Last Updated : 02 Jan, 2018 01:04 PM

 

Published : 02 Jan 2018 01:04 PM
Last Updated : 02 Jan 2018 01:04 PM

துறை அறிமுகம்: பார்வை தரும் மருத்துவப் படிப்பு!

மருத்துவராக விரும்பும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மருத்துவராக முடியாதவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பல்வேறு துணை மருத்துவப் படிப்புகள் வழங்குகின்றன. அவற்றுள் கண் மருத்துவத் துறையில் அங்கம் வகிக்கிறது ‘ஆப்டோமெட்ரி’. அதிக வேலைவாய்ப்புடன், முதன்மையான வருமானம் ஈட்டும் பணிகளில் ஒன்றாக வளர்ந்துவருகிறது இத்துறை.

கண், பார்வைத் திறன் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள், அளவீடுகள், மருத்துவ உதவி சாதனங்கள் தொடர்பான படிப்புகளை ஆப்டோமெட்ரி துறை வழங்குகிறது. இத்துறையில் படித்துத் தேறும் மருத்துவப் பணியாளர் ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ எனப்படுகிறார்.

அதிகரிக்கும் சேவைத் தேவை

கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்ட பார்வைக் குறைபாடுகளுடன் நின்றுவிடுவதில்லை. மரபுரீதியிலான கோளாறுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட இதர உடல் நலக் கோளாறுகளாலும் பார்வைக் கோளாறுகள் விளையக்கூடும். ஆகையால், கண்கள், பார்வை சார்ந்த மருத்துவத் துறை விசாலமானது.

அதிலும் அதிகரிக்கும் ஸ்மார்ட் ஃபோன், கணினி பயன்பாடுகளால் கண் சார்ந்த கோளாறுகள் நாளுக்குநாள் பெருகுகின்றன. இதனால், உலக அளவில் ஆப்டோமெட்ரிஸ்ட்களின் தேவை அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 3 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆப்டோமெட்ரி பணியாளர்கள் நாட்டுக்குத் தேவை என்றும் அதில் 10 சதவீதம் மட்டுமே அப்போது பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

பரந்து விரிந்த துறை

கண் மருத்துவமனைக்கு வரும் நோயாளியைப் பரிசோதிப்பவராக, அவருக்கும் கண் மருத்துவருக்கும் இடையில் மருத்துவப் பணியாளராக ஆப்டோமெட்ரிஸ்ட் செயல்படுகிறார். விழி ஒளி பரிசோதகரான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ அளிக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் கண் மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். கண் அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான கண்காணிப்பு, பார்வைத் திறன் மேம்பாடு போன்றவற்றை ஆப்டோமெட்ரிஸ்ட் தொடர்ந்து கண்காணிப்பார்.

இவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலுமாகப் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கண் மருத்துவமனை அல்லது கண் மருத்துவரிடம் பணி புரியாமல் சுயமாகக் கண் பரிசோதனை வழங்குவது, பார்வைத் திறனுக்கான கண்ணாடி கடை நடத்துவது, கண்ணாடி, சட்டகத் தயாரிப்பு நிறுவனங்களின் கிளையுரிமை பெற்று கடை நடத்துவது போன்றவை இதர பணி வாய்ப்புகளாகும். இவற்றுடன் அதிகரித்துவரும் குளிர் கண்ணாடி தேவைகள், பார்வைத் திறனுக்கும் அழகுக்குமான காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரை, விற்பனை என ஆப்மெட்ரிக் படித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

எங்கே, என்ன படிக்கலாம்?

பிளஸ் டூவில் அறிவியல் பாடப் பிரிவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேறிய மாணவர்கள் ஆப்டோமெட்ரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு என நுழைவுத் தேர்வுகள் நடத்துகின்றன.

ஆப்டோமெட்ரிஸ்ட் ஆக நீங்கள் படிக்க வேண்டியது, B.Optom., நான்காண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்பு. முதல் மூன்றாண்டுகள் கல்லூரிக் கல்வியாகவும் நான்காமாண்டு மருத்துவ வளாக இண்டெர்ன்ஷிப் பயிற்சியாகவும் இது அளிக்கப்படுகிறது. இதற்கு பொதுநுழைவுத் தேர்வாக EYECET நடத்தப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் நிறுவனம் வழங்கும் பி.எஸ்சி. ஆப்தல்மிக் டெக்னாலஜியில் சேரப் பிரத்யேக நுழைவுத் தேர்வு உண்டு. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 2015 முதல் பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி நான்காண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. சென்னை சங்கர நேத்ராலயா (http://www.eso.sankaranethralaya.org/) பிட்ஸ் பிலானியுடன் இணைந்து முனைவர் பட்டம்வரையிலான ஆப்டோமெட்ரி படிப்புகளை வழங்குகிறது.

 

‘ஆப்தல்மிக் அசிஸ்டண்ட்’, ‘ஆப்டோமெட்ரி’ ஆகிய இரண்டாண்டு பட்டயப் படிப்புகள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. கண் மருத்துவ சேவையிலிருக்கும் மருத்துவமனைக் குழுமங்கள் மற்றும் கண் கண்ணாடிகள், லென்சுகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் சார்பிலும் பிரத்யேகக் கல்வி நிலையங்கள் வாயிலாகப் பட்டம், பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் பலவும் தேர்ச்சிக்குப் பின்னரான வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. கல்வித் தகுதியுடன் அனுபவ முன்னுரிமையும் கொண்டவர்களுக்கு உள்நாட்டு பல்நோக்கு மருத்துவமனைகளிலும் வெளிநாட்டிலும் மருத்துவருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.

வாய்ப்பும் வேலையும்

தொழில்முனைவோராகச் சாதிக்கலாம்

கண் மருத்துவருக்கு நிகராக மருத்துவச் சேவைகளை வழங்குவதுடன், கூடுதலாகப் பார்வைத் திறன் மேம்பாட்டுக்கான சாதனங்களை விற்பனையையும் ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ செய்யலாம். இதன் மூலம் கண் மருத்துவரைவிடவும் அதிகம் சம்பாதிக்கலாம். இவற்றுடன் கண் மருத்துவமனை நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களை வழங்கும் சேவையையும் இணைத்துக்கொள்ளும்போது தொழில்முனைவோராகவும் பிரகாசிக்கலாம்.

ஆசிரியர் ஆகலாம்

ஆப்டோமெட்ரியில் இளநிலைப் பட்டப்படிப்புடன் முதுநிலை, ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றால் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றலாம்.

எங்கிருந்து வந்தது?

‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ - விழி ஒளிப் பரிசோதகர்: கிரேக்க மொழியில் ‘ஆப்டோஸ்’ என்றால் பார்வைத் திறன், ‘மெட்ரியா’ என்றால் அளவீடுகள் சார்ந்தது என்று பொருள். ‘ஆப்டிக்ஸ்’ என்பது மனித விழியின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான அறிவியல் துறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x