Last Updated : 03 Dec, 2017 12:26 PM

 

Published : 03 Dec 2017 12:26 PM
Last Updated : 03 Dec 2017 12:26 PM

பெண்ணுக்கு நீதி 12: தற்கொலைகள் தடுக்கப்படக்கூடியவையே

மூகம் ஒரு தனிமனிதனைச் சாவை நோக்கித் தள்ளுவதையே தற்கொலை என்று எளிதாக வகைப்படுத்தி முடித்துவிடுகிறோம். ‘தற்கொலை ஒன்றும் தனி ஒருவன் விரும்பி ஈடுபடும் செயலோ தற்செயல் நிகழ்வோ அல்ல. வீம்புக்கும் விளையாட்டுக்கும் நடத்தப்படும் விஷயமும் அல்ல. அது மன அழுத்தத்தின் வெளிப்பாடு; சமுதாயத்தை உதவிக்கு அழைக்கும் கூப்பாட்டின் வெளிப்பாடே அது. எனவே, அது தவிர்க்கக்கூடியது, தீர்க்கக்கூடியது, குணப்படுத்தக்கூடியது’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் உளவியல் நிபுணர் ராமசுப்பிரமணியன். பிறகு ஏன் தற்கொலைகள் அதிகரிக்கின்றன?

கார்கால மேகங்களைப் போல் கவலைகள் திரண்டு, நெஞ்சத்தை நஞ்சாக்குவதன் விளைவுதான் தற்கொலை எண்ணம். தவிர்க்க முடியாததா தற்கொலை? ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. தொன்மக் கதைகளில் சொல்லப்படும் நல்ல தங்காள் தற்கொலைச் சம்பவத்தின் நீட்சியைப் போல, அதன் தாக்கம் இந்தக் காலப் பெண்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறதோ?

தன்னம்பிக்கையின்மையின் அறிகுறி

தற்கொலை ஒரு நோய்க் குறியீடு என்கிறார்கள் உளவியலாளர்கள். தற்கொலைக்கு முன்னால் ஒருவரின் நடவடிக்கை, செயல், பேச்சு ஆகியவை மாறுபடும். இதை உணர்ந்து உடனே சரிசெய்ய வேண்டும். தற்கொலை செய்துகொள்ளும் போக்கு மாணவ, மாணவியர் மத்தியில் அதிகரித்துள்ளது. எளிதில் தீர்த்துவிடக்கூடிய பிரச்சினைகளுக்காகக்கூடத் தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள். யதார்த்தத்தை எதிர்கொள்ளவும், எதிர்மறைச் சூழலில் வெற்றியடையவும் தேவையான தன்னம்பிக்கை இன்றைய தலைமுறைக்கு இல்லாமல்போனதன் அறிகுறிதாம் அதிகரித்துவரும் தற்கொலைகள்.

“நாளைக்கு உங்க அப்பா அல்லது அம்மாவோட ஸ்கூலுக்கு வரணும்” என்று வார்த்தைகளில் கண்டிப்பு காட்டினார் வகுப்பாசிரியை. அதைக் கேட்ட அபிராமி, அன்னக்கிளி, சரஸ்வதி, துர்கா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய நான்கு சிறுமிகளும் மௌனமாக அழுதனர். ஒன்பதாம் வகுப்பில் பருவத் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அழுதபடி நின்ற அவர்களைப் பார்த்து வகுப்பிலிருந்த மாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள்.

மறுநாள், அந்தக் குக்கிராமம் பதறிப்போனது. ஊர் எல்லையில் தரைக் கிணற்றில் சடலங்கள் மிதந்தன. விடிந்தவுடன் சைக்கிளில் வரும் பால்காரர்தான் அந்தச் செய்தியை ஊர் முழுக்கக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அபிராமியும் அன்னக்கிளியும் உயிர்விட்டிருக்க, அந்தச் சடலங்களுக்குப் பக்கத்தில் உறைந்து நின்றிருந்தார்கள் ஊர்க்காரர்கள்.

இரண்டறக் கலந்த பொறுப்புகள்

வாழ்க்கையின் எல்லைக்கோட்டை நெருங்கியவர்களே சாவைக் கண்டு அஞ்சும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தைரியம் என்று சொல்வதா, கோழைத்தனம் என்பதா? பாடச்சுமை, தேர்வில் தோல்வி, போதிய மதிப்பெண் பெறாமை, பெற்றோர்களின்/ஆசிரியர்களின் அதீத எதிர்பார்ப்பு, தெளிவற்ற சிந்தனை, காதல் தோல்வி, ஒருதலைக் காதல், நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத மனநிலை, நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்று தற்கொலைக்கான காரணங்கள் நீள்கின்றன.

