Published : 29 Jan 2018 11:47 AM
Last Updated : 29 Jan 2018 11:47 AM

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ: நிறுவனங்களின் ஆர்வம் குறைகிறதா?

ந்தியாவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி மிகவும் பிரபலம். சர்வதேச அளவில் இந்த கண்காட்சிக்கு அங்கீகாரம் உண்டு. இதனாலேயே வெளிநாட்டு நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்பதை கவுரவப் பிரச்சினையாகக் கருதி தொடர்ந்து பங்கேற்கின்றன. பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி மொத்தம் 47,500 சதுர மீட்டர் பரப்பளவிலான அரங்கில் நடைபெறுகிறது. இதில் வர்த்தகர்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள 4,750 சதுர மீட்டர் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்வம் குறைகிறதா?

கார் தயாரிப்பு நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் பிரபலமானவையாகும். இவற்றில் 7 நிறுவனங்கள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்கவில்லை. இதைப் போல லாரி உள்ளிட்ட கனரக வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 3 நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. இதைப் போல இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் திகழும் 2 நிறுவனங்களும் இதில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

2016-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பஜாஜ் ஆட்டோ மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. இவ்விரு நிறுவனங்களும் இம்முறையும் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன. இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து இரண்டு முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கண்காட்சியில் பங்கேற்பதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டியிருப்பதும், புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஏதும் இல்லாததாலும் பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

இணைய யுகத்தில் புதிய அறிமுகங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யமூட்டுபவையாக அமையவில்லை. இதனால் நிறுவனங்கள் இதுபோன்ற கண்காட்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். முந்தைய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தங்களது எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்திய நிறுவனங்கள் சிலவும் இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை.

பங்கேற்காத சர்வதேச நிறுவனங்கள்

இதில் பங்கேற்காத நிறுவனங்கள் பெரும்பாலும் சர்வதேச அளவில் பிரபலமானவையாக திகழ்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்நிறுவனத் தயாரிப்புகளின் சந்தை அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளன. இத்தகைய நிறுவனங்கள்தான் இக்கண்காட்சியில் பங்கேற்பதை தவிர்ப்பதாக சிலர் குறிப்பிட்டனர்.

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் மட்டும் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. அதேசமயம் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களான ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் உள்ளிட்டவையும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி, ஸ்கானியா, மான் டிரக்ஸ் உள்ளிட்டவையும் இக்கண்காட்சியில் பங்கேற்கவில்லை. ஃபோர்டு, நிசான், ஃபியட் கிரைஸ்லர் உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

டிரக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வோல்வோ, டெய்ம்லர் ஆகிய நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கவில்லை. டெய்ம்லரின் இந்திய நிறுவனமான பாரத் பென்ஸ் இந்த கண்காட்சி ஒன்றில் கூட இதுவரை பங்கேற்றது கிடையாது.

அதிக செலவு

கண்காட்சியில் பங்கேற்பதற்கு குறைந்தபட்சம் 30 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. இதில் வாடகை கணிசமான தொகையாக இருக்கிறது. ஆனால் இந்த அளவு செலவு செய்வதற்கு உரிய பலன் கிடைப்பதில்லை என கண்காட்சியைத் தவிர்க்கும் நிறுவனங்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதை விடுத்து நாடு முழுவதும் சாலை வழி கண்காட்சி நடத்தினால்கூட இந்த அளவுக்கு செலவு பிடிக்காது என்றும் தங்கள் தயாரிப்புக்குரிய மக்களை தேர்வு செய்து சென்றடைய முடியும் என இத்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

முன்னணி நிறுவனங்கள் பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாக டொயோடா கிர்லோஸ்கர் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் குறிப்பிட்டார். ஆட்டோமொபைல் துறை சார்ந்து மத்திய அரசு எடுக்கும் உடனடி முடிவுகள், எந்த திசையில் இத்துறை செல்லும் என்ற குழப்பம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களால் புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதுவும் நிறுவன பங்கேற்பு குறைவதற்கு முக்கியக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

உலகின் மிக முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதைக் காண்பதற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவதும் வருத்தமளிக்கிறது என்று கிர்லோஸ்கர் கூறினார்.

உலகின் பிற நாடுகளில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகள் ஒவ்வொரு முறையும் கூடுதல் வரவேற்பைப் பெறுகின்றன. டெட்ராய்டில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சி இதற்கு சிறந்த சான்று. ஆனால் மிகப் பெரிய வாகன சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கண்காட்சியில் ஆர்வம் குறைவது துரதிருஷ்டம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x