

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்கள் பற்றிய தெளிவு எனக்கு இல்லை. தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினருக்குப் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ஆண்டு விழாவிற்குத் தேவையான புத்தகங்களை வாங்கிய பின் எனக்குத் தேவையான, குறைவான பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மட்டுமே வாங்கினேன். நான் வாங்கிய புத்தகங்களில் இரண்டு மூன்று பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்து விடுவது வழக்கம்.
என் கணவர் புத்தக விரும்பி. புத்தகங்களை வாசிப்பதோடு அந்தப் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் என்னிடம் கூறுவார். அப்படியும் நான் படிக்கத் தொடங்கவில்லை. மாறாக, ஒவ்வொரு வருடமும் புத்தகக் காட்சியில் தபால் தலை சேகரிப்பதுபோல் பிடித்த புத்தகங்களை வாங்கிச் சேகரித்தேன். அந்த வரிசையில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எனப் பல நூல்கள் என் வீட்டு அலமாரியை அலங்கரித்தன.
சில புத்தகங்கள் தனக்கான வாசகரைத் தேடி இரவல் சென்றுவிடுவதும் உண்டு. மற்ற புத்தகங்கள் என்னை வாசகராக மாற்ற முயற்சி செய்வதுபோல் எனக்குத் தோன்றும்.
புத்தகங்களை வாங்கிச் சேகரித்து மட்டுமே வைத்துக்கொண்டிருந்த நான், வாசிப்பைத் தொடங்கக் காரணம் தஞ்சையின் முதன்மைக் கல்வி அலுவலர் ஆரம்பித்த ‘வாசிப்பை நேசிப்போம்’ புலனக்குழு (வாட்ஸ் அப் குழு). அக்குழுவில் இணைந்து மற்ற ஆசிரியர்களைப் போல நானும் புத்தக வாசிப்பை அதிகரிப்பதற்காகச் சிறிய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். நா. பார்த்தசாரதி எழுதிய 700 பக்கங்கள் கொண்ட ‘மணி பல்லவம்’ நாவலைத் துணிந்து படிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் படித்து முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவில்லை. அருமையான கதை. அதிக பக்கங்கள் கொண்ட நாவலை வெற்றிகரமாகப் படித்த கர்வத்துடன் வலம்வந்தேன்.
பிறகு புலனக்குழு வாயிலாகப் பல்வேறு எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்க எஸ். ராமகிருஷ்ணன், தொ.பரமசிவன், கி.ரா, சு.வெங்கடேசன் எனப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் அது அடுத்த புத்தகத்தை நாட வைத்தது. புத்தகச் சேகரிப்புப் புழு என்கிற நிலை மாறி வாசிப்பை நேசித்துச் சுவாசித்த நான் பட்டாம்பூச்சியாக மாறி வானில் பறக்க, வாசிப்பு சிறகைக் கொடுத்தது.
என் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பின் பயனை அறியச் செய்து, நூல்களையே ஒவ்வொரு முறையும் பரிசளித்தேன். மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின்போது பள்ளி நூலகத்திற்கு நூல்களைப் பரிசளிக்க ஊக்குவித்தேன். மாணவர்கள் பல்துறை அறிவு பெற புத்தக வாசிப்பை மேம்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளேன்.
து.செலின், தஞ்சாவூர்.