Published : 22 Jan 2018 11:28 AM
Last Updated : 22 Jan 2018 11:28 AM

வெளிநாட்டு நிறுவன தணிக்கையிலும் தில்லுமுல்லு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு செபி வெளியிட்ட ஒரு உத்தரவு தணிக்கை நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். குறிப்பாக சர்வதேச அளவில் நிதிச் சேவைகளை வழங்கி வரும் முக்கிய நிறுவனமான பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி)நிறுவனம் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் தணிக்கை பணிகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

செபியின் இந்த அதிரடியை வழக்கமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் ஒன்றாக கருத முடியாது. இந்திய நிறுவனங்களின் வரலாற்றில் மோசமான அடையாளத்தை உருவாக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் மோசடியோடு இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்டது.

இந்திய முதலீட்டாளர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய அந்த சம்பவம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதல்ல. சத்யம் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் கிட்டத்தட்ட ரூ.8,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது 2009-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

``நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை மிகைப்படுத்தி காட்டினோம். பல ஆண்டுகளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் என்றும், லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதாகவும்’’ கூறினார் சத்யம் நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்க ராஜு. இதன் பொருள் ஒவ்வொரு ஆண்டு தணிக்கை அறிக்கையிலும் நிறுவனத்தின் உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன என்பதுதான்.

அதாவது சத்யம் நிறுவனத்தில் சுமார் 8,000 கோடி ரூபாய் நிதி மோசடியை பிரைஸ் வாட்டஸ் கூப்பர்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக 2000-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை இந்த நிறுவனம்தான் தணிக்கை செய்து வந்தது.

இந்த முறைகேட்டில் பிடபிள்யூசி நிறுவனத்தின் தொடர்பை செபி விசாரணை செய்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர், பிடபிள்யூசி நிறுவனத்தின் பட்டய கணக்காளர்கள் சத்யம் நிறுவன கணக்குகளை சரி பார்ப்பதில் முறைகேடு செய்துள்ளனர் என செபி உறுதி செய்து இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரண்டாண்டுகளுக்கு எந்த வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினுடைய கணக்குகளையும் (ஆடிட்) பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனம் சரிபார்க்க முடியாது என்றும், ரூ.13.09 கோடி ரூபாய் அபராதத்தை, 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வட்டியுடன் (ஆண்டுக்கு 12 % வட்டி) அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தல்லூரி ஆகிய இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு எந்த ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்துக்கும் தணிக்கை சான்றிதழ்களை வழங்கக்கூடாது என்றும் தனது 108 பக்க உத்தரவில் செபி கூறியுள்ளது.

தவிர எந்தவொரு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செபியில் பதிவு செய்யப்பட்ட புரோக்கர்கள் பிடபியூள்சி நிறுவனத்துடன் இணைந்தும் செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. முறைகேடான நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பாக செபி சட்டப் பிரிவு 11-ன் கீழ் இந்த உத்தரவை செபி பிறப்பித்துள்ளது.

ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் நிதி மோசடி என்பது அந்த நிறுவனத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது. சர்வதேச அளவில் சேவைகளை வழங்கிவரும் பிடபிள்யூசி போன்ற நிறுவனங்களே இதற்கு உடந்தையாக இருந்ததுதான் அதிர்ச்சியானது. ஆனால் இப்போது நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது. தணிக்கை அறிக்கைதான் நிறுவனத்தின் உண்மை முகம், அதிலும் தில்லுமுல்லு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது என்பதே அனைவரது விருப்பமும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x