

தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய சிலை திருட்டு பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. உங்களுடைய கதை மற்ற திரைப்படங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது.?
தமிழ் இந்துவில் வெளிவந்த மைலடி சிலைகள் பற்றிய அறிமுகம் தான் இதற்கு முதல் படி. பிறகு முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சோழநாட்டில் பௌத்தம், குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் புத்தகங்கள் என சிலைகள் கல்வெட்டுகள் பற்றிய அறிமுகம் கிடைத்தன. தமிழகத்தில் இருக்கின்ற சிலைகள் நிறைய வகைகள் இருக்கின்றன. சிலைகளை வைத்து மிக பெரிய அரசியல் நடக்கிறது. இப்ப வரைக்கும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை கூண்டுகள் இல்லாமல் கிராமங்களில் பார்ப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆன்மீக சிலைக்கும் ஆளுமை சிலைகளுக்கும் உள்ள வேறுபாடு உலகம் அறிந்தது. இலக்கியம் முதல் தெரு முற்று விநாயகர் சிலைகள் வரையில் வரலாறு மற்றும் செய்திகளை சிலைகள் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு சிலைக்கும் பின்னாடியும் உருவாக்கம் முதல் சிலைகான இடத்தை தேர்வு செய்வது வரை உள்ள பிரச்சினைகள் ஏராளம். மெழுகு, மரம், கல், பஞ்சலோகம் இது போல தற்போது கான்கிரீட் வரைக்கும் சிலைகள் செய்யப்படுகிறது. சிலைகளையும் தமிழகத்தையும் எப்பொழுதும் பிரிக்க முடியாத ஒன்று. சிலைக்காக தெரு சண்டை, கிராமங்களுக்கு இடையில் நடக்கும் சண்டை என நம் நாட்டு சிலைகள் உலகம் முழுக்க பரவி கிடைகிறது.இதில் இருந்து தான் என்னுடைய கதையின் மையம் கிடைத்தது. எம் டி ஆனந்த் உடன் இணைந்து எழுதிய கதை எனக்கு உதவியாக இருந்தார். எங்களோட இந்த சிலை பற்றிய கதையை திரைக்கதை வடிவமைப்பு கொடுத்தது இவர்தான். எம் டி ஆனந்த் இதற்கு முன் டானாக்காரன் இயக்குனர் தமிழ் திரைபடத்தின் திரைக்கதையில் வேலை பார்த்து இருக்கிறார்.
கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி 2018 காலகட்டத்தில் பழனி முருகன் சிலை பற்றிய பிரச்சினைகள் பற்றி எல்லாரும் அறிந்ததே. போகர் எனும் சித்தர் யானை முட்டி குகையில் செய்த பழனி முருகன் சிலை இப்ப வரைக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது என எல்லோர் மனதில் இருக்கக்கூடிய ஒரு கதை, தமிழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது. போகர் செய்தது இரண்டாக இருக்கலாம் அல்லது மூன்றாக இருக்கலாம் என்கிற செவி வழிகதை தெரிந்ததே. பழனி மற்றும் வேலப்பர் சிலைகள் இரண்டு மூன்றாவது ஒரு சிலை இருக்கிறது. இதில் இருந்து தொடங்கப்படுகிறது என்னுடைய கதை. பழனி முருகன் மூன்றாவது சிலை பற்றிய கதையாக இது உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கொஞ்சம் கற்பனை கலந்து பழனி மூலவர் பற்றிய விவரங்களை சேகரித்து சமீப காலங்களில் நடந்த சம்பவங்களையும் சேர்த்து கதையாக அமைத்து இருக்கிறோம்.
சிலைகளை மையமாக வைத்து சொல்லப்படுகிற திரைப்படங்களில் நம்முடைய ஆன்மீகம் கலாச்சாரம் எந்த திரைப்படத்திலும் அழுத்தமா சொல்லப்படுவதில்லை. உங்களுடைய திரைப்படத்தில் அழுத்தமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா?.
