Last Updated : 05 Jul, 2014 09:00 AM

 

Published : 05 Jul 2014 09:00 AM
Last Updated : 05 Jul 2014 09:00 AM

ரியல் எஸ்டேட்: தாம்பரம் முதல் வேளச்சேரி வரை

சில வருடங்களுக்கு முன்பு சென்னையின் நுழைவாயிலாக இருந்தது தாம்பரம். ஆனால் இன்று சென்னையின் ஒரு அங்கமாகவே தாம்பரம் மாறிவிட்டது. தாம்பரத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக முளைத்துக் கொண்டிருக்கின்றன.

தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான பகுதிகளில் வளர்ச்சி எப்படி இருக்கிறது, அங்கு குடியிருப்புகள் எப்படி இருக்கின்றன, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து அறிய இப்பகுதியில் உலா வந்தோம்.

தாம்பரம் பிஸியான பகுதியாக இருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல பரபரப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் அதற்கு மாறாக, கட்டுமான பணிகளுக்காகச் செல்லும் வாகனங்கள் பரபரப்பாக அவ்வப்போது சீறியபடியும், சிமென்ட் கலவை வாகனங்கள் உறுமியபடியும் சென்று கொண்டுதானிருக்கின்றன.

சேலையூர் பகுதியினுள் சென்றபோது திரும்பிய இடமெல்லாம் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அந்தப் பகுதியில் சாலைகள், கடைகள் என அனைத்திலும் கிராமத்தின் அடையாளம் இருந்தாலும் கட்டுமான பணிகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன.

தனி வீடுகள் மட்டுமல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அதிகமாகக் கட்டப்படுகின்றன.

அங்கிருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரியிடம் பேச்சுக்கொடுத்தோம். சேலையூர் வட்டாரப் பகுதியில் இரண்டு படுக்கை அறை (800 முதல் 900 சதுர அடி) இருக்கும் அடுக்கு மாடி வீடு சுமார் 40 லட்ச ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. நிறைய நிறுவனங்கள் வீடுகள் கட்டப்பட்டுவந்தாலும் இன்னும் சில வீடுகள் விற்பனையாகாமல் இருக்கிறது என்றார்.

ஒரு படுக்கை அறை வீடு கட்டினால் நிறைய நபர்கள் வாங்குவார்களே என்று கேட்டதற்கு, “ஒரு படுக்கை அறை வீட்டை மக்கள் விரும்புவதில்லை. அப்படியும் சில வீடுகள் கட்டி இருக்கிறோம். அவையும் இன்னும் முழுமையாக விற்கவில்லை” என்றார்.

இந்தப் பகுதியில் 28 லட்ச ரூபாய்க்கு (550 முதல் 600 சதுர அடி) ஒரு படுக்கை அறை வீடுகள் விற்கப்படுகின்றன.

நடுத்தர மக்கள் ஒரு படுக்கை அறை இருக்கும் வீடுகளை விரும்புவதில்லையா அல்லது அந்த வீடு கூட வாங்குவதற்குப் பொருளாதார சூழல் இடம்தரவில்லையா என்பது கேள்விக்குறிதான்.

அடுத்து அங்கிருந்து செம்பாக்கம் பகுதிக்குச் சென்றோம். ஓரளவுக்கு சேலையூர் போல இங்கு கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை. இந்தப் பகுதியில் ஓரளவுக்கு வீடுகள் அதிகமாகவே இருந்தன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருந்தாலும் 4 மாடிக்கு மேல் எங்கும் உயரமான கட்டிடங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

தாம்பரம் வேளச்சேரி முக்கிய சாலையில் கட்டுமானப் பணிகள் பெரிதாக நடக்கவில்லை. சந்தோஷபுரத்தில் ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது.

அதற்கடுத்து வேங்கைவாசல் செல்லும் சாலையில் விவசாய நிலங்களைக் கூட பார்க்க முடிந்தது. ஆனால் கட்டுமான பணிகள் ஆங்காங்கேதான் நடைபெற்றன.

சேலையூர் பகுதியில் அதிகமாக இருந்த கட்டுமானப் பணிகள் அந்த வழியில் செல்லச்செல்லக் குறைந்துகொண்டே இருக்கிறது.

பள்ளிக்கரணை சென்னையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது, குறிப்பாக காமகோடி நகர் பகுதியில் வில்லாக்கள், புதிய வீடுகள், சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் என முழுமையான வளர்ச்சி அங்கு இருக்கிறது.

இந்தச் சாலையில் குடியிருந்தால் ஐ.டி. நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கும் செல்லலாம். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லாம்.

ஆனால் இந்தச் சாலையில் எந்தப் பெரிய ஐ.டி. பார்க்குகளோ, பெரிய ஐ.டி. ஆட்டோ நிறுவனங்களோ இல்லை. ஒரு வேளை எதாவது ஒரு நிறுவனம் இங்கு அமையும்போது இந்த இடத்தின் மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம்.

மேலும் ரயில் வசதிக்கு வேளச்சேரி செல்ல வேண்டும் இல்லை என்றால் தாம்பரம் செல்ல வேண்டும். தாம்பரம் வேளச்சேரியை ரயில் மூலம் இணைக்கும் பட்சத்தில் இந்த இடத்தின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும். மக்கள் புழக்கமும் அதிகரிக்கும்.

சேலையூர் பகுதியில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டுவந்தாலும், சாலை வசதி படு மோசம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கூட சிமென்ட் ரோடு போடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பகுதியில் பல இடங்களில் மண் சாலைகள்தான் இருக்கின்றன.

மேலே இருக்கும் அடிப்படை வசதிகளைச் சரி செய்யும் பட்சத்தில் ஓட்டல்கள், ரெசார்ட் வங்கிகள், ஷாப்பிங் மால்கள் எனப் பலவும் வரலாம்.

யாருக்குத் தெரியும் இதெல்லாம் நடக்கும்பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான corridor ஐ.டி. எக்ஸ்பிரஸ் சாலையாகவோ, அண்ணா சாலையாகவோ கூட மாறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x