Published : 14 Jan 2018 10:56 AM
Last Updated : 14 Jan 2018 10:56 AM

எசப்பாட்டு 18: இரண்டு மனம் வேண்டாம்

ஆரணியில் 15 வயதுப் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைது ’

`தூத்துக்குடி தாளமுத்து நகரில் பள்ளிச் சிறுமிகளுக்குப் பணம், தின்பண்டங்கள் கொடுத்துப் பாலியல் வக்கிரம் செய்த மூன்று முதியவர்கள் கைது’

`கோவையில் வளர்ப்பு மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளி கைது’

இது போன்ற செய்திகளைத் தொடர்ந்து வாசித்து வாசித்து நம் கண்கள் மரத்துப்போகின்றன. காலப்போக்கில் இது வழக்கமாக நடக்கிற ஒன்றுதானே என்று நாம் பக்கங்களைப் புரட்டிவிடுவோமோ என்ற அச்சம் வருகிறது. செய்தியாகும் நிகழ்வுகளைவிடச் செய்தியே ஆகாமல் அன்றாடம் நடக்கும் பாலியல் தொல்லைகள் அதிகம் என்ற உண்மை அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

தன்னுணர்வு ஏன் வருவதில்லை?

இத்தகைய செய்திகளுக்கு ஊடே கடந்த ஆண்டில் வாசித்த ஒரு செய்தியை விவாதப்பொருளாக்க வேண்டும். ‘சிறுமியிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்ட ஓய்வுபெற்ற பெரியவர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவருடைய மகன், மகள்கள் முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டார்’ என்பதுதான் அந்தச் செய்தி. வாழ்நாள் முழுவதும் கண்ணியமான மனிதராக அறியப்பட்ட அவர், இந்த ஒரு செய்கையால் தீராப் பழியுடன் அவமானமாகச் சாக நேரிட்டது. `மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போலத்’ தன் வாழ்வை முடித்துக்கொண்ட அந்த கௌரவமான மனிதர், ஏன் அந்தப் பெண் குழந்தையிடம் மட்டும் கௌரவக் குறைவாக நடந்துகொண்டார்?அந்த நேரத்தில் தன் மகள்கள் பற்றிய தன்னுணர்வு அவருக்கு ஏன் வரவில்லை?

யாரும் பார்க்கவில்லை என்ற சூழலில் ஒன்றாகவும் மற்ற நேரங்களில் வேறொன்றாகவும் இரட்டை நிலையில் ஆண் மனம் இயங்குகிறது. அந்தப் பெரியவர் ரொம்ப காலமாக இப்படி நடந்துகொள்பவராக இருந்திருக்கலாம். மறைவாக இருந்துகொண்டிருந்த ஒன்று முதன்முறையாகப் பிடிபட்டிருக்கலாம், பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவது போல. அல்லது இத்தனை காலம் மனதின் கற்பனையில் மட்டும் நிகழ்ந்துகொண்டிருந்த ஒன்று முதன்முறையாக நிகழ்த்தப்பட்டும் பிடிபட்டிருக்கலாம். அல்லது அந்த நிமிடத்தில் ஒரு தப்பெண்ணம் தோன்றி அவரைத் தூண்டியிருக்கலாம். பாலியல் இன்பம் துய்க்கவும் வேண்டும், அது வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும் என்ற உளவியல்தான் பெண் குழந்தைகளைப் பலிகடா ஆக்குகிறது.

எல்லை மீறும் இச்சை

புதுமைப்பித்தனின், ‘விபரீத ஆசை’ என்னும் கதை இந்த விவாதத்தை முன்னெடுத்துச்செல்ல உதவும். நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நண்பனுக்கு எல்லா உதவிகளையும் ஒருவன் செய்கிறான். `அண்ணா, அண்ணா’ என்று அவன் மனைவியும் இவன் உதவியை ஏற்றுக்கொள்கிறாள். ஒரு நாள் காலையில் இவன் நண்பன் வீட்டுக்குள் நுழைகிறான். அப்போது அவன் மனைவி, கணவன் பக்கத்தில் பதற்றத்துடன் நிற்கிறாள். ‘அண்ணா.. வந்து பாருங்களேன். என்னவோ போல இருக்காரே..’ என்று இவனை அழைக்கிறாள். இவனும் போய் அவன் நாடியைப் பார்க்கிறான். நாசியைப் பார்க்கிறான். அங்கிருந்தது மாஜி நண்பன்தான். ஆனால், இத்தனையும் இவன் புலனறிவுக்குப்பட்டதே ஒழிய இவன் மனம் முழுதும் நண்பனின் மனைவியின் உடல் மீதே இருந்தது. குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் ஈரத்தலை சொட்ட அவள் நிற்பது மட்டுமே இவன் மனதை ஆக்கிரமித்து நிற்கிறது. ‘அவன் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான், பயப்படாதீர்கள்’ என்று சொல்லி அவளை உள் அறைக்கு அழைத்துச் செல்கிறான். ‘நான் மிருகமானேன், அவள் பிணமானாள்’ என்று அப்புறம் நடந்ததை புதுமைப்பித்தன் எழுதிச் செல்கிறார்.

