Published : 09 Dec 2017 05:10 PM
Last Updated : 09 Dec 2017 05:10 PM

துயரம்: கண்ணீரில் தத்தளிக்கும் மீனவப் பெண்கள்

 

க்கி புயலின் தாக்கத்தில் இருந்து சமவெளிப் பகுதிகள் மெல்ல மீளத் தொடங்கியுள்ளன. மரங்கள் முறிந்ததால், ஆங்காங்கே விழுந்து கிடந்த மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு வெளிச்சம் எட்டிப் பார்க்கிறது. குடியிருப்புகள், விவசாய நிலங்களில் சூழ்ந்திருந்த தண்ணீரும் வடிந்த நிலையில், இன்னமும்கூடக் கண்ணீரோடு பரிதவித்துக்கொண்டிருப்பது கடற்கரைக் கிராமங்கள்தாம்!

சோகம் சூழ்ந்த கிராமங்கள்

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலணி வரையுள்ள 44 மீனவக் கிராமங்களிலும் சோகமயம்தான். ஒக்கி புயலின் கோரதாண்டவம் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களையும் கடுமையாகத் தாக்க, இன்னும்கூட நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை வந்து சேரவில்லை. ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் மீன்பிடிக்கச் சென்றவர்களில் மீண்டு வராதவர்களின் குடும்பத்தினர் கடற்கரையைப் பார்த்த வண்ணம், காத்துக் கிடக்கும் நிலை நெஞ்சை உலுக்குகிறது.

மணக்குடி மீனவக் கிராமத்துக்குச் சென்றிந்தபோது உள்ளூர் தேவாலயத் திருவிழா தொடங்கியிருந்தது. ஆனாலும், வழக்கமான உற்சாகம் இல்லை. சம்பிரதாயமாகத் தேவாலயத்துக்குக் குறை வைக்காமல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. தேவாலய வளாகத்தில் பலூன் கடை போட்டிருந்த இலந்தையடிதட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர், “இவுக கடலுக்குப் போயிட்டு, சுகமா திரும்புனாத்தான் எங்களுக்கு வியாபாரம். டவுணுல பெருசு, பெருசா கடைபோட்டு இருக்காங்களே எல்லாரோட வியாபாரமும் இவாளு கடலுக்குப் போயி திரும்புன அப்புறம்தான்…ஆனா பாருங்க உசுருக்கு நிச்சயம் இல்லாத தொழிலு. இதோ இந்தக் கிராமத்துலயே மூணு பேரு இன்னிக்கு வரைக்கும் கரை திரும்பலை. அந்தச் சோகத்துலதான் ஊரே உறைஞ்சு போய்க் கிடக்கு”என்கிறார். இங்கு மட்டுமல்ல; மொத்த குமரி கடற்கரைக் கிராமங்களின் நிலையும் இதுதான்.

ஒரே குடும்பத்தில் மூன்று பேர்

தேவாயலயத்தின் பின் பகுதியில் உள்ள குட்டிச் சந்தில் வசிக்கிறார் அந்தோணியம்மாள் (68). வாசலிலேயே வரிசையாக பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருக்கின்றன. வாசலில் இருக்கும் அந்தோணியம்மாவால் பேசக்கூட முடியவில்லை. பிள்ளைகளின் அரவணைப்பில் வாழ்ந்துவருபவர். இவருக்கு மூன்று மகன்கள், ஐந்து மகள்கள். மீன்பிடிக்குச் சென்ற மைக்கேல் அமீன், சகாயராஜ் ஆகிய இரண்டு மகன்களும் மருமகன் சகாயராஜும் இதுவரை கரை திரும்பவில்லை. அந்தச் சோகம் வீடு முழுவதும் படர்ந்திருக்கிறது. மைக்கேல் அமீனுக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. ஆறு மாதங்களே ஆன அவருடைய மகள் ருகி நிலவரம் தெரியாமல், மெலிதாக நம்மைப் பார்த்து புன்னகைத்த நொடியில் நம்மையும் சோகம் தொற்றிக்கொண்டது.

மைக்கேல் அமீனுடைய மனைவி சகாயரோஷியைத் (26) தேற்றி விட்டுத்தான் பேச முடிந்தது.“27-ம் தேதி வீட்டுல இருந்து போனாங்க. 28-ம் தேதி கொல்லத்தில் இருந்து மீன்பிடிக்கப் போறதா அவுங்க பேசுனதுதான். அதுக்குப் பின்னாடி இன்னிக்கு வரை பேசல. கடலுக்குப் போறப்போ போன் போட்டு குழந்தையை நல்லா பாத்துக்கோ. கடலுக்குப் போயிட்டு வரும்போது, பிள்ளைக்கு என்ன வாங்கிட்டு வரணும்னு கேட்டாங்க. இப்போ என் பிள்ளையும் அவுங்க போட்டோவப் பார்த்து சிரிக்குறா. ருகிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று கேட்கிறார்.

பாதுகாக்கத் தவறிய அரசு

“அவுங்ககூட மொத்தம் 16 பேரு மீன்பிடிக்கப் போனாங்க. அதுல மூணு பேரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துருக்காங்க. அந்த மூணு பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்காங்க. மத்தவங்க உயிருக்குப் போராடி, ஒரு கட்டத்துல, தண்ணீர்ல மூழ்கிட்டதா அவங்க சொல்றாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உடைந்து அழுகிறார். மேலும் தொடர்ந்த சகாயரோஷி, அரசு மீனவர்களைப் பாதுக்காகத் தவறிவிட்டது என்கிறார்.