‘அன்னை என்பவள் முதல் ஆசிரியை, ஆசிரியர் என்பவர் இரண்டாம் தாய்’ என்பார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பொறுப்புகள் இரண்டறக் கலந்தவை. வாழ்க்கையில் உயர்வு காணும்போதெல்லாம் மாணவர்கள் நினைவுகூர்வது முதலில் ஆசிரியர்களைத்தாம். பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் குழந்தைகளைக் கண்டித்துத் திருத்தும் பொறுப்பை விட்டிருந்தது அந்தக் காலம். தலை, கண்களைத் தவிர வேறு எந்த இடத்தில் அடித்தாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்னவர்களும் உண்டு. அதற்குக் காரணம், தங்களது பிள்ளைகள் ஒழுக்கம், நற்பண்புகளோடுகூடிய கல்வியைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் கல்விமுறை, வாழ்க்கைக் கல்வியாக வளர்ச்சி பெறவில்லை. மீன்களை மட்டுமே கையில் கொடுக்கத் தெரிந்த கல்விமுறைக்குத் தூண்டில்களைக் கொடுக்க வேண்டுமென்று ஒருபோதும் தோன்றியதே இல்லை. விழாமல் இருப்பதல்ல, ஒவ்வொருமுறை விழும்போதும் மீண்டு எழுவதுதான் வாழ்க்கை என்று சொல்லித் தரப்படவில்லை. எனவே, மேற்கண்ட சம்பவத்தில் பள்ளியில் ஆசிரியை கண்டிப்பு காட்டியது மட்டுமே அந்தச் சிறுமிகளின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்தத் தற்கொலைக்கு ஏதோ ஒரு விதத்தில் நாமும் இந்தச் சமுதாயமும் காரணமாக இருக்கிறோம்.

தொழில்நுட்பத்தால் தொலைந்த வடிகால்

இளம்பருவத்தினரின் ஆறாம் விரலாக செல்போன்களே உள்ளன. உலகத்தையே ஒன்றிணைத்துவிடும் செல்போன்கள் அருகில் உள்ளவர்களை விளிம்புக்குத் தள்ளிவிட்டன. உடனிருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகும், துன்பம் பாதியாகும் என்ற உண்மை உணரப்படவில்லை. பகிர்ந்துகொள்ளப்படாத மன அழுத்தம் வடிகால் இன்றி, ஆற்றுப்படுத்துபவர் இன்றி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும், வேலைப்பளு காரணமாக இளம்பருவத்தினருக்கான நேரத்தைப் பெற்றோர்களால் ஒதுக்க இயலாமல் போகிறது. அப்படியே நேரம் ஒதுக்கினாலும், தோழமையை முன்னிறுத்தித் தோள் கொடுக்கத் தெரிவதில்லை.

சிரிப்பைப் பற்றி மட்டுமே சிந்திக்கிற மாணவர்களுக்கு அழுகையும் அடங்கியதுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லித்தர வேண்டும். சிகரத்தை மட்டுமே எதிர்பார்க்கும் அவர்களுக்கு, பள்ளத்தாக்குகள் உள்ள பாதைகளும் குறுக்கிடும் என்பதை உணர்த்த வேண்டும். தோல்வியை வெற்றியின் படிக்கட்டாகப் பார்க்கும் பக்குவத்தைப் பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் சக்தியைத் தரும் வாழ்க்கைக் கல்வியாகக் கல்விமுறை மாற்றப்பட வேண்டும். தங்களது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெகிழ்வுத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். ஆனால், எல்லாப் பிரச்சினைகளையும் எல்லா நேரமும் எல்லாரிடமும் சொல்லவிட முடியாது. ஆகவே, பள்ளிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தேவை மனக்கூராய்வு

உயிர் உள்ளவர்களைவிடப் பிணங்கள் அதிகம் பேசும் என்று சடலக் கூராய்வு மருத்துவர்கள் சொல்வார்கள். அது போல, மனக்கூராய்வு செய்து மனக்குறைகளை, மனபேதங்களை, மன ஓட்டங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் புரிந்துகொள்வதும் அதற்கு நிவாரணம் தருவதும் தற்கொலைக் தடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அக்கறையுள்ள செயல்பாட்டாளர்கள் ஆகியோர் ஒன்றுகூடி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

(பாதைகள், விசாலமாகும்)

கட்டுரையாளர் முனைவர், நீதியரசர்

தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x