Last Updated : 02 Jan, 2018 01:02 PM

 

Published : 02 Jan 2018 01:02 PM
Last Updated : 02 Jan 2018 01:02 PM

வரலாறு தந்த வார்த்தை 16: மறுபடியும் முதல்ல இருந்தா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எல்லாம் முடிந்து சற்று நிமிர்ந்தால், நடிகர் ரஜினி காந்த் மீண்டும் தன் ரசிகர்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி இப்படி ஒவ்வொரு முறையும் தேதி சொல்லி, தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நிலைப்பாட்டைச் சொல்லாமல் நழுவுகிறார். பிறகு, ‘அரசியல் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்’ என்று சொல்கிறார்.

இந்நிலையில், டிசம்பர் 31 அன்று அரசியலில் வருவது நிச்சயம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், எந்த கட்சி, என்ன கொள்கை என்று எதுவும் சொன்னபாடில்லை. ‘ஸ்.. ஹப்பா… முடியல… திரும்பவும் முதல்ல இருந்தா?’ என்கிறீர்களா? 

இங்க இருக்கு நம்ம விஷயம்… இப்போ கேட்டீங்களே ‘திரும்பவும் முதல்ல இருந்தா?’ என்று. இதுபோல, மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் விளக்குவதற்கு ஒரு சொற்றொடர் இருக்கிறது. அது: ‘Back to square one’. 

வரைபடத்தில் விளையாட்டு

1930-ம் ஆண்டு இந்தச் சொற்றொடர் பிறந்தது என்று ‘உதைத்து’ சொல்லலாம். காரணம், அப்போதுதான் கால்பந்தாட்டப் போட்டிகளின் வர்ணனையை வானொலியில் ஒலிப்பரப்பத் தொடங்கியது பி.பி.சி. வர்ணனையின்போது பந்து யாரிடம், எங்கு இருக்கிறது என்பதைப் பற்றிச் சொன்னால்தான், வர்ணனையைக் கேட்பவருக்கு ‘மேட்ச்’ புரியும்.

அதை எப்படிச் சொல்வது என்று வர்ணனையாளர்களுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே, அவர்கள், கால்பந்தாட்ட வரைபடம் ஒன்றை வரைந்தார்கள். அதில் 1, 2, 3 என்று சில நம்பர்களை வைத்துக்கொண்டு, எந்த எண்ணிடம் அந்தப் பந்து இருக்கிறது என்பதைச் சொன்னவுடன் நேயர்கள் புரிந்துகொள்வார்கள்.  

வானொலியில் கால்பந்தாட்ட கமெண்ட்ரி கேட்கும் நேயர்களுக்காக, பி.பி.சி. வானொலி நடத்திவந்த ‘தி ரேடியோ டைம்ஸ்’ என்ற இதழில், அந்த வரைபடம் வெளியிடப்பட்டு வந்தது. வானொலியில் கால்பந்தாட்ட கமெண்ட்ரி கேட்கும்போதெல்லாம், நேயர்கள் அந்த வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டு ‘மேட்ச்’ எப்படி நடக்கிறது என்பதை விளங்கிக்கொள்வார்கள்.  

அந்த வரைபடத்தின்படி, ‘ஸ்கொயர் ஒன்’ என்பது, ஒரு அணியின் கோல்கீப்பர் இருக்கும் பகுதி. எதிரணியிடமிருந்து கோல்போஸ்ட்டுக்கு அருகில் வரும் பந்தைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் தன் அணியிடம் பந்தை, கோல்கீப்பர் முன்னோக்கிச் செலுத்தப் போகிறார் என்று கமெண்ட்ரி கொடுப்பதற்கு ‘பேக் டு ஸ்கொயர் ஒன்’ என்றார்கள் பி.பி.சி., வர்ணனையாளர்கள். பிற்காலத்தில், ஒரு விஷயத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதை விளக்குவதற்காகவும் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x