இது நடந்து பல காலம் கழிந்தாலும் நண்பனின் மனைவி எங்கோ தன் பெற்றோருடன் வாழப்போய் பல ஆண்டுகள் கடந்தாலும் அவர்கள் பிரியம் பொழிந்த தன் மகள் இன்று பருவ வயதினள் ஆனாலும் அன்று நடந்த சம்பவம் இவன் மனதில் தேங்கி நிற்கிறது. ‘பிணத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதில் ரங்கசாமி வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதே மாதிரி மிருக இச்சை தோன்றுகிறது…’ என்று சொல்வான்.

இடறி விழும் ஆண் மனம்

அண்ணா என அழைத்து அவள் எழுப்பிய பாதுகாப்புச் சுவர் அந்த ஆணைக் கட்டுப்படுத்தவில்லை. ஆண்டுகள் கழிந்தும் அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது குற்ற உணர்வு தோன்றவில்லை. மீண்டும் அந்த மிருக இச்சைதான் தோன்றுகிறது. இந்த இரண்டு புள்ளிகள் ஆண் மனம் குறித்த உரையாடலுக்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கின்றன. பெண் குழந்தைகளைப் பார்த்துப் பாலியல் தூண்டல் பெறும் ஆண் மனம், தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமா என்றழைக்கும் அந்தச் சிறுமிகளின் அழைப்புக்கு என்ன மரியாதை வைத்திருக்கிறது? காமத்தின் பிடியில் ஆண் மனம் ‘எல்லாத்தையும்’ மறந்துவிடுகிறது.

வீட்டுக்கு வரும் எந்த ஆணையும் தன் குழந்தைகளுக்கு மாமா என்று அறிமுகம் செய்துவைப்பதும் அக்கா என்றழைக்கிற ஒருவரின் கணவரை அண்ணே என்று அழைப்பதுமான இந்தியப் பெண் மனதின் எச்சரிக்கை உணர்வுக்குப் பின் ஒரு நெடிய, கொடிய வரலாறு இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

பெண்கள் குளிக்கும் காட்சி, ஆடை விலகத் தூங்கும் காட்சி எனத் தன் பாலியல் தூண்டலுக்கான குற்றவாளியாகப் பெண்ணையே சுட்டும் பழக்கம் நம் நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஆண்கள் குளிக்கும் காட்சியையோ ஆடை விலகத் தூங்கும் காட்சியையோ பார்த்து எத்தனை பெண்கள் பாலியல் தூண்டலுக்கு ஆளாகிறார்கள்? தவிர, இப்படி எடுத்ததற்கெல்லாம் இடறி விழும் பலவீனத்தோடு நம் ஆண் மனம் ஏன் இருக்கிறது என்று ஓர் ஆன்ம (ஆண்ம) பரிசோதனையல்லவா நாம் நடத்த வேண்டும்?

 

எதற்கும் துணியும் ஆண்கள்

திரைப்படங்களில் பெண்களின் ஆடை குறைப்பு என்பது இயல்பானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது நடிகைகளின் குற்றம் என்பதாகவும் பேசப்பட்டுவருகிறது. ஆடை குறைப்புப் படங்களைப் பெண்களா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? ஆண் பார்வையாளர்களின் இந்த ருசிக்குத் தீனி போடுவது என்ற பேரில் தம் வியாபார வெற்றிக்காக எதையும் செய்யத் துணியும் வணிக (ஆண்) மனமே பின்னணியில் இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு பரவலாக வீடுகள்வரை இணையம் வராத நாட்களில் நடிகை ஒருவர் குளிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியிருப்பதாகச் செய்தி பரவி நெட் சென்டர்களில் ஆண்கள் குவிந்ததையும், ‘அந்தக் காட்சியில் குளிப்பது என் மகளல்ல’ என்று அவருடைய தாயார் அறிக்கைவிட நேர்ந்ததையும் இந்த விவாதத்துடன் இணைத்துப் பேச வேண்டும்.

ஆண் மனம் இப்படியாகக் கட்டமைக்கப்பட்டதில் சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் பிறகு பேசலாம். இப்போதைக்கு ஆண் மனம் தனக்குள் தன் அந்தராத்மாவுடன் அந்தரங்கமாக ஒளிவு மறைவற்ற உரையாடலை நடத்தித் தனக்குள் மண்டிக் கிடக்கும் இருட்டின் மீது ஒளிவெள்ளம் பாய்ச்ச வேண்டும். எப்போதும் ஒரே முகத்துடன் வாழ ஆண்களாகிய நாம், நம் மனங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x