Last Updated : 17 Dec, 2017 10:39 AM

 

Published : 17 Dec 2017 10:39 AM
Last Updated : 17 Dec 2017 10:39 AM

இல்லம் சங்கீதம் 14: உடைகளும் உறவை வலுப்படுத்தலாம்

குழந்தைபோல வளரும்

இந்த இரவுக்கு

ஒரு பெயர் சூட்ட நினைத்து

அதன் காதில்

மூன்று முறை சொல்கிறேன்

உன் பெயரை

- பழநிபாரதி

சேலையை உடுத்தியதும் ஆளுயரக் கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாகத் திரும்பிப் பார்த்தாள் லலிதா. அது மெலிதான பார்டருடன் கோட்டோவியம் போன்ற பூ வேலைப்பாடு கொண்ட ஷிபான் சேலை. திவாகர் அதை வாங்கிய தருணமும் லலிதா அதை முதன்முதலில் கட்டியதும், அப்போது அவளை அவன் கொஞ்சியதும் ஒவ்வொன்றாக மனது அசைபோட்டது.

“லலிக்குட்டி புடவை சூப்பர்...” கணவனின் வழக்கமான பாராட்டை மழலையாய் உச்சரித்த மகனின் குரல் அவளைக் கலைத்தது. மகன், சுவரில் சாய்ந்தபடி கண்களைச் சிமிட்டிப் புன்னகைத்தபோது அப்படியே திவாகரைக் கொண்டிருந்தான். அவனை அள்ளி மடியில் வைத்துக்கொண்டு மழலையின் ஊடாக மகனிடம் தென்படும் கணவனின் சாயல்களை ரசிக்க ஆரம்பித்தாள் லலிதா.

குழந்தைகளைச் சாப்பிடவைத்துப் படுக்கையில் சாய்ந்தபோது அருகில் இல்லாதபோதும் கணவனின் அண்மையை நாள்முழுதும் பரிபூரணமாக உணர முடிவதை எண்ணி வியந்தாள். அலுவலகப் பயணம் முடிந்து திவாகர் வீடு திரும்ப இன்னும் நாட்கள் இருந்தன. ஆனால், கணவன் மனைவிக்கு மட்டுமேயான அந்தரங்க நினைவுகளின் சந்தோஷ அதிர்வுகளை உடுத்தியிருந்த சேலை வாயிலாகவே லலிதாவால் உணர முடிந்தது. காதலைப் போற்றிக் கொண்டாடும் இடங்களில் மட்டும்தான் உயிரற்றவையும் இப்படி உயிர்பெற்று உலவும்.

இல்லறத்தில் சாதாரண சேலை முக்கிய இடம்பிடித்ததும், லலிதா இப்படிச் சந்தோஷமாக வளையவருவதும் கடந்த ஒராண்டாகத்தான். அதற்கு முன்னர் லலிதாவும் திவாகரும் எலியும் பூனையுமாக இருந்தனர்.

உடையால் விளைந்த உரசல்

மண வாழ்வின் தொடக்க ஆண்டுகளின் மேற்பூச்சுக்கள் உதிர்ந்து அன்றாட வாழ்க்கையை ஆரம்பித்தபோது லலிதா-திவாகர் இடையே எங்கேயோ கசப்புதட்டத் தொடங்கியது. அந்த மாதிரியான கசப்புகள் காலப்போக்கில் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்த லலிதா ஏமாற்றமடைந்தாள். எதையெடுத்தாலும் லலிதாவுக்கு எதிர்த்திசையில் திவாகர் செல்வான். வம்படியாக மல்லுக்கு நிற்கிறானா அல்லது இருவருக்கும் இடையே சுத்தமாக ஒத்துப்போகவில்லையா என ஒரு கட்டத்தில் லலிதா கவலைப்படத் தொடங்கினாள்.

திவாகரை அறிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினாள். அவனுடைய சித்தி வீட்டில் கண்ணில்பட்ட பழைய ஒளிப்படங்களில் திவாகரைப் போலவே நறுவிசாக உடுத்திய அவனுடைய தாயாரைப் பார்த்ததும் கணவன் அவ்வப்போது எடுத்துத் தரும் சேலைகளும் அவற்றைத் தான் பொருட்படுத்தாதும் லலிதாவுக்கு நினைவு வந்தன.

உடைகளில் லலிதாவைப் பொறுத்தவரை சேலை என்பது இரண்டாம்பட்சம். நெருக்கடியான நகர வாழ்க்கைக்கு உதவாது, உடலை ஒழுங்காக மறைக்காது என சேலை குறித்த அபிப்பிராயம் அவளுடைய தந்தை வாயிலாக மனதில் பதிந்திருந்தது. எனவே, சுடிதாரும் இன்னபிற உடைகளையும் அவள் விரும்பி அணிந்து பழகியிருந்தாள். திருமணத்துக்குப் பிறகும் விசேசங்கள் தவிர்த்து அவள் புடவை அணிவதில்லை. வீட்டுக்குள் நைட்டியில் சுலபமாக உணர்ந்தாள்.

ஆனால், திவாகருக்குச் சேலை குறித்த எண்ணம் முற்றிலும் வேறாக இருந்தது. லலிதாவின் உயரமும் அதற்குப் பாந்தமாக அவள் சேலை அணிந்திருந்ததுமே முதல் பார்வையில் அவளைப் பிடிக்கக் காரணமாக இருந்தது. மேலும், மறைந்துவிட்ட அவனுடைய தாயின் பாதிப்பிலும் அவர் போற்றிப் பாவித்த சேலை என்பது உடை என்பதற்கும் மேலாக அவனுள் ஆழமாகப் பதிந்திருந்தது.

