Published : 01 Jan 2018 12:14 PM
Last Updated : 01 Jan 2018 12:14 PM

டிரைவர் இல்லாத வாகனம் உருவாக்கம்: களமிறங்குகிறது குவால்காம்!

ட்டோமொபைல் துறையில் இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள்தான் பிரதானமாக உள்ளன. முதலாவது பேட்டரி கார். உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுவதாலும், கச்சா எண்ணெய் வளம் குறையும் அபாயம் உள்ளதும் பேட்டரி வாகனங்கள் மீதான கவனம் தீவிரமடைந்துள்ளது. அடுத்தது டிரைவர் தேவைப்படாத வாகனங்களை உருவாக்குவது. ஆட்டோமொபைல் நிறுவனங்களோடு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கைகோர்த்து இத்தகைய வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த வரிசையில் தற்போது கம்ப்யூட்டர்களுக்கான சிப்-களைத் தயாரிக்கும் குவால்காம் நிறுவனமும் இறங்கியுள்ளது. தனது பரிட்சார்த்த முயற்சியை கலிபோர்னியாவில் சான்டியாகோ பகுதியில் குவால்காம் சோதித்து பார்க்க உள்ளது.

இதற்கு முன்பு நிவித்யா, சாம்சங் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதேபகுதியில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொண்டன. தற்போது குவால்காம் நிறுவனமும் இத்தகைய முயற்சியை மேற்கொள்ள உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 9150 சி - வி2எக்ஸ் எனும் ஒரு சிப் செட்டை அறிமுகப்படுத்தியது. இந்த சிப் செட் மூலம் ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கு தகவலை பகிர்ந்து கொள்ள முடியும். அதேபோல டிராபிக் சிக்னல்களையும் உணர்ந்து செயல்படுத்த முடியும். சி-வி2எக்ஸ் தொழில்நுட்பமானது ஓரிடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு நேரடியாக தகவலை அனுப்ப உதவும் தொழில்நுட்பமாகும். இது நெட்வொர்க் அடிப்படையிலான தகவல் தொடர்பு முறையாகும். டிரைவர் தேவைப்படாத வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்புகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

இத்துடன் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புக்கான உணர் கருவிகள் (ஏடிஏஎஸ் சென்சார்), கேமிராக்கள், ரேடார் மற்றும் லிடார் ஆகியன வாகனத்தை சுற்றிய நிகழ்வுகளை துல்லியமாக அளவிட உதவுபவை.

தனது சிப்களை வாகனத்தில் பொறுத்தி அவற்றை செயல்படுத்தி பார்க்கும் முயற்சிகளை சீனா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது குவால்காம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x