Published : 08 Jan 2018 10:53 AM
Last Updated : 08 Jan 2018 10:53 AM

குறைந்து வரும் மொபெட் மோகம்!

சை

க்கிள் மட்டுமே பெரிதும் புழக்கத்தில் இருந்த 1980-களின் தொடக்கத்தில் சுவேகா, லூனா போன்ற மொபெட்களின் வருகை இருசக்கர வாகனங்களுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் குழுமத்திலிருந்து டிவிஎஸ் 50 என்ற மொபெட் வந்தபோது அதற்கு பெருமளவு வரவேற்பு இருந்தது. கால ஓட்டத்துக்கேற்ப டிவிஎஸ் எக்ஸ்எல், டிவிஎஸ் சேம்ப் என பல்வேறு மாறுதல்களை மேம்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.

வட மாநிலங்களில் மட்டுமே கோலோச்சிய லூனா, ஹீரோ மெஜஸ்டிக் போன்ற மாடல் மொபெட்கள் தென்னிந்தியாவில் வலுவாக காலூன்ற முடியாததற்கு டிவிஎஸ் 50 மொபெட் இங்கு ஆழமாக காலூன்றியிருந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் டிவிஎஸ் தயாரிப்புகள் தர மாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தொட ர்ந்து வலுப்படுத்திக் கொண்டே வந்தது டிவிஎஸ் மோட்டார்.

தற்போது மொபெட் மாடலில் எஞ்சியிருப்பது இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் மட்டுமே.

இப்போதும் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் மிகவும் விரும்பத்தக்க வாகனமாக டிவிஎஸ் எக்ஸ்எல் திகழ்கிறது. கால ஓட்டத்துக்கு ஏற்ப 100 சிசி திறன் கொண்டதாக 4 ஸ்டிரோக் இன்ஜினுடன் இது வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த மாடல் மட்டுமே நடப்பு நிதி ஆண்டில் 5.65 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இதன் விற்பனை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் டிவிஎஸ் தயாரிப்புகளில் ஸ்கூட்டரை விட அதிக அளவில் மொபெட்கள்தான் விற்பனையாகின. சுமார் 9 லட்சம் டிவிஎஸ் எக்ஸ்எல் விற்பனையானதும் கடந்த நிதி ஆண்டில்தான். இன்னும் சொல்லப் போனால் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் கூட எக்ஸ்எல் விற்பனை குறையவில்லை. 2016-ம் ஆண்டு நவம்பரில் மட்டும் 82 ஆயிரம் எக்ஸ்எல் விற்பனையாகியுள்ளன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனையில் எக்ஸ்எல் வாகனத்தின் பங்களிப்பு மட்டும் 17 சதவீத அளவுக்கு இருந்தது.

ஆனால் இந்த நிதி ஆண்டில் 2017-18 சரிவு ஆரம்பமானது. ஏப்ரலில் 13.5 % சரிவை சந்தித்தது. செப்டம்பரில் 60 ஆயிரம் வாகனங்களே விற்பனையாகியிருந்தன.

இப்போது கிராமப்புற மக்கள் ஸ்கூட்டர்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் மாறத் தொடங்கியுள்ளதால் கியர் இல்லாத மொபெட்களுக்கான மவுசு குறைகிறது என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் டிவிஎஸ் எக்ஸ்எல் விலை சுமார் ரூ 38 ஆயிரம் வரை ஆகிறது. ஸ்கூட்டர்களுக்கு சற்று அதிகம் கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளதால் பலரும் ஸ்கூட்டரை தேர்வு செய்கின்றனர். மாற்றத்தை நோக்கி மக்கள் பயணிக்கும்போது மொபெட்டிலிருந்து ஸ்கூட்டருக்கு மாறுவது இயற்கையே. மொபெட் தயாரிப்பில் தனித்து இதுவரை தாக்குபிடித்த டிவிஎஸ் மோட்டார்ஸ் மக்களின் விருப்பதிற்கேற்ப ஸ்கூட்டர்களை இனி அதிகம் தயாரிக்கும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x