நிச்சயமாக இருக்கிறது. என்னோட இந்த படத்தில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன். தமிழ் கடவுள் முருகன் நமது ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் வாழ்கையில் முற்றிலும் கலந்துதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் முருகன் எனும் பெயர் இல்லாத வீடுகள் இல்லை என சொல்லலாம். அந்த கடவுள் பற்றிய கதை. இதில் பழனி முருகன் சிலை சிலையின் உருவாக்கம் என நிறைய கற்பனைகள் கலந்து இருக்கிறது.
இந்த கதையில் ஒரு பெண் மையக் கதாபாத்திரமாக இருப்பதற்கான காரணம்?
எனது ஆரம்பகால குறுபடங்கள் சில பெண் கதாபாத்திரம் மையமாக கொண்டது தான். எனது குறும்படம் "ஆரியர்" மற்றும் "டோனா " இரண்டுமே பெண்கள் கதாபாத்திரத்தை மையமாக கொண்டது. இதில் டோனா குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2015 தேர்வு செய்யப்பட்டது. (Reference: https://www.ndtv.com/entertainment/cannes-2015-nomination-boost-for-indie-filmmakers-says-donna-director-762153). பெண் மைய கதாபாத்திரமாக அமைக்கப்படும் போது கதை சார்ந்து விளையாடுவதற்கு நிறைய இடம் கிடைக்கிறது. அம்மா மற்றும் மனைவி இருவரிடம் எப்போதும் ஒரு ஆண் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தான் இருக்கிறான். குடும்பத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கும் வெளியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கும் ஒரு முழுமையான தீர்வு அவர்களிடம் இருந்து தான் கிடைக்கும். பெண்ணால் ஆண் வெற்றி அடையும் போதும், ஏமாற்றப்படும் போதும் ஆண் மிக பெரிய சக்தியாக மாறுகிறான். இந்த கதையில் வரும் பெண் கதாபாத்திரம் மிக வலுவாக நின்று, கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களை தனது மன வலிமை கொண்டு எதிர்த்து நிற்கிறாள். முருகன் சிலை ஒரு பெண்ணால், சக்தியால் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் போது களத்தை தனதாக்கி கொள்கிறாள். கருவின் உருவமாக இருக்கும் பெண்களுக்கு கருவறையில் தான் இடம் இல்லை என என்றோம் சரி கருவறையில் உள்ள சிலையை காப்பாற்றி மீட்டு எடுக்கட்டும் என முடிவு செய்து விட்டேன்.
ஆனந்த் பாபு அவர்களை எதிர்மறை கதாபாத்திரமாக தேர்வு செய்தது எதற்காக? அவருக்கான திருப்புமுனை கதாபாத்திரமாக உங்களுடைய கதை அமையுமா?
ஆனந்த் பாபு அவர்கள் எனது திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நடனத்தால் ஈர்க்கப்பட்ட ஒருவன் நான். ஆனந்த் பாபு அவர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளேன். அவரின் நடனத்தை நேரில் பார்த்தேன். தம்பி என ஆசையாக அழைப்பார் அவரின் முகத்தில் ஒரு நையாண்டி கலந்த வில்லன் ஒருவன் இருக்கிறான் அதனை நீங்க இந்த திரைப்படத்தில் பார்க்கலாம். அவரின் முகத்தில் உள்ள வில்லதனத்தை ரசிக்கலாம். கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு பிறகு வில்லனாக ஒரு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவர் என்பது நிச்சயம்.
திரைப்படம் முழுவதும் எங்கே படமாக்கப்பட்டது.? எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடந்தது?
திரைப்படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியே எடுக்கப்பட்டது. 15 நாட்களில் முழு திரைப்படமும் எடுத்து முடிக்கப்பட்டது.
நடிகர்கள் பற்றி?
திரைப்படத்தில் கிரிஷா குருப், ஜூனியர் எம் ஜி ஆர், காதல் சுகுமார், ஹிட்லர், உதயா, பிரதீப் யுவராஜ், தீபா பாஸ்கர் போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். நண்பர்களின் உதவியோடு இந்த திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. திரைப்படத்திற்கு நண்பர்களின் உதவி மிகவும் இன்றி அமையாதது. ஜூனியர் MGR முக்கிய வில்லன் கதாபாத்திரமாக நடித்து இருக்கிறார். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். கிருஷா குருப் (கிளாப், கோலி சோடா 2) கட்டிட பொறியாளர் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மிக முக்கியமாக இந்த திரைப்படத்தை மைய கதாபாத்திரமாக வழிநடத்தி செல்பவர் இவரே. தற்போது வரை திரைப்படம் வெளி வருவதற்கு அவரால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றி?
