

பயணம்தான் மனித வாழ்க்கை முறையில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்குகிறது. பயணக் காதலர்கள் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் எனப் பயணப்பட்டுத்தான் அரிய விஷயங்களைக் கண்டறிந்து உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு மாதக்கணக்கில் பயணம் செய்த மீகாமன்கள் (கடலோடிகள்) எல்லாரும் உணவுக்கு என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்தபோது, புளிச்சோறு நினைவுக்கு வந்துவிட்டது! ‘பட்டணம்தான் போகலாமாடி, பணங்காசு தேடலாமாடி’ என்று பயணம் புறப்படும்போதே ‘கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி’ என்று பாடுவது நம் ஊர். ‘புளியோதரை’, ‘புளிச்சோறு’, ‘புளிச்சாதம்’, ‘கட்டுச் சோறு’ என்று பலவிதமாக அழைக்கப்பட்டாலும் எங்கள் திருநெல்வேலியில் அது ‘கட்டுச்சோறு’தான்!
ஊருக்கு ஊர் கட்டுச்சோறு செய்யும் விதத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் உண்டு. ‘புளிக்காய்ச்சல்’, ‘புளித்தண்ணி’, ‘புளியானம்’ எனச் சோற்றில் ஊற்றும் குழம்பின் பெயர்கூட ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. பொதுவாகப் பயணம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு, கட்டுச்சோறு கட்டுவார்கள். ‘சம்பா’ அரிசி தண்ணீரை உறிந்து விடும் என்பதால் கட்டுச்சோறு கட்டுவதற்கு அது நன்றாக இருக்கும். இப்போது நிலக்கடலை, கடலைப் பருப்பு எல்லாம் சேர்த்துக் கட்டுச்சோறு கட்டுகிறார்கள். இதில் ஒருசிலர் முந்திரிப் பருப்புகூடச் சேர்த்து கட்டுச்சோறு கட்டுகிறார்கள்.
ஆனால், முன்பெல்லாம் வத்தலை (மிளகாய் வற்றல்) வறுத்து, புளித்தண்ணீரில் பிசைந்து, அதனுடன் கறிவேப்பிலை, மிளகு பூண்டு தட்டிப் போட்டு, கொதி வந்தும் வராமலும் இறக்கி வைத்தால், புளித்தண்ணீர் தயார். புளித்தண்ணீரில் சோற்றைப் போட்டுக் கிளறினால் புளிச்சோறு. அவ்வளவுதான்! எண்ணெய் எல்லாம் பெரிய அளவில் சேர்க்க மாட்டார்கள். கூடுதல் எண்ணெய் சேர்த்தால், கூடுதல் நேரம் கெடாமல் இருக்கும். எண்ணெய் சேர்க்காதவர்கள், அதற்கென ஒரு வழிமுறை வைத்து இருப்பார்கள்.
புளிச்சோற்றை ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி, அதன் நடுவில் காணத்துவையல் (கொள்ளு), தேங்காயத் துவையல் என ஏதாவது ஒரு துவையலை வைத்து மூட்டையாகக் கட்டித் தொங்க விட்டுவிடுவார்கள். அதிகப்படியான தண்ணீர் இருந்தால், கீழே வடிந்துவிடும். புளிச்சோற்றில் இருக்கும் புளியானது துவையல் கெடாமல் பாதுகாத்துக்கொள்ளும். அதே துவையல் வெளியில் இருந்தால் விரைவிலேயே கெட்டுப் போகும். நீர் வடிந்த பிறகு மூட்டையைத் திறந்தால், தண்ணீர் வற்றிய குளம்போல பாளம் பாளமாக வரும். மூன்று நாள்கள் வைத்திருந்து சாப்பிடலாம்!
பயணத்தின்போது தண்ணீர் இருக்கும் இடமாகப் பார்த்து, சாப்பிடுவார்கள். தண்ணீர் இல்லாமல் இந்தச் சோற்றைச் சாப்பிடுவது சிரமம். எளிதில் தொண்டையை அடைத்துக்கொள்ளும். ஆறு செல்லும் ஊராக இருந்தால் ஆற்றுக்குள் இறங்கிச் சாப்பிடுவார்கள். அதாவது தண்ணீர் ஓடாத ஆற்றுக்குள் இறங்கி, மணலில் அமர்ந்து சாப்பிடுவார்கள். எங்கள் பகுதியில் நம்பியாறு ஓடுகிறது. பொதுவாக நம்பியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடாது. ஆனால், ஆற்றில் மணல் நிறைந்து இருக்கும். மணலில் ஓர் அடி தோண்டினாலும், தண்ணீர் ஊறத் தொடங்கிவிடும். சிறு பள்ளத்தைத் (ஊற்று) தோண்டிவிட்டு, அதன் அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தால், தேவைப்படும்போது ஊற்றுக்குள் டம்ளரை விட்டு, தண்ணீரை எடுத்து, குடித்துக்கொள்வார்கள்.
குடும்பமாகச் செல்லும்போது எல்லாருக்கும் ஒரே துணியில் புளிச்சோற்றைக் கட்டிவிடலாம். தனித்தனிப் பொட்டலமாகக் கட்ட வேண்டும் என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறது வாழை இலை. வாழை இலையைச் சிறிது நேரம் நெருப்பில் காட்டினால், ஒருவித வாசனை வரும். இலையின் நரம்பு சிறிது வெந்து விடுவதால், இலையும் விரைவில் கிழியாது. ஒரு காகிதத்தின் மீது சூடான இலையை வைத்து, அதன் மீது சூடான புளிச்சோற்றைப் போட்டு, துவையல் வைத்து அப்படியே மடித்துவிடுவார்கள். காகிதத்தோடு இலையை மடிப்பதால் கூடுதல் பாதுகாப்பு. சாப்பிடும்போது இலை கிழந்தாலும் காகிதத்துக்குள்தான் இருக்கும்.
அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கு என்றே இருந்த உணவு இந்தப் புளிச்சோறு. கூடவே தண்ணீர் குடிப்பதற்கு என்று ‘திருக்குச் செம்பு’ (கூஜா) ஒன்றும் வைத்து இருப்பார்கள். இந்தச் செம்பின் மூடியைத் திருக்கித் திருக்கித் திறப்பதால் திருக்குச் செம்பு என்று பெயர். கன்னியாகுமரியில் இருந்து மும்பை, டெல்லி என எங்கு சென்றாலும் இதுதான் உணவு. ரயில் நிலையங்களில் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு, ஒரு பொட்டலத்தைப் பிரித்தால், அடுத்த வேளை உணவுக்கு அவசரப்பட வேண்டிய தேவை இருக்காது!