

ஆ
ராய்ச்சி என்பது மிகப் பெரும் அறிஞர்கள் செய்ய வேண்டிய பணி. நம்மால் செய்ய முடியாது என்று நினைத்து அதிலிருந்து நாம் ஒதுங்கிவிடுகிறோம். இதனால் நமக்கும் ஆராய்ச்சிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஆராய்ச்சி என்ற வார்த்தையைக் கேட்கும்போதும் ஆராய்ச்சியாளரைப் பார்க்கும்போதும் நம்மிடையே வியப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், ஆராய்ச்சி சாதாரண விஷயம்தான். ஆர்வம் மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம். அந்த ஆர்வத்தைச் சரியான திசையில் கொண்டு சென்றால் மாணவர்களை ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கலாம் என்பதை நிரூபித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மலர்ச்செல்வி. சிறுவயதில் இருந்தே பள்ளி மாணவர்களை இதற்காகத் தயார்படுத்திவருகிறார் அவர். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துவருகிறார் அவர்.
மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் மலர்ச்செல்வி. வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்ற இவர் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப்பட்டி பல்கலைக்கழக நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். தன் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆராய்ச்சி முறைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்திவருகிறார்.
“ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்துகிறோம். ஆய்வு செய்வதற்காக மாணவர்களை நேரடியாகக் களத்துக்கு அழைத்துச் செல்கிறோம். சிறுவயதிலேயே கள ஆய்வில் ஈடுபடுவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆய்வு குறித்த பயம் இருக்காது. பள்ளிப் பருவத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் மாணவர்கள் சிலர் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு கல்லூரியிலும் ஆய்வைத் தொடர்கின்றனர்” என்கிறார் மலர்ச்செல்வி
அணில், ஓணான், வண்ணத்துப்பூச்சி போன்ற உயிரினங்களைத் துன்புறுத்துவது சிறுவர்களுக்கு விளையாட்டாக இருக்கும். ஆனால், தொடர் ஆய்வுகளில் ஈடுபடுவதால் உயிரினங்களின் மீது மாணவர்களுக்கு அக்கறை ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இவர்.
2012-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றிபெற்றனர். இந்த வருடம் 10-வது ஆண்டாக இந்தப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் கலந்துகொண்டனர். வேம்பு, நொச்சி, துளசி, கற்பூரவல்லி, பச்சிலை, தும்பை இலைகளைக் கொண்டு டெங்கு கொசு, புழுக்கள் ஆகியவற்றை அழிக்கும் மூலிகைத் திரவத்தை இவரது மாணவர்கள் தயார் செய்துள்ளனர். இந்தத் திரவம் மாநிலக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
“ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பயம் இருக்காது. குழு மனப்பான்மை ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் உற்றுநோக்கும் தன்மை ஏற்படும். ஏதேனும் பேரிடர்கள் நிகழ்ந்தால் அது இயற்கையாக உருவானதா? செயற்கையாக உருவானதா என அவர்கள் சிந்திக்கின்றனர்” என்கிறார் மலர்ச்செல்வி.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி