Last Updated : 06 Dec, 2017 11:07 AM

 

Published : 06 Dec 2017 11:07 AM
Last Updated : 06 Dec 2017 11:07 AM

வியப்பூட்டும் இந்தியா: சலார் ஜங் அருங்காட்சியகம்

லகிலுள்ள மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று, ஐதராபாத்திலுள்ள சலார் ஜங் அருங்காட்சியகம். தனிப்பட்ட மனிதர் ஒருவர் சேமித்த பொருட்களை வைத்து இவ்வளவு பெரிய அருங்காட்சியகத்தை அமைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். இது ஐதராபாத் நகரின் மூஸி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலிகான் சலார் ஜங், ஏழாவது நிஜாமின் பிரதம மந்திரியாக இருந்தவர். இவரின் வருமானத்தின் பெரும் பகுதியை, அரிய பொருட்கள் வாங்கிச் சேமிப்பதில் செலவிட்டார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலைநுட்பமான பொருட்களை எல்லாம் தேடித் தேடி வாங்கினார். அப்படி அவர் சேகரித்த 35 ஆண்டுகாலப் பொக்கிஷங்களே இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்களிலிருந்து அவர் வாழ்ந்த காலம் வரையிலான பொருட்களைச் சேகரித்திருந்தார். ஜப்பான், சீனா, மியன்மார், நேபாளம், பாரசிகம், எகிப்து, வட மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, கலைப் பொக்கிஷங்களை அள்ளிவந்தார்.

உலோகச் சிற்பங்கள், சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள், தந்தத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமானக் கலைப் பொருட்கள், விதவிதமான துணிகள், பீங்கான் ஜாடிகள், விரிப்புகள், கடிகாரங்கள், இருக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் என்று சுமார் 42,000 பொருட்களும் 60,000 நூல்களும் 950 கையெழுத்துப் பிரதிகளும் இங்கே உள்ளன.

1951-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். இரண்டு அடுக்குக் கட்டிடத்தில் 38 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு வசதியாக வரிசைப்படுத்தியுள்ளனர்.

இவற்றுடன் பெரிய நூலகம், படிக்கும் அறை, பதிப்பகம், ரசாயன முறையில் பொருட்களைப் பாதுகாக்கும் ஓர் ஆய்வகம், விற்பனையகம் போன்றவையும் உள்ளன.

ராஜா ரவிவர்மா ஓவியங்கள், ஔரங்கசீப், ஜஹாங்கீர், நூர்ஜஹானுடைய வாள்கள், திப்புசுல்தானின் அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் என்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கப் பல பொருட்களை இங்கு கண்டு களிக்கலாம்.

முக்காடு போட்டிருக்கும் ரபேக்கா சிலை மிகவும் புகழ்பெற்றது. மெல்லிய துணி மூடியிருப்பதால் முகம் மங்கலாக இருப்பதுபோல் வடிவமைத்துள்ளனர். 1876-ல் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ள குரான் நூல்கள், விதவிதமான அளவுகளிலும் வடிவங்களிலும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம், வெள்ளித் தகடுகளில் எழுதப்பட்ட குரான், மிகச் சிறிய குரான் போன்று பல ஆச்சரியங்களுக்கு இங்கே பஞ்சமில்லை.

6CHSUJ_SALAR8right

கடிகாரங்களுக்கு என்று தனி அறை உள்ளது. பழங்கால சூரியக் கடிகாரத்திலிருந்து 20-ம் நூற்றாண்டின் அதிநவீன கடிகாரங்கள்வரை வைக்கப்பட்டிருக்கின்றன. பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடிய மிகச் சிறிய கடிகாரமும் உள்ளது.

இங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்த ஒரு பொருள் என்றால் அது, ‘இசைக்கும் கடிகாரம்’தான். 200 வருட கடிகாரம். ஒருமுறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 350க்கும் மேற்பட்ட உலோக பாகங்களால் இந்தக் கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கடிகாரத்தின் மேல் பகுதியில் உள்ள கதவு திறக்கப்பட்டு, தாடி வைத்த ஒரு மனித பொம்மை வெளியே வருகிறது. சுத்தியலால் ஓர் உலோகத் தகட்டின்மீது ஓங்கி அடித்துவிட்டுச் சென்றுவிடுகிறது. இதைப் பார்ப்பதற்கே மக்கள் அதிகமாக இங்கே வருகிறார்கள்.

இருக்கை வசதிகளுடன் கூடிய பெரிய அறையில் அமர்ந்து, காத்திருந்து, மணியடிப்பதைப் பார்த்துச் செல்கிறார்கள்.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x