Last Updated : 03 Jan, 2018 11:09 AM

 

Published : 03 Jan 2018 11:09 AM
Last Updated : 03 Jan 2018 11:09 AM

வியப்பூட்டும் இந்தியா: அழகிய சாஞ்சி

 

சா

ஞ்சி என்றதும் புத்தரின் நினைவுச் சின்னங்கள் இருக்கும் அழகிய சாஞ்சி ஸ்தூபிதான் நினைவுக்கு வரும். மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 46 கி.மீ. தூரத்தில் இருக்கிறது சாஞ்சி நகரம். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி மெளரிய அரசர்களால் ஆளப்பட்டுவந்தது. மௌரிய வம்சத்தின் தலைசிறந்த அரசரான அசோகர், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தைத் தழுவினார்.

புத்தரின் தத்துவங்களைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பரப்புவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றுதான் சாஞ்சி ஸ்தூபி. மிகப் பழமையான கல்லில் அமைக்கப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது.

அசோகரின் மனைவி தேவி, சாஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். குன்றுகளின் மேலுள்ள அழகான இந்த நகரத்தில் ஸ்தூபி கட்ட முடிவு செய்தார். அவரின் மேற்பார்வையில் முதல் ஸ்தூபி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.

மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்களும் அவர்களுக்குப் பின்வந்த அரசர்களும் மேலும் பல ஸ்தூபிகளைக் கட்டினர். முதல் ஸ்தூபிக்கு மெருகூட்டப்பட்டது. ஸ்தூபியைச் சுற்றி மரவேலியும் நான்கு பக்கங்களில் தோரண நுழை வாயில்களும் அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சம் புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். புத்தரின் சிலைகளும் மற்ற சிற்பங்களும் வடிக்கப்பட்டன. கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. புத்த மதத்தின் தாயகமாகப் பார்க்கப்பட்டது.

13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு சாஞ்சியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. கி.பி.1818-ல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912-ல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.

சாஞ்சியில் நிறைய ஸ்தூபிகள் இருந்தாலும் மூன்று ஸ்தூபிகள் மிகவும் பிரபலமானவை. அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி பிரம்மாண்டமானது. 215 அடி உயரமுள்ள குன்றின மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிலைகளுடன் கூடிய தோரண வாயில்கள் உள்ளன. தெற்குத் தோரண வாயிலில் புத்தரின் பிறப்பு, அவர் வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஒரே கல்லினால் ஆன 42 அடி உயர அசோகத் தூண் நிறுவப்பட்டு இருக்கிறது. உச்சியில் நான்கு திசைகளை நோக்கி நான்கு சிங்கங்கள் இருந்தன. காலப்போக்கில் தூண் உடைந்து விட்டது. உடைந்த பாகங்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்குத் தோரண வாயிலில் இளவரசர் சித்தார்த்தன் அரண்மனை வாழ்வைத் துறந்து செல்லும் காட்சியும் தாயார் மாயா கர்ப்பமுற்றிருந்தபோது கண்ட கனவு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தோரண வாயிலில் புத்தரின் ஏழு அவதாரங்களும் காணப்படுகின்றன. சாரநாத் மான் தோட்டத்தில் புத்தர் பேசிய முதல் பிரசங்கக் காட்சியும் உள்ளது.

இரண்டாவது ஸ்தூபி கி.பி.150-ல் கட்டப்பட்டது. 3அடி விட்டத்தில் 22.5அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியைச் சுற்றி சிறு கைப்பிடிகள் கொண்ட சுவர் போன்ற அமைப்பு உள்ளது. அதில் பெண் தெய்வங்கள், புராணங்களில் காணப்படும் இறக்கைகளுடன் கூடிய சிங்கம், குதிரைத் தலை, மீன் தலையுடன் கூடிய மனித உருவங்களைக் காண முடிகிறது.

மூன்றாவது ஸ்தூபியைச் சுங்க வம்சத்தினர் கட்டினர். புத்தருடைய சீடர்களின் நினைவுச் சின்னங்கள் இந்த ஸ்தூபியில் உள்ளன. இந்தியாவில் காண வேண்டிய முக்கியமான இடங்களில் சாஞ்சியும் ஒன்று.

தொடர்புக்கு:

mangai.teach@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x