப்போவதாக அனில் அம்பானி அறிவித்தவுடனேயே இந்த பங்கு உயரத்தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆர்.காம் சொத்துகளை ஜியோ வாங்குவதாக அறிவித்ததும் பங்கின் ஏற்றம் மேலும் தொடர்ந்தது. செவ் வாய் முதல் வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் ஆர்.காம் பங்கு தொடர்ந்து உயர்ந்தது. கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் 122 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு உயர்ந்துள்ளது. சந்தை மதிப்பு மட்டும் ரூ.5,506 கோடி உயர்ந்திருக்கிறது.

கடனை செலுத்திய பிறகு நிறுவனத்துக்குள் புதிய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று அறிவி த்த அனில் அம்பானி, யார் வருவா ர்கள் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் வரும் காலத்தில் 50 சதவீத வருமானம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் என்றும், பி2பி பிரிவில் கவனம் செலுத்தப்போவதாகவும் அனில் கூறியிருக்கிறார்.

ஐசியுவில் இருந்த நிறுவன த்தை காப்பாற்றியாகி விட்டது. இயல்பு நிலைக்கு திரும்புமா என்பதை இன்னும் சில மாதங்களுக்கு பிறகே கூற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x