Published : 06 Apr 2014 01:00 PM
Last Updated : 06 Apr 2014 01:00 PM

களம் காணும் கலகக் குரல்கள்!

சோனி சோரியும், தயாமணி பர்லாவும் நிச்சயம் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பழங்குடி களுக்கு உதவியதற்காகச் சிறையில் கொடூரச் சித்திரவதைகளை அனுபவித்த சோனி சோரிக்கும், பழங்குடிகளுக்காகப் போராடியதற்காகப் பல முறை சிறை சென்ற தயாமணி பர்லாவுக்கும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு எதிர்பாராதது தான். அதே நேரம், உரிமைகளுக்கான அவர்களது நீண்ட போராட்டத்தின் ஒரு நீட்சிதான் இந்த வாய்ப்பு.

16-வது நாடாளுமன்றத் தேர்தல் பல வகைகளில் வேறுபட்டது. இதில் குறிப்பிடத்தக்கது, இந்த முறை போட்டியிடும் பெண்கள். அதிலும் சமூக மாற்றத்துக்காகப் போராடிய பல பெண்கள் முதன்முறையாகத் தேர்தல் களம் காண்கிறார்கள்.

நர்மதைப் பேரணைத் திட்ட எதிர்ப்புப் போராளியும், ஏழைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்து வருபவருமான மேதா பட்கர், மும்பை வடகிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். தலித், பெண்கள் மேம்பாட்டுக்காகப் போராடிவரும் மாற்று நோபல் பரிசு பெற்ற ரூத் மனோரமா, பெங்களூர் தெற்கு தொகுதியிலும், பழங்குடி பத்திரிகையாளரும் நிலஉரிமைப் போராளியுமான தயாமணி பர்லா, ஜார்கண்ட் மாநிலம் குந்தித் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

பள்ளி ஆசிரியையும் பழங்குடிப் போராளியுமான சோனி சோரி சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரிலும், போபால் விஷ வாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வரும் ரச்சனா திங்க்ரா போபால் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான சாரா ஜோசப் கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களில் ரூத் மனோரமா தவிர்த்த மற்ற ஐவரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

அரசியல் என்பது சாக்கடை என்று குற்றம்சாட்டிவிட்டுத் தள்ளி நிற்காமல், தங்களைப் போன்று மாற்றத்தை விரும்புபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாற வேண்டும், அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் தாங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவர்கள் அடி எடுத்து வைத்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றம்.

இவர்களை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் வலுவான அரசியல் பலம் கொண்டவர்களாகவும், பணபலம் மிக்கவர்களாகவும், ஏற்கெனவே அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களாகவும் இருக்கலாம். ஆனால், பெண் இனத்துக்கே உரிய ஆக்க பூர்வமான மாற்றங்களை உருவாக்க விழையும் பண்புகளை, இந்தப் பெண்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். தேர்தல் அரசியலிலும் அது தொடரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சித்திரவதைக் கூடத்திலிருந்து

"சிறைக்குச் சென்றிருக்காவிட்டால், அரசியலில் கால் பதிப்பது பற்றி சிந்தித்தே இருக்க மாட்டேன்" என்கிறார் சோனி சோரி.

மாவோயிஸ்ட்களின் களமான தாண்டேவாடாவைச் சேர்ந்த பழங்குடி பள்ளி ஆசிரியையான சோனி சோரி, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கொடூரச் சித்திரவதைகளை அனுப வித்தவர். கடந்த மாதம்தான் ஜாமீனில் விடுதலையானார். ஆனால், அவருடைய கணவர் அனில் ஃபுதானே, சிறையிலேயே இறந்துவிட்டார்.

மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று சொல்லித்தான் சோனி சோரி கைது செய்யப்பட்டார், ஆனால் அவருடைய தந்தையின் காலில் அதே மாவோயிஸ்ட்கள்தான் சுட்டுள்ளனர்.

உண்மையில், நக்சல்கள் என்ற முத்திரையுடன் சாதாரணப் பழங்குடிகள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுக்கு உதவியது மட்டும்தான் சோனியின் பங்களிப்பு.

