Published : 12 Jan 2018 09:33 AM
Last Updated : 12 Jan 2018 09:33 AM

காதல் படங்களுக்கும் ஆடை வடிவமைப்பு முக்கியம்: ‘அதிர்ஷ்ட லட்சுமி’ மகேஸ்வரி நேர்காணல்

ஜீ

தமிழ் சேனலில் ‘அதிர்ஷ்டலட்சுமி’ ரியாலிட்டி கேம் ஷோவை தொகுத்து வழங்கிவரும் மகேஸ்வரி, யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

‘‘சின்னத்திரை, சினிமா என்று 14 ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு பணியாற்றும் வாய்ப்புகளே அமைந்தன. கேமராவுக்கு பின்னணியிலும் வேலை பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி’’ என்று தொடங்குகிறார் மகேஸ்வரி.

ஆடை வடிவமைப்புக்கு பயிற்சி, அனுபவம் தேவைப்படுமே..

பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருப்பதால், ஒரு கட்டத்துக்கு மேல் நானே என் ஆடைகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அந்த அனுபவம் மெல்ல என் தோழிகளின் ஆடைகளுக்கும் தாவியது. இப்போது ஜீ தமிழ் சேனலில் நான் தொகுத்து வழங்கும் ‘அதிர்ஷ்ட லட்சுமி’, மற்றும் ‘சரி கம ப’ நிகழ்ச்சிகளுக்கும் ஆடை வடிமைப்பாளராக பயணத்தை தொடர்கிறேன். அது சினிமா வரை அழைத்து வந்திருக்கிறது.

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பணியாற்றும் அனுபவம் பற்றி..

‘கிரகணம்’ பட இயக்குநர் இலன் உருவாக்கத்தில் தயாராகும் படம் இது. முழுக்க முழுக்க காதல் பொழுதுபோக்கு பின்னணி களம். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு, இசை, ‘பிக் பாஸ்’ புகழ் ஹரீஷ், ரைஸாவின் நடிப்பு என்று ட்விட்டரில் ஏகத்துக்கும் டிரெண்டாகி வருகிறது. சரித்திர காலப் படங்கள் போல, காதல் களம் கொண்ட படங்களுக்கும் ஆடை வடிமைப்புக்கு பெரிய பங்களிப்பு தேவை.

விஜய் டிவியில் ‘புதுக்கவிதை’, ‘தாயுமானவன்’ தொடர்களைத் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தவில்லையே?

நடிக்கக் கூடாது என்ற எண்ணம் இல்லை. கிரியேட்டிவிடியில் கவனம் செலுத்தலாமே என்ற ஆர்வம் வந்தது. இந்தப் பணியைத் தேர்வு செய்த வகையில், உண்மையில் நான் அதிர்ஷ்ட லட்சுமி.

சென்னை 28 - இரண்டாம் பாகம் படத்துக்கு பிறகு வெள்ளித் திரையிலும் உங்களைப் பார்க்க முடியவில்லை.

நல்ல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று அதுசார்ந்த தேடலில் இறங்கியுள்ளேன். அதற்கிடையில், சவாலான, புதுமையான விஷயத்தை தொட வேண்டும் என்று ஆடை வடிமைப்பில் ஈடுபட்டேன். ஜீ தமிழ் சேனலில் ‘காமெடி கிங்ஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியையும் கையில் எடுத்துள்ளேன். அது இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

ஒரு நிகழ்ச்சிக்குப் புறப்படும்போது, அதற்கேற்ற உடையைத் தேர்வு செய்து அணிவது போன்றதுதானே, திரைப்பட ஆடை வடிவமைப்பு?

பார்ட்டி வேர், ஈவ்னிங் வேர் என்று நிகழ்ச்சியின் மனநிலைக்கு ஏற்ப ஆடை அணிகிறோம். சினிமா, ரியாலிடி நிகழ்ச்சிகள் அப்படியல்ல. சந்தோஷக் காட்சி என்றால், கூடுதல் கலர், சோகக் காட்சி என்றால் டார்க் கலர் என்று நிறைய பார்க்க வேண்டும். தவிர, எனக்கு மட்டும் பிடித்தால் போதாது. இயக்குநர், கேமராமேன், கலை இயக்குநர், நடிகர், நடிகை வரை அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நம் கிரியேட்டிவிடி அமைவது முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x