Last Updated : 07 Jan, 2018 10:43 AM

 

Published : 07 Jan 2018 10:43 AM
Last Updated : 07 Jan 2018 10:43 AM

மொழியின் வழியில்: டோக்கியோவிலிருந்து மதுரைக்கு!

 

ப்பான் தம்பதிக்கு இந்து முறைப்படி மதுரையில் நடந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பெண், மாப்பிள்ளைக்கான சடங்குகள் முடிந்து மங்கள வாத்தியம் முழங்க யூடோ, சிஹாரு என்கிற அந்தத் தம்பதியின் திருமணம் நடந்தது.

சிஹாரு, டோக்கியோ நகரில் வசிப்பவர்; முதுகலைப் பட்டதாரி. மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் தன்னுடைய கணவர் வெங்கடேசனுடன் டோக்கியோவில் வசிக்கிறார். வினோதினி மூன்று ஆண்டுக்கு முன், தமிழ் கற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என ஆன்லைனில் விளம்பரம் செய்தார். இதன் மூலம் சிஹாருக்கு வினோதினி தோழியானார். மெல்லத் தமிழ் கற்கத் தொடங்கிய சிஹாரு, தமிழின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றித் தெரிந்ததும் தமிழால் ஈர்க்கப்பட்டார். ஜப்பான்-தமிழ் மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமையை அறிய முற்பட்டார். தமிழ் குறித்த பி.எச்டி. ஆய்வுக்கான தரவுகளைத் தேடி மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மதுரை நகரங்களுக்கு அடிக்கடி பயணித்தார். தமிழைச் சரளமாகப் பேசவும் கற்றார்.

தமிழால் துளிர்த்த ஆசை

இந்நிலையில் சிஹாருவுக்கும் அவரது காதலர் யூடோவுக்கும் கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்தது. இருப்பினும் தமிழர்களின் திருமண முறையால் கவரப்பட்ட சிஹாரு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை வினோதினி- வெங்கடேசன் தம்பதி நிறைவேற்றினர். இந்தத் திருமண விழாவுக்கு யூடோவுடன் வந்திருந்த அவரது இரு சகோதரர்கள், அண்ணி, சிஹாருவின் பெற்றோர் என பத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து திருமண விழாவில் பங்கேற்றனர்.

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலைகள், பழக்கவழக்கம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்வது என மூன்றாண்டுக்கு முன்பே முடிவெடுத்தேன். அந்த ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் சிஹாரு.

ஜப்பானில் தமிழ் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் வினோதினியும் சிஹாருவும் அடிக்கடி தமிழ் விழாக்களை நடத்துகிறார்கள். இதன் மூலம் நட்பு வட்டமும் விரிவடைவதாக வினோதினி குறிப்பிடுகிறார். அனைத்தையும் இணைக்கும் மொழி தமிழ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x