Published : 16 Jan 2018 11:40 AM
Last Updated : 16 Jan 2018 11:40 AM

கேள்வி நேரம் 18: வாசிப்பு உலகம்

1. ஆங்கிலத்தில் ‘புக்’ என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் பேரரசர் ஆல்ஃபிரெட். அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் அந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது. கி.பி. 849-899 வரை வாழ்ந்த அவர், தொடக்கக் கல்வியை லத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் வழங்க வலியுறுத்தியவர். ‘ஆல்ஃபிரெட் தி கிரேட்’ ஆட்சி செய்த பகுதி எது?

2. புத்தகங்களின் தீவிர வாசகர் அல்லது புத்தகங்களைச் சேகரிப்பவர் ஆங்கிலத்தில் bibliophile என்று அழைக்கப்படுகிறார். சாதாரணமாகச் சொல்வதென்றால் புத்தகப்புழு. சரி, பழைய புத்தகங்களின் வாசனையை நுகர்வதை ஒரு பழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு என்ன பெயர்?

3. உலகில் அதிகம் விற்பனையான புத்தகமாக பைபிள் கருதப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் பெரிதாக மதிக்கப்படும், அடிப்படை விதிகளைக் கூறும் புத்தகத்தை பைபிள் என்ற அடைமொழியால் அழைப்பது உண்டு. கின்னஸ் சாதனைப் புத்தகக் கணக்குப்படி 1815 முதல் 1975 வரையிலான 160 ஆண்டுகளில் எத்தனை பைபிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?

4. உலகில் இதுவரை அதிகம் படிக்கப்பட்ட மூன்று புத்தகங்களில் பைபிளும் ஹாரி பாட்டர் வரிசை நூல்களும் உள்ளன. அச்சு வடிவிலான பைபிள் பல மொழிகளில், பல நூற்றாண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஹாரி பாட்டர் நூல் வரிசை கடந்த நூற்றாண்டின் இறுதியில் அதிகம் விற்பனையான புத்தகம். இந்த இரண்டைத் தவிர அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் எது?

8. உலகில் அதிகம் விற்பனையான கதை சாராத நூல் பைபிள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகும் படைப்பாக்க நூல் அல்லது நாவல் எது?

5. பிரிட்டனில் உள்ள பிரபலப் பல்கலைக்கழகம் ஒன்றின் பெயரால் அமைந்தது இந்தப் பதிப்பகம். 1534-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம் 484 ஆண்டுகளைக் கடந்து 500-ம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் பழமையான இந்தப் பதிப்பகத்தின் பெயர் என்ன?

6. புத்தகம் மற்றும் பருவ இதழ்கள் வழங்கும் சட்டம் 1954-ன் படி (Delivery of Books and Periodicals Act, 1954) இந்தியாவில் பதிப்பிக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தையும் எந்த ஊரில் அமைந்துள்ள தேசிய நூலகத்துக்கு அனுப்ப வேண்டும்?

7. மத்திய காலத்தில் ஐரோப்பாவில் சங்கிலி நூலகங்கள் இருந்தன. இந்த நூலகங்களில் ஒவ்வொரு புத்தகமும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும். விருப்பமுள்ளவர்கள் புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டு, மீண்டும் அங்கேயே வைத்துவிட்டுச் செல்லவும் அரிய புத்தகங்கள் காணாமல் போவதைத் தடுக்கவும் இந்த ஏற்பாடு. எந்த நூற்றாண்டுவரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது?

9. இங்கிலாந்தில் 1450-ம் ஆண்டிலிருந்து தொடக்கக் கல்விப் புத்தகங்கள், அடிப்படைக் கல்விப் புத்தகங்கள் hornbook என்றழைக்கப்பட்டன. நவீனக் கல்வி சாதனங்கள் வருவதற்கு முன்பு இவையே தொடக்கக் கல்வி கற்றல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. புத்தகங்கள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஓர் இதழ் அல்லது ஒரே பக்கமாக இவை இருந்தன. ஆங்கில அகரவரிசையோ மதம் சார்ந்த கருத்துகளோ எழுதப்பட்டிருந்தன. இவை ஏன் ‘ஹார்ன் புக்’ எனப்பட்டன?

10. இன்றைக்கு அதிகம் விற்கும் புத்தகங்கள் ‘பெஸ்ட் செல்லர்’ என்று வர்ணிக்கப்படுவதை அறிந்திருப்போம். முதன்முறையில் அப்படி வர்ணிக்கப்பட்ட புத்தகம் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் பிரவுன் எழுதிய ‘ஃபூல்ஸ் ஆஃப் நேச்சர்’ புத்தகமே. இந்தப் புத்தகம் எந்த ஆண்டு இப்படி வர்ணிக்கப்பட்டது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x