Last Updated : 09 Jan, 2018 11:00 AM

 

Published : 09 Jan 2018 11:00 AM
Last Updated : 09 Jan 2018 11:00 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

விரிவானது சென்னை மாவட்டம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகாவும் சென்னை மாவட்டத்தின் பெருநகரப்பகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 4 அன்று தொடங்கிவைத்தார். இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னை மாவட்டம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்ஙகள், 16 வட்டங்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, வட சென்னையில் 32 வருவாய் கிராமங்களும், மத்திய சென்னையில் 47 வருவாய் கிராமங்களும், தென்சென்னையில் 43 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்கள் ஜனவரி 4 இரவு வேலைநிறுத்தம் அறிவித்தனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து ஊழியர்கள் 2.5 சதவீத ஊதிய உயர்வைக் கேட்டனர். ஆனால், அரசு தரப்பு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், போக்குவரத்து தொழில்சங்கங்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றன.

30% மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 30 சதவீத மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 142-லிருந்து 177 - ஆக அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ஜனவரி 1 அன்று தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 526 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் 177 கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் மொத்தமிருக்கும் 77,509 இடங்களில் 12,399 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உத்திரபிரதேசத்தில் 169 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்தபோவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 1 அன்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். 2002-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கிவந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால், அமெரிக்கா தற்காலிகமாக 25.5 கோடி அமெரிக்க டாலர் நிதியை நிறுத்தியிருக்கிறது.

புதிய தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகர்

நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ (RAW) வின் முன்னாள் தலைவர் ராஜிந்தர் கன்னா தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகராக ஜனவரி 3 அன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு இவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 2014 டிசம்பரில் இருந்து இரண்டு ஆண்டுகள் ‘ரா’வின் தலைவராகச் செயலாற்றிய இவர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமைவகித்து இருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் கீழ் இவர் செயல்பட இருக்கிறார்.

எட்டு முதன்மைத் துறைகளில் 6.8% வளர்ச்சி

இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, உரம், இயற்கை எரிவாயு, சிமெண்ட், சுத்திகரிப்புத் தொழில், கச்சா எண்ணெய், மின்சாரம் ஆகிய எட்டு முதன்மைத் தொழில்துறைகள் 2017 நவம்பர்வரை 6.8 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ தரவுகளை ஜனவரி 1 அன்று வர்த்தக, தொழில் துறை வெளியிட்டிருக்கிறது. இதில் சிமெண்ட் 17.3 சதவீதமும், இரும்பு 16.6 சதவீதமும் சுத்திகரிப்புத் தயாரிப்புகள் 8.2 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத் தொழில் துறை உற்பத்தியில் இந்த எட்டுத் துறைகளின் உற்பத்தியின் அளவு 41 சதவீதம் என்பதால் இந்த வளர்ச்சி தொழில்துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வெளியுறவுத் துறை செயலர்

சீனாவுக்கான முன்னாள் தூதர் விஜய் கேஷவ் கோகலே, நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜனவரி 1 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது பொருளாதார உறவுகளுக்கான செயலரான இவர், ஜனவரி 28 அன்று வெளியுறவுத் துறை செயலராகப் பதவியேற்கஇருக்கிறார். தற்போதைய வெளியுறவுத் துறை செயலர் எஸ். ஜெய்ஷங்கரின் பதவிக் காலம் முடிவடைவதால், மத்தியப் பணியாளர் அமைச்சகம் இவரைப் புதிய செயலராக அறிவித்து இருக்கிறது. டோக்லம் பிரச்சினையின்போது பெய்ஜிங்கில் நடைபெற்ற வெளியுறவுப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார் .

அணுசக்தித் தளங்கள் பட்டியல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அணுசக்தித் தளங்களின் பட்டியல் பகிர்வு நடைமுறை ஜனவரி 1 அன்று நடைபெற்றது. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தத்தின்படி, 1991-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நடைமுறையை இரண்டு நாடுகளும் பின்பற்றிவருகின்றன. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தம் 1988-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளும் அணுசக்தி வசதிகளைப் பயன்படுத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ பரஸ்பரம் சேதங்களை ஏற்படுத்தமுடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x