

2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்த சுவாரசியமான, அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு இணையான நிகழ்வுகள் வானியல் துறையிலும் நடந்தேறின. அவற்றில் முக்கியமானவை:
தூரத்து நட்சத்திரங்களைச் சுற்றிக் கோள்கள் இருக்கலாம் என்பது பொதுவான அறிவியல் யூகம். ஆனால், ஒரே நேரத்தில் ஏழு கோள்கள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவருகின்றன என்ற கண்டுபிடிப்பு சிறப்பானது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கோள்களைக் கண்டுபிடிக்கும் குழு 2017 பிப்ரவரி மாதம் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிராப்பிஸ்ட் -1 (TRAPPIST-1) என்ற குளிர் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தது. அதில் சூரியக் குடும்பத்தை நகலெடுத்த மாதிரி ஏழு கோள்கள் சுற்றிவருகின்றன, அவற்றில் மூன்று கோள்களில் தண்ணீர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவந்தது.
ஒளி, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணமாக முதன்முதலாக இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக்கொண்ட காட்சியை ஆகஸ்டு 17 அன்று நாசா வானியலாளர்கள் கண்டனர். லேசர் பெர்ப்போ மீட்டர் ஈர்ப்பு விசை அலை ஆய்வு மையம் (LIGO ), விர்கோ ஈர்ப்பு விசை ஆய்வு மையம், 70-க்கும் மேற்பட்ட தரை, விண்வெளி அடிப்படையிலான ஆய்வகங்கள் இந்தக் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஆகஸ்டு 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் அமெரிக்காவின் கடலோரப் பகுதிவரை கடந்தது. வட பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடங்கிய சூரிய கிரகணம் அமெரிக்காவின் 14 மாகாணங்களைக் கடந்து 2 நிமிடங்களுக்கு ஒட்டுமொத்தப் பகுதிகளையும் பகலிலேயே இருட்டாக்கியது. ‘தி கிரேட் அமெரிக்கன் எக்லிப்ஸ்’ என்ற பெயர் இதற்குச் சூட்டப்பட்டது.
சனிக்கோளின் மிகப் பெரிய ஆறாவது நிலவு என்சிலேடஸ். இந்த நிலவின் தரைப் பகுதிக்குக் கீழே கடல் இருக்கிறது. இந்தக் கடல் ரசாயன ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது. இது உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ரசாயனங்களைக் கொண்டிருக்கலாம் என்று காசினி விண்கலத்தால் 2017 நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் தெரிவித்தன.
சிரஸ் என்பது ஒரு குள்ளக் கோள். சூரிய மண்டலத்தின் உட்பகுதியில் பாறைகளாலான பகுதியை கொண்ட இந்தக் குள்ளக் கோளில் கடல், வாயு மண்டலமும் இருக்கலாம் என்று நவம்பர் 2017-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
பூமியைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும் தொலைதூரக் கோளான ஜி.ஜே. 1132.பி. மிகவும் சூடான, தடிமனான சூழலைக் கொண்டிருப்பதாக 2017 ஏப்ரல் 7 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு விண் பாறைப் பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்தில் நுழைவதை ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் அக்டோபர் 19 அன்று கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது இது ஒரு விண் பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்றும் இது மற்ற நட்சத்திரங்களிடையே இருந்து சூரியக் குடும்பத்தில் நுழைந்த முதல் பொருள் என்றும் அறிவிக்கப்பட்டது.
கட்டுரையாளர், அறிவியல் பிரசாரகர்.
தொடர்புக்கு: contactcra@yahoo.com