நிலஉரிமைப் போராளி

கனிம வளத்துக்காகத் தற்போது சூறையாடப்பட்டு வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தயாமணி பர்லா. முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், டீக்கடை வைத்திருக்கிறார். பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு ஆலையான ஆர்செலர் மிட்டலின் இரும்பு ஆலைக்கு 11,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், நக்ரியில் ஐ.ஐ.எம்., இந்தியச் சட்டப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காகத் தரிசு நிலங்கள் இருக்கும் நிலையிலும், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியதற்கு எதிராகவும், தோர்பாவில் உள்ள கோயல் கரோ அணையால் 53,000 பேர் இடம்பெயர்க்கப்படுவதற்கு எதிராகவும் தயாமணி போராடியுள்ளார்.

களப் போராளி

தலித் உரிமைகளுக்காக மட்டுமில்லாமல், பெண் உரிமைகள், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடியதால் மாற்று நோபல் பரிசான ‘ரைட் டு லைவ்லிஹுட்' விருதைப் பெற்றவர் ரூத் மனோரமா.

பெங்களூர் தெற்குத் தொகுதியில் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் அனந்த் குமாரையும், இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் நந்தன் நிலகேனியையும் எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக இவர் போட்டியிடுகிறார். ‘‘பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் இறங்கி மக்களுக்காகப் போராடி இருக்கிறேன். அதனால், யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை" என்கிறார்.

மறுக்கப்பட்ட நீதி

போபால் விஷவாயுக் கசிவில் உயிர் பிழைத்தோருக்காகப் போராடிவரும் ரச்சனா திங்க்ரா, போபால் தகவல் மற்றும் செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர். இவர் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார். போபால் விஷவாயு விபத்து நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகியும்கூட, மத்தியப் பிரதேசத்திலும் மத்தியிலும் ஆட்சிகள் மாறினாலும் விபத்தில் உயிர் பிழைத்தோருக்கு முறையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. போபால் மண்ணை நச்சாக்கிவரும் விஷ வேதிப்பொருள்களும் அகற்றப் படவில்லை. இவற்றை முன்வைத்தே இந்தத் தேர்தலில் அவரது பிரசாரம் அமைந்திருக்கிறது.

இவர்களைப் போன்று சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயல்பாட்டாளர்கள் நாடாளு மன்றம் சென்றால், அது மக்கள் இயக்கங் களின் குரலைச் சரியான தளத்துக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்கள்

இதுதான் முதல் தேர்தல் என்பதாலும், லஞ்சத்துக்கு எதிராகப் போராடுவதாலும் ஆம் ஆத்மி கட்சி, படித்தவர்களிடம் குறிப்பிடத்தக்க அளவு நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. ஆனால், பெண் உரிமை உட்பட பல்வேறு சமூகநீதி சார்ந்த விஷயங்களில், அந்தக் கட்சியின் கொள்கை என்ன என்பது தெளிவில்லாமல் இருப்பது விமர்சனத்துக்குரியதாகக் கருதப்படுகிறது. ரூத் மனோரமா போன்ற களச் செயல்பாட்டாளர்கள், மதச் சார்பற்ற ஜனதாதளம் போன்ற கொள்கை சமரசங்கள் கொண்ட கட்சியில் சேர்ந்துள்ளதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால், "இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும்கூட, அது தோல்வியில்லை. நிறைய மக்களைச் சந்தித்து எனது கருத்துகளையும், எண்ணங்களையும் சொல்ல முடியும். அதேநேரம் அவர்களது பிரச்சினைகளைத் தேர்தல் களத்தில் முன்வைக்க முடியும். எனவே, இதில் எந்த இழப்புமில்லை" என்று தெளிவாகப் பேசுகிறார் சோனி சோரி.

சமூகப் பிரச்சினை களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துவரும் பெண்களின் சிந்தனையை, சோரியின் வார்த்தைகள் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x