Published : 12 Dec 2017 03:28 PM
Last Updated : 12 Dec 2017 03:28 PM

கோடுகளைக் கற்பிப்போம்!

 

ருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, பொருளாதாரம் தொடங்கி அத்தனை துறைகளிலும் ஓவியத்தின் பயன்பாடு உள்ளது. அத்தகைய ஓவியக் கலையின் அடிப்படையை அறிந்துகொள்வது சிறார்களுக்கு மிகவும் அவசியம். அதிலும் ஓவியத்தின் மகத்துவத்தை மாணவர்களுக்குப் புரியவைத்துச் சுவாரசியமாகக் கற்பிக்கும் ஓவியர் கிடைத்தால் எப்படி இருக்கும்? சமூக அரசியல் சிக்கல்களைத் தன் தூரிகையால் துளைத்தெடுக்கும் படைப்பாளியும் சென்னை ஓவியக் கல்லூரிப் பேராசிரியருமான ஓவியர் புகழேந்தி, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஓவியக் ல்வியைக் கற்பித்துவருகிறார். கடந்த வாரம் திருப்பூர் சிங்கனூர், வெள்ளியங்காடு ஆகிய தாய்த் தமிழ்ப் பள்ளிகளில் மழலைகளுக்காக ஓவியப் பயிற்சி அளிக்க வந்தவரை சந்தித்தோம்.

படிப்பு கெடாது!

மழலைகளிடம் மென்மையாக உரையாடிக்கொண்டிருந்தார் புகழேந்தி. ஓர் இலையைக் கொடுத்து அதைப் பார்த்து வரையச் சொன்னார். “இலை தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். வளைவுகள், நரம்புகள், வண்ணங்கள் என உன்னிப்பாகக் கவனித்து வரைய, அதில் பல விஷயங்கள் இருக்கின்றன. உற்றுநோக்கி வரையத் தொடங்கும்போது, ஓவியம் அழகு பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்றபடியே சிறுவர்களின் பிஞ்சு விரல்களைப் பிடித்து பென்சிலால் அழகிய கோடுகள் இட்டார்.

“மொழியைப் பழகும் முன்னே குழந்தை கிறுக்கத் தொடங்கிவிடுகிறது. அதாவது, ஓவியம் வரையத் தொடங்கிவிடுகிறது! ஓவியம் வரைந்தால், இயல்பாகவே கவனிக்கும் திறன் அதிகரித்து, கல்வித் திறன் மேம்படும். நிச்சயமாகப் படிப்பு கெடாது. ஆகவே, ஓவியம் வரையும் குழந்தையைக் கண்டு பெற்றோர் பயப்படத் தேவை இல்லை. உலகின் மிகச் சிறந்த ஓவியர்கள் பலர் அறிவியலாளர்களாகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவெடுத்திருப்பது வரலாறு” என்கிறார் புகழேந்தி.

உற்றுநோக்குபவர்கள் சாதிக்கிறார்கள்!

மாணவர்களுக்கு புகழேந்தி சொல்லித்தர ஆரம்பித்த 5 மணி நேரத்துக்குள் அவர்கள் வரையும் ஓவியங்களில் மாற்றங்கள் தெரிகின்றன.

“ஓவியத்தின் பலமே கோடுகள்தாம். நேர்கோடு, படுக்கைக்கோடு, சாய்வுக்கோடு, வளைகோடு, அலைகோடு இப்படி ஓவியத்தில் பல்வேறு விதமான கோடுகள் உண்டு. அதில் திண்மையான கோடுகள், மெல்லிய கோடுகள் தன்மையைப் புரியவைத்துச் சொல்லித்தர வேண்டும். கோடுகளின் தன்மைகள், அவற்றின் வகைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளாமல் வரைய முடியாது. அதைச் சொல்லித்தர ஆரம்பித்த சில மணி நேரத்தில், படைப்பில் அவர்களது ஆளுமை ஜொலிக்கிறது. ஓவியம் வரையக் கற்றுத் தருவதைக் காட்டிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்னுடைய பணி என்று நம்புகிறேன். கல்லூரி விடுப்பு நாட்களில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடர்ந்து ஓவியப் பயிற்சி அளிக்கிறேன்.

கலை குறித்த கல்வி, தமிழகப் பள்ளிகளில் மிகவும் பின்தங்கி உள்ளது. குழந்தைகள் ஒரு பொருளை எப்படி உற்றுநோக்குகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். உற்றுநோக்கிக் கவனித்து வரையத் தொடங்கும்போது, மனதின் கிரகிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்றைக்கு எந்தத் துறையாக இருந்தாலும் உற்றுநோக்குபவர்கள் சாதிக்கிறார்கள். ஓர் ஓவியத்தை வரைந்துவிட்டு அதைப் பார்த்து அப்படியே வரையச் சொல்வது ஓவியக் கலை அல்ல. ஒவ்வொரு கோடுகளையும் சொல்லித்தர வேண்டும். ” என்கிறார் புகழேந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x