“அரசு ஒண்ணுமே செய்யல. எங்க வீட்டுக்குக்கூட வந்து பாக்கல. எதிர்கட்சிங்கதான் வர்றாங்க. அவுங்க ஆட்சி, அதிகாரத்துல இருந்தாலும் இதேதான் எங்க நிலை. மீனவனா பிறக்குறது அவ்வளவு பெரிய தப்பா? எங்க மூலமாத்தான் அரசுக்கு அதிகமா அந்நிய செலவாணி வருதாம். ஆனா எங்க வீட்டுக்காரங்களை இந்த அரசுங்க பாதுகாக்கலியே…” என்றவர் மயக்கமுற்றுச் சரிந்தார். உறவினர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி அவரைத் தேற்றியது இன்னும் கண்களைவிட்டு அகல மறுக்கிறது.

மணக்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவர் அலெக்சாண்டர், “பொதுவாகவே இந்தப் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போவாங்க. கொல்லத்தில் இருந்து பெரும்பாலும் கிளம்புவாங்க. 5 நாளுல இருந்து, அதிகபட்சம் 15 நாள்வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பாங்க. ஆனா, இப்போ எங்க ஊருல மாயமானவங்க எல்லாருமே 5 நாளுல திரும்பி வந்துருக்க வேண்டியவங்க. பொதுவா கடலுக்குக் கணவனை அனுப்பிட்டு, தேவாலயத்துல கர்த்தரே ரட்சியும்னு கதியா கிடப்பாங்க சிலர்.

இன்னும் சிலர் சமைக்கும்போதுகூட இடையிடையே வீட்டுல இருக்க கர்த்தரு படம் முன்னாடி நின்னு, கடலுக்குப் போனவுங்க, சுகமா திரும்பி வரணும்னு பிரார்த்தனை செய்வாங்க. ஆனா, அரசுக்கு முறையிட்டா என்ன நடவடிக்கை எடுக்குது? மீனவர்களையே இரண்டாம்பட்சமாத்தான் பாக்குறாங்க. இன்னிக்குவரை தமிழகத்தில் மாயமான மீனவர்களைத் தேட, சொந்தமாக ஹெலிகாப்டர் வசதிகூட இல்ல. மீனவர்களுக்குத் தகவல்கள் பரிமாறுவதற்கு வாக்கி டாக்கி வழங்குவதாகப் பணம் வசூலிச்சாங்க. அஞ்சு வருசம் ஆச்சு. இன்னும் கொடுக்கல.

இதோ இப்படித்தான் ஒவ்வொரு வீட்டுலயும் அழுகைச் சத்தம் கேட்குது. அரசாங்கமும் இங்க வந்து பாத்தாதானே கேட்கும்? அமைச்சர்கள் பிரச்சினை தீரும்வரை கடற்கரை கிராமத்துலதானே தங்கி இருக்கணும்?”என்று அரசின் பாராமுகத்தின் விளைவுகளைப் பட்டியலிடுகிறார்

மாயமான சகாயராஜுடைய மனைவி மேரிகலாவின் வீட்டிலும் சோகம் குடி கொண்டிருக்கிறது. மேரிகலாவிடம் பேசியபோது, “மூத்த பொண்ணு ரனி ஷாஜிலா 11-ம் வகுப்பும் இளையவ ரஷ்னி ஷாஜிலா மூணாம் வகுப்பும் படிக்குறாங்க. வழக்கமா தொழிலுக்குப் போனா நாலு நாள்ல திரும்பி வந்துடுவாங்க. கடலுக்குப் போற முன்னாடியும், கரையில் காலு படுற முன்னாடியும் போன் போட்டுருவாரு. ஆனா, இப்போ இதுவரை தொடர்பு கொள்ளவே இல்ல. சின்னத்தை வாங்க காட்டுன அக்கறையில் பாதியாச்சும், எங்க மேல காட்டிருக்கக் கூடாதா? இந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் வைச்சுகிட்டு தவிக்குற தவிப்பு இனி யாருக்குப் புரியப் போகுது” என்கிறார்.

தூரித நடவடிக்கை தேவை

இனியாவது அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். “கஷ்டமோ நஷ்டமோ எங்களோட போகட்டும். இப்போ அரசு மீட்பு பணியைத் துரிதப்படுத்தட்டும். என் கணவரை மீட்கணும், கூடப்போன எல்லாரையும் மீட்கணும். இனியாச்சும் இப்படிக் காத்து, புயல்னு வந்தா முறையா தகவல் கொடுக்கணும், கடலுக்குள்ள மீன் பிடிக்குற மீனவனுக்கும் கடலோரக் காவல் படையினர் போய் தகவல் சொல்லணும்னு எழுதுங்க!”என்றார்.

குமரியில் இதுவரை 1,013 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்கின்றனர் மீனவப் பிரதிநிதிகள். இருள் சூழ்ந்து கிடக்கும் கடற்கரைக் கிராமங்களையும் மாயமான மீனவர்களின் குடும்பங்களையும் திருப்திபடுத்தும் வகையில் உடனே மீட்டு, இவர்கள் வாழ்வை சுடர்விட்டு செய்யும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது பொதுச் சமூகத்தின் கடமை.

படங்கள்: என்.சுவாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x