தமிழ் இனிது 26 - ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது சரியா?

தமிழ் இனிது 26 - ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது சரியா?
Updated on
2 min read

‘அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ‘உயர்ந்து’ இந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது’ என்கிறது ஒரு செய்தி!

உயர்ந்துவிட்டதும் கூடிவிட்டதும்! - ‘உயர்ந்து’ என்பதன் எதிர்ச்சொல் ‘தாழ்ந்து’ தானே? ‘குறைந்து’விட்டதன் எதிர்ச்சொல் ‘கூடிவிட்டது’ தானே?

சாவில் ‘உயர்வு-தாழ்வு’ இருக்கிறதா என்ன! எண்ணிக்கையைச் சொல்லும்போது கூடுதல், குறைதல் என்பதே தமிழ் மரபு. ஆனால், ‘உயர்ந்து’விட்டது என்று, சாவைக்கூட ‘உயர்த்திய சமத்துவர்’ யாரோ!

எண்ணிக்கை கூடியது / குறைந்தது என்பதே சரியானது.

சிலவும் செலவும்: சிலவா? செலவா? ‘வரவு சிலவுச் சிட்டை’ என்கிறார்களே.

செல்-செல்வது-பயணம். இலங்கைப் பயணம் பற்றி திரு.வி.க. எழுதிய நூல், ‘இலங்கைச் செலவு’.

செல் - செலவு - செலவழிப்பது - பணம். ‘ஓரிடம் தனிலே, நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே’ என உடுமலை நாராயண கவி சொன்னது எவ்வளவு உண்மை! நிலையாக யாரிடமும் நின்றுகொண்டே இருக்காமல் சென்றுகொண்டே இருப்பது செலவுதானே.

ஆக, செலவு என்பதே சரியான சொல். ‘சிலவு’ என்பது தவறாகப் புழங்கும் சொல். ‘அது எப்படிங்க, தவறான சொல் இவ்வளவு காலம் புழக்கத்தில் இருக்கும்?’என்று கேட்போர்க்கு ஒரு குறளும் ஒரு குறுங்கதையும்:

சிலர் மனிதரைப் போலவே இருப்பார்கள், ஆனால் மனிதர் அல்லர்! ‘மக்களே போல்வர் கயவர்’ என்னும் வள்ளுவர், மக்களைப் போலவே இருக்கும் கயவர்களின் ஒப்புமையை வியந்து எழுதுகிறார் (குறள்-1071).

சார்லி சாப்ளின் போல மாறுவேடம் போடும் போட்டியில் கலந்துகொண்ட உண்மையான சாப்ளி னுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததாம். குறள் எவ்வளவு உண்மையானது! உண்மையை விட, பொய் அழகானது!

அன்றியும் இன்றியும்: அன்றி - அல்லாமல், இன்றி - இல்லாமல் என்று பொருள். ‘குதிரை கீழே தள்ளியதன்றி, குழியும் பறித்ததாம்’ - பழமொழி.

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதும் தவறு. அறிவின்றி வேலை கிடைக்காது, அன்பின்றி வாழ முடியாது என ‘இன்றி’ எனும் சொல்லே இன்றியமையாத தன்மையைக் குறிக்கும். தமிழ்ச் சொற்களைப் பொருளின்றிப் பயன்படுத்துவது தவறன்றி வேறல்ல.

திருவளர் செல்வன் - திருநிறை செல்வி: தமிழர் திருமண நிகழ்வு நுட்பங்களில் ஒன்று: திருமண விருந்தில் அல்லது கையில் தரும் பையில் தேங்காய், பழம் / நல்லதொரு நூலுடன், – கோவில்பட்டிக் கடலை உருண்டை போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!

இதே நுட்பம் திருமண அழைப்பிதழில்கூட உண்டு. மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’ செல்வன்/செல்வி என்று போட்டால், ‘இந்த வீட்டில் இவரின் இளையோர் - திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு’ என்று பொருள். திரு வளர வாய்ப்புள்ளது.

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால், ‘இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி. இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை’ என்று பொருள். திரு நிறைவடைந்தது!

திருவளர்ச்செல்வன், திருநிறைச் செல்வி என்று பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

தொடரும்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in