

நா.முருகவேல்/க.ரமேஷ்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பாகக் கடலூரில் கடந்த அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ‘மகளிர் திருவிழா’வில் நூற்றுக்கணக்கான வாசகியர் பங்கேற்றுக் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் இருக்கும் வாசகியரைக் கொண்டாடும் விதமாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘பெண் இன்று’ சார்பாக மகளிர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டுக்கான மகளிர் திருவிழா கொண்டாட்டம் கடலூர் கே.எஸ்.ஆர்.மஹாலில் கோலாகலத்துடன் தொடங்கியது.
ஆரோக்கியம் அவசியம்: நடனக் கலைஞர் ஆதித்யா ரவிச்சந்திரனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் பேச்சு மழை தொடங்கியது. கடலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமை மருத்துவர் ஆ.சு.லதா பேசுகையில், “சிறார் திருமணம், 18 வயதுக்குள் கருவுறுதல் ஆகியவை பெண்களின் உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் சீண்டலைத் தடுப்பதற்காக ‘போக்சோ’ சட்டம் இருக்கிறது. அது பற்றிய விழிப்புணர்வு வளரிளம் பெண்களின் பெற்றோருக்கு அவசியம் வேண்டும். ஊட்டச் சத்துக்குப் பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்த வயதில் என்ன மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை வராமல் இருக்க முன்பரிசோதனை செய்வது அவசியம். குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் ஆண்களுக்கான எளிய ‘வாசக்டெமி’ முறையி லான கருத்தடை உள்ளது. இதைக் குடும்பத்தில் எடுத்துச் சொல்லி, லகுவான முறையை நோக்கி ஆண்களை நகர்த்த வேண்டும்” என்றார்.
செல்போன் பேசுவதற்கு மட்டுமே: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள் குறித்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பி.கவிதா பேசினார். “இன்றைய இளம் தலைமுறையினரிடம் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு அதிகமாக உள்ளது. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பது சைபர் குற்றங்களுக்கும் பொருந்தும். நல்லவை போலவே பல போலிகள் ‘ஸ்மார்ட் போன்’ வழியே வருகின்றன. பெண்கள் தங்கள் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர். ஸ்மார்ட் போனில் இலவசமாகக் கிடைக்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்கிறீர்கள். அந்தச் செயலிகள் நம் செல்போனில் இருக்கும் தகவல்களைப் பெற அனுமதி அளிக்கிறீர்கள். இதன்மூலம் நம் செல்போனில் உள்ள தரவுகள் எங்கோ செல்கின்றன. நம் போன் மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. இது ஆபத்தானது. ஆன்லைன் மூலம் ஆசைகாட்டி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அதனால், பெண்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர் கவிதா.
தொழில்முனைவோர் ஆகலாம்: பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க உதவும் அரசுத் திட்டங்கள் குறித்து கடலூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் பொ.செந்தில் வடிவு விளக்கினார். “பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகப் பண்ணை சார்ந்த தொழில், பண்ணை சாரா தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கி வருகின்றன. சுயமாகத் தொழில் தொடங்க ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் (RSETIS) மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ‘தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா’ திட்டம் மூலம் தமிழகத்தில் 143 மையங்களில் உதவித் தொகையுடன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மகளிர் தைரியமாக சுய தொழில் தொடங்க வேண்டும். அதற்கு மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகினால் வழிகாட்டத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கடலூர் ‘தி சுசான்லி’ குழும நிர்வாக இணை இயக்குநர் டாக்டர் உஷா ரவி, உடனடி - துரித உணவைத் தவிர்த்து சிறுதானியங்களைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்று கூறினார். கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பனின் மனைவி லீமா ஐயப்பன், “எதையும் கண்டு அஞ்சாமல் தைரியமாக இருக்கப் பழகுங்கள். ‘ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி’ என்று அந்தக் காலத்தில் சொல்வதுண்டு. இப்போது அப்படியில்லை. ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று நல்லவிதமாக வளர்த்தால் ஆண்டியும் அரசனாகிவிடுவான். இது பெண் பிள்ளைகளுக்கான காலம்” என்றார்.
அனைவருக்கும் பரிசு: பந்து பிடிக்கும் போட்டி, கையில் தண்ணீர் பாட்டில்களுடன் ஒற்றைக் காலில் நிற்கும் போட்டி, பலூன் உடைத்தல் போட்டி, கண்ணைக் கட்டிக் கொண்டு கையில் இருப்பதைக் கண்டறியும் போட்டி எனப் பல்வேறு போட்டிகளில் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்றுப் பரிசுகளைக் குவித்தனர். போட்டிகளுக்கு நடுவே ஆச்சரியப் போட்டியாகக் கடலூர் மாவட்டம் குறித்த பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாகப் பதில் அளித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகியர் இருவருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’யுடன் கடலூர் ‘தி சுசான்லி’ குழுமம், கோல்ட் பிரிமியம் ஆயில் நிறுவனம், சூரியன் எஃப்எம், கேசினோ டீ பாய்ன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அகர்வால் இனிப்பகம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியைக் கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார். மகளிர் திருவிழாவுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட, விழா இனிதே நிறைவடைந்தது!