

திட்டமிடலும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் கடலூர் அட்சயா மகளிர் சுய உதவிக்குழு. ரசாயனப் பொருள்களின் துணையோடு தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள், உடல் நலக்கேட்டுடன் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தக் குழுவினர் துளசி ஹெர்பல் நாப்கின் தயாரிப்பில் இறங்கினர். இந்தத் தொழிலைத் தொடங்கி ஓராண்டுக்குள் தங்களுக்கென தனி அடையாளத்தை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்’ திட்டத்தின் மூலம் கடலூர், மஞ்சக்குப்பத்தில் 19 உறுப்பினர்களோடு ‘அட்சயா மகளிர் சுய உதவிக்குழு’ ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் குழுவாகச் சேர்ந்து கடன் வாங்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள் என்கிற மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றிய பொதுவான பிம்பத்தைத் தங்கள் செயல்பாட்டால் இவர்கள் மாற்றியுள்ளனர். 2022இல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதோடு சேமிப்பு தவணை தவறாமல் வங்கியில் செலுத்தப் பட்டது. மூன்று மாதங்கள் முடிவடைந்ததும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் ஆதார நிதியாக 10 ஆயிரம் ரூபாய் பெற்று ஒரு தையல் மிஷினை வாங்கினர். ஆறு மாதங்கள் முடிவடைந்ததும் ரூபாய் 6 லட்சம் வங்கிக் கடன் பெற்றுத் தொழில் தொடங்க முடிவெடுத்தனர்.
நாப்கின் தயாரிப்பில் ஈடுபட நினைத்தவர்கள் நான்கு தையல் மிஷின்களை வாங்கினர். ‘துளசி ஹெர்பல் நாப்கின்’ தயாரிப்பு இப்படித்தான் தொடங்கியது. வேம்பு, துளசி, கற்றாழை போன்ற இயற்கை மூலிகைகளைக் கொண்டு நாப்கின் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதற்கான மூலப்பொருள்களை திருச்சியில் கொள்முதல் செய்கின்றனர். 5 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கும் எட்டு நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாப்கின் விற்பனையில் மாதத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்துவருவதாகச் சொல்கின்றனர் இக்குழுவினர்.
அட்சயா மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த நாப்கின்கள் ஹோமியோபதி மருத்துவர்கள், சித்த மருத்துவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்களுக்குப் பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியிலும் வரவேற்பு இருக்கிறது. “இந்த மூலிகை நாப்கின் தொழில் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த உதவுகிறது. எங்களது வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது” என்கின்றனர் இக்குழுவினர்