Published : 13 Jan 2018 09:49 AM
Last Updated : 13 Jan 2018 09:49 AM

திரை விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

 

சி

பிஐ அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ராமையா 1980-களில் தன் மகன் சூர்யாவை சிபிஐ அதிகாரியாக்க நினைக்கிறார். சூர்யாவை நேர்காணல் செய்யும் ‘கெட்ட’ அதிகாரி, சூர்யாவுக்கு அந்த வேலை கிடைக்கவிடாமல் செய்கிறார். அதேவேளையில் போலீஸ் அதிகாரி ஆக ஆசைப்பட்டு லஞ்சம் கொடுக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்கிறார் சூர்யாவின் நண்பர் கலையரசன். ஒரு கட்டத்தில், ஊழலை ஊழலால்தான் அழிக்க முடியும் என்ற சிந்தனையோடு சில சித்து வேலைகளைச் செய்து, சிபிஐ அதிகாரிகளை ஆட்டம்காண வைக்கிறார் சூர்யா. இதைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்படுகிறார். அந்த சித்து வேலைகள் என்ன? சூர்யா அப்படி என்ன செய்தார்? கார்த்திக் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.

இந்தியில் அக்சய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய், காஜல் அகர்வால் நடித்த ‘ஸ்பெஷல் 26’ நகைச்சுவைப் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். பழைய தினத்தந்தி, பெல்ஸ் போட்டு ஹீரோ-ஹீரோயின் ஆடும் பாடல்கள், கோல்ட் ஸ்பாட், சில்க் சுமிதா, ரசிகர் மன்ற போஸ்டர்களை வைத்தே அந்தக் காலகட்டத்தைக் காண்பித்திருப்பது சிறப்பு.

திறமையானவனுக்குக் கிடைக்கும் அவமரியாதை, நீட் தேர்வு காரணமாக அனிதாவுக்கு நேர்ந்த முடிவு, தலித் அரசியல் சார்ந்து ஆங்காங்கே பஞ்ச் என நகர்கிறது படம். கவுதம் மேனன், ஹரி படங்களில் மட்டுமே தனித்துத் தெரிந்த சூர்யாவுக்கு இது ஒரு புதுமையான மாற்றம். அவரது தோற்றப் பொலிவும், நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது. கதாபாத்திரத்துக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால், ஒருபுறம், அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் வெற்றுச் சவடால் அடிப்பது, இன்னொரு புறம் இரட்டை அர்த்த வசனம், ஆபாச சைகை. ‘கண்ணியமாக நடிப்பீர்களே, என்னாச்சு சூர்யா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு சஸ்பென்ஸ் கலந்த கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அவ்வப்போது சூர்யாவுக்கு வசனங்கள் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. சுரேஷ் மேனன் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் நன்றாக ஸ்கோர் செய்கிறார். பெட்ரோமாக்ஸ் லைட்டையும், செந்திலையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள காமெடி சிரிக்க வைக்கிறது. சத்யனை ஆபாசத்துக்காகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனந்த்ராஜ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், பிரம்மானந்தம், சிவசங்கர் மாஸ்டர், யோகிபாபு, நந்தா என்று எல்லோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணனின் கேமரா பளிச்சென படம் பிடித்திருக்கிறது. அனிருத் இசையில் ‘சொடக்கு சொடக்கு’ பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சியமைப்புகளுக்கு வலுசேர்க்கிறது. திரைக்கதைக்கு ஒட்டாமல் நிற்கும் ‘பீலா பீலா’ பாடலை தவிர்த்திருக்கலாம்.

‘ஒருத்தன் பணக்காரனா இருக்க ஒரு கோடி பேரை பிச்சைக்காரனா ஆக்குறானுங்க’, ‘நெஞ்சுல நேர்மையும், செய்யுற செயல்ல நியாயமும் இருந்ததுன்னா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை' என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார், சூர்யாவுடன் இருந்த கூட்டணி இறுதியில் என்ன ஆனது, நந்தா எப்போது சூர்யாவுடன் சேர்ந்தார் என நிறைய கேள்விகள் எழுகின்றன. அதற்கு படத்தில் பதில் இல்லை. க்ளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு வரும் காட்சி யில் நம்பகத்தன்மை இல்லை. இது சீரியஸான படமா, நகைச்சுவைப் படமா என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ‘லாஜிக் வேண்டாம்; மேஜிக் போதும்’ என்ற கூட்டம் தானாக சேரும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டுள்ள படம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x