ஒளிப்பதிவு சரவணன் ஶ்ரீ, எடிட்டர் எம் டி விஜய், இசை ஹரிகரசுதன், கலை பாலசுப்ரமணியம். இசை அமைத்த ஹரிகர சுதன் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். தயாரிப்பாளர் திரைப்படத்தில் எடிட்டர் ஆகையால் எங்களின் படப்பிடிப்பு தளத்தில் தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கினோம்.
உங்களைக் கொஞ்சம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்..
கதை சொல்லியாக சிறு வயதில் எனது பக்கத்து வீடடிலிருக்கும் சிறுவர்களுக்கு கதை சொல்லும் வழக்கத்தில் இருந்து தொடங்கியது எனது சினிமா பயணம். பிறகு எனது குறும்படங்கள் மூலமாக ஆரம்பம் ஆனது. என்ஜினீயரிங் படித்துக்கொண்டே ரூபாய் 1500 செலவுகள் செய்து எடுத்த டோனா குறும்படம் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. நண்பர் விஷ்ணு வரதன் மூலம் அதனை பிடித்துக்கொண்டு அடுத்த நகர்வை நோக்கி சென்றேன். சென்னையில் அருண் மோ அவர்களின் மூலமாக படிமையில் இணைந்தேன். இலக்கியம் சார்ந்தும் உலக சினிமா சார்ந்தும் பல விஷயங்களை படிமை மாணவர்களின் வரிசையில் நின்று தெரிந்துக்கொண்டேன். 2015 ஆம் கால கட்டத்தில் நண்பர் ராஜேஷ் உடன் இணைந்து "குதிரைவால்" திரைபடத்தின் கதையை எழுத ஆரம்பித்தோம். கதையின் ஒவ்வொரு பகுதியும் நாங்கள் இருவரும் தஞ்சை பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்து எழுதிய வரிகளை இன்றும் அந்த வயல்கள், தென்னை காடுகள் கூறிக்கொண்டு இருக்கும். சில காரணங்கள் அதனால் பிறகு குதிரைவால் திரைப்படத்தில் வேலை செய்ய முடியாத நிலை.
திருமணம், குழந்தை என நாட்கள் விரைவாக சென்றன. எனது மனைவி புனிதவதி அவர்களின் உந்துதல் மறுபடியும் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் கதைகள் என எழுத தொடங்கினேன். குடும்பம், வேலை, குழந்தை மற்றும் நான் என அனைத்தையும் எனக்காக தோலில் சுமந்தாள். எனது மனைவி புனிதவதி சென்னை காவலர் பணியில் இருக்கிறார். மேலும் கராத்தே பிளாக் பெல்ட் மூன்று முறை வாங்கி இருக்கிறார். இந்திய அளவில் சென்று பல பதக்கங்கள் வாங்கி இருக்கிறார். அரசியல் சூழல் காரணமாக அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியவில்லை. அவளது கனவின் விதை எனது கனவின் விருட்சமாக மாறியது.
நண்பர் சரவணன் ஶ்ரீ மூலமாக இந்த திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம் டி விஜய் இந்த திரைப்படத்தினை தயாரித்து இருக்கிறார். திரைக்கதை எம் டி ஆனந்த் உடன் இணைந்து எழுதி இருக்கிறேன். தற்போது 1848 திரைப்படம் முழுமையான நிலையில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தியேட்டர் மற்றும் OTT இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் உங்களது பார்வைக்கு வைக்கப்படும்.
திரைபடத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் டாணாகாரன் தமிழ், நடிகர் சந்தோஷ் பிரதாப், எழுத்தாளர் ஷாலின் மரியா, நடிகர் சாம்ஸ், நடிகை ஷீலா, நடிகர் பிரஜின், நடிகர் விஜய் டிவி ராஜா, நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், அனுபாமா குமார், எஸ் கே ராதா எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.