கணவனின் எதிர்பார்ப்புகளை உணராத லலிதாவின் போக்கு திவாகரை மேலும் சீண்ட, இருவருக்கும் இடையிலான உருவங்காட்டாத ஒரு புகைச்சல் மூண்டது. லலிதா சற்று யோசித்திருந்தால் திவாகரின் எதிர்பார்ப்பை உள்வாங்கிக்கொண்டு அவனுக்கு இசைவாகத் தன்னை மாற்றிக் கொள்ளவோ தனது இயல்பைப் புரியவைக்கவோ செய்திருக்கலாம். ஆனால், இதெல்லாம் ஒரு விஷயமா என லலிதா அசட்டையாக இருந்தது பெரும் பிரச்சினையானது.

காதல் வலையான சேலை

ஒருவழியாக திவாகரின் சித்தி வாயிலாகச் சேலையின் மீதான பார்வை மாறியதும் அந்தப் பாரம்பரிய ஆடையில் உலவுவதை அதிகரித்தாள். வேப்பிலை அடித்தாற்போல திவாகரின் விழிகள் விரிந்ததையும் அவளை அவன் பார்வையால் விழுங்கியதையும் பார்த்து சுவாரசியமானாள். லாவகமாய் அந்த அனுபவத்தைத் தங்கள் இல்லற வாழ்க்கையின் ரசம் சேர்க்கும் அம்சமாகவும் மாற்றினாள். கணவனின் கணிப்புக்கு ஏற்ப தனது உடல்வாகுக்கு வேறெந்த உடையைக் காட்டிலும் சேலையில் சிறப்பாக இருந்ததைக் கண்டுகொண்டாள்.

திவாகரன் பிரியமான தேர்வுகளும் சேர்ந்துகொள்ள, சேலைகளுக்கு லலிதாவும் கட்டுண்டுபோனாள். கைத்தறி, பருத்தி, பட்டு தொடங்கி பல்வேறு டிசைனர் சேலைகள் வரை ரகம் ரகமாய் லலிதாவிடம் சேர்ந்தன. இப்போது திவாகருக்காக மாலையில் ஒருமுறை சேலை மாற்றுவதை லலிதா வழக்கமாகக்கொண்டிருக்கிறாள். இது அவளுக்கும் புத்துணர்வு தந்தது. தவிரவும் மனைவியை ஆராதிக்கும் கணவனைப் பதிலுக்குக் கொண்டாடவும் ஆரம்பித்தாள்.

ரசனைகளைத் தேடுவோம்

காலணிகளைக் கழற்றிவிடுவதில் தொடங்கி படுக்கை விரிப்பு பராமரிப்புவரை திவாகர் கடைப்பிடித்த ஒழுங்கு லலிதாவையும் பற்றிக்கொண்டது. ரசனை, ஒழுங்குக் குறைவுகளில் தான் அசட்டையாக இருந்தவற்றை அடையாளம் கண்டு திருத்தம்செய்தாள். எல்லாவற்றுக்கும் உச்சமாகத் தம்பதிக்கு இடையேயான அந்தரங்கத்தில் இந்தச் சேலைக்குத் தனி அரியணை கிடைத்தது. லலிதாவே வியக்கும் வகையில் திவாகர் சேலைகளைத் தேர்வு செய்வதும் லலிதா அதை முதல்முறை உடுத்தும் நாள் அவர்களின் தனிப்பட்ட விசேஷ நாளாக மாறுவதும் தொடர்கிறது.

சேலை குறித்த லலிதாவின் ஆரம்ப மனத் தடைகள் எல்லாம் நியாயமானவைதான். பல்வேறு வேலைகளைச் செய்யவும் பயணங்களுக்கும் சேலை ஏற்ற உடையல்ல. பெண்களின் உடைத் தேர்வு அவர்களது தனி உரிமையாகவே விடப்பட வேண்டும். ஆனால், வீட்டில் இருக்கும்போது கணவனுக்குப் பிடித்த உடையை மனைவி அணிந்துகொள்வதும் மனைவிக்குப் பிடித்த வகையில் கணவன் தலை கிராப்பு வைத்துக்கொள்வதும் தாடி/மீசையை மழித்துக்கொள்வதும் அன்பையும் அன்னியோன்யத்தையும் கூட்ட உதவும் சின்னச் சின்னக் காரணிகள்.

தம்பதியருக்கு இடையிலான காதலைக் கொண்டாடவும் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இருவருக்கும் மத்தியிலான ஒருமித்த ரசனைகளை அடையாளம் காண்பது அவசியம். வாசிப்பு, இசை என்று அவை தனித்துவமாகவும் அமையலாம். அல்லது லலிதாவின் அனுபவம் போன்று அவற்றை உடை போன்ற சாதாரண விஷயங்களிலும் அடையாளம் காணலாம். இயல்பில் இருவருக்கும் பொதுவான ரசனை தென்படாது போனால் லலிதா எதிர்கொண்டதுபோல இணையின் ரசனையை உணர்ந்து, அதை பெரிதாக்கி இருவருமே பயனடைவதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x