Published : 01 Jan 2018 12:14 PM
Last Updated : 01 Jan 2018 12:14 PM

மீண்டும் வருகிறது பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள்

ரு விஷயத்தை பிறருக்கு தெரியப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் தனியான பாணி உள்ளது. அந்த வகையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட தகவல் மோட்டார் சைக்கிள் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) தனது பரிசுக் குவியல் மூட்டையுடன் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிளில் வலம் வருவதைப் போன்ற பழைய புகைப்படத்தை வெளியிட்டு சிறப்பு தகவலையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் மீண்டும் அறிமுகமாகப் போவதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டுதான் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இங்கிலாந்தின் பிரபலமான பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் 1.2 லட்சம் பங்குகளை 34 லட்சம் பவுண்ட் (₹28 கோடி) விலை கொடுத்து வாங்கியது. அதாவது ஒரு பங்கு விலை 28.33 என்ற விலையில் இந்நிறுவனம் வாங்கியது.

பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் தற்போது ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் மிகவும் பிரபலம்.

இதேபோல மஹிந்திரா நிறுவனம் பிரான்ஸைச் சேர்ந்த பியூஜியாட் மோட்டார் சைக்கிளை தயாரிக்கும் பிஎஸ்ஏ நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கியது. இதேபோல இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.

இருப்பினும் தற்போது இரு சக்கர வாகனத்தைப் பொறுத்தமட்டில் பிஎஸ்ஏ மட்டுமல்ல யெஸ்டி பிராண்ட் மோட்டார் சைக்கிளையும் அறிமுகப்படுத்துவது குறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார்

கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்குவார். மஹிந்திராவின் கிறிஸ்துமஸ் தாத்தா பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிளை இந்திய சாலைகளுக்கு வழங்க வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x