Published : 16 Jan 2018 11:46 AM
Last Updated : 16 Jan 2018 11:46 AM

படிப்போம் பகிர்வோம்: புதியன வாசிப்போம்!

‘பு

த்தகங்கள் அலமாரிக்கு அல்ல ஆன்மாவுக்கு’ என்கிற பிரபல ஆங்கில பழமொழி உண்டு. நிச்சயமாக, புத்தகங்கள் நம்மைப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தவை. அத்தகைய புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்தவே 41-வது சென்னை புத்தகக் காட்சி நடந்துவருகிறது. அதிலும் பத்தாயிரம் புதிய தலைப்புகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய புத்தகங்கள் இம்முறை வெளிவந்துள்ளன. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாசிப்பின் சுவையை உணர்த்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் சென்னை புத்தகக் காட்சியில் கல்வி தொடர்பாக வெளிவந்திருக்கும் புத்தகங்களில் சில உங்களுடைய கவனத்துக்கு.

அறிவியலையும் தமிழையும் ரசிக்க

ஒரு பாடம் மாணவர்களின் விருப்பமான புலமாக மாற சுவாரசியமும் எளிமையும் அவசியம். அதிலும் அறிவியல் பாடங்கள் மாணவர்களைச் சென்றடைய ஆதாரபூர்வமான தகவல்கள் இனிமையான எழுத்து நடையில் வர்ணிக்கப்பட வேண்டும். இதை லாகவமாகச் செய்துவருபவர் மூத்த அறிவியல் எழுத்தாளர் என். ராமதுரை. அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலா முதல் ரோபோ வரை உலகை அறிவியல்பூர்வமாக ரசிக்கும்படி ‘அறிவியல் எது? ஏன்? எப்படி? – அடிப்படைகள் முதல் அதிசயங்கள் வரை’ (கிழக்கு பதிப்பகம், சென்னை, ராயப்பேட்டை, சென்னை, தொடர்புக்கு: 044-42009601, பாகம் ஒன்று: ரூ.225.) என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என். ராமதுரை. இரண்டு பாகங்களாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு வண்ணமயமான உலகம் என்பதை உணர்த்துகிறது என். சொக்கன் எழுதிய ‘மாணவர்களுக்கான தமிழ்’ புத்தகம். (கிழக்கு பதிப்பகம், சென்னை, ராயப்பேட்டை, சென்னை, தொடர்புக்கு: 044-42009601, பாகம் ஒன்று விலை: ரூ.200). இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கும் இப்புத்தகம் தமிழைக் கற்பதற்குப் பதிலாகத் தமிழை ரசிக்கச் சொல்லித்தருகிறது.

ஜப்பான் மொழியும் கணித வரலாறும்

உலக மொழிகளில் ஐரோப்பிய மொழிகளுக்கு அடுத்தபடியாக ஆசிய மொழிகளையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்று அதிகரித்துவருகிறது. ஜப்பான் மொழி பயிலும் ஆர்வம் படைதவர்களுக்கு வெளிவந்துள்ளது, ‘வாங்க பேசலாம் ஜப்பான் மொழி’ புத்தகம் (கவிதா பதிப்பகம், தி. நகர், சென்னை, தொடர்புக்கு: 044 24364243, புத்தக விலை: ரூ.150). டெல்லி பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் ஜப்பானிய ஆய்வுகள் துறையின் பேராசிரியரான விமலா சாலமன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

கணிதத்தில் சிறந்து விளங்குபவர்கள் எப்போதுமே அதிபுத்திசாலிகளாகக் கொண்டாடப்படுகின்றனர். அத்தகைய கணிதத்தை அறிவுப்பூர்வமான ஒன்றாக மட்டும் முன்வைக்காமல் அதன் வரலாற்றையும் அறிமுகம் செய்கிறது, பேரா. பி. முத்துக்குமரன் மற்றும் பேரா. எம். சாலமன் பெர்னாட்ஷா இணைந்து எழுதியிருக்கும் ‘கணித வரலாறு’ புத்தகம் ( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். வெளியீடு, அம்பத்தூர், சென்னை, தொடர்புக்கு: 044-26251968, விலை: ரூ. 325)

அதிகாரத்தைக் கைப்பற்றிய ஊடகம்

பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று பலவற்றைக் கற்றுத்தரும் அதிகாரத்தைத் தொலைக்காட்சி ஊடகம் அபகரித்துக்கொண்டுவிட்டது. தொலைக்காட்சியின் கற்றுக்கொடுக்கும் செயல், கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்தியூ 1996-ல், ‘Sur la television’ என்ற புத்தகத்தில் அலசி ஆராய்ந்தார். பிரெஞ்சு மொழியிலிருந்து வெ. ஸ்ரீராமின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் ‘தொலைக்காட்சி: ஓரு கண்ணோட்டம்’ (க்ரியா வெளியீடு, திருவான்மியூர், சென்னை, தொடர்புக்கு: 7299905950, விலை: ரூ. 120) என்கிற தலைப்பில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஊடகத் துறை மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

மேலும் பல புத்தகங்கள் நம்முடையச் சிந்தனையைச் செதுக்கக் காத்திருக்கின்றன. புதியன வாசிப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x