Last Updated : 31 Dec, 2017 11:34 AM

 

Published : 31 Dec 2017 11:34 AM
Last Updated : 31 Dec 2017 11:34 AM

இல்லம் சங்கீதம் 16: பேசித் தீராத காதல்!

என்ன பேசும் நம்மைப் பற்றி

எழவெடுத்த ஊரென்று பயந்து பயந்து

எதுவுமே பேசாமல் போய்விடுகிற உன்னைப் பற்றி

எல்லோரிடமும் பேசிக்கொண்டே இருக்கிறது

நம் காதல்!

- யுகபாரதி

அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், குமரனின் கைகளைக் குலுக்கி, “அருமையா பேசினீங்க சார்...” என்றார். முகம் தெரியாதவர்கள் பலர் பாராட்டும்போது குமரனுக்குப் பெருமையாக இருந்தாலும் அடுத்த கணமே அவன் மனதை வேதனை சூழ்ந்துகொள்ளும். மாதக் கணக்கில் தன்னுடன் பேசாத மனைவியுடன் குடும்பம் நடத்துவதை வெளியே சொல்லவா முடியும்?

மௌனத்தின் பாதையில்

குமரன் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறான். ஒருமுறை வாடிக்கையாளர் கூட்டத்தில் வங்கி சேமிப்புத் திட்டமொன்றை குமரன் விளக்கிய விதம் உயரதிகாரிகளுக்குப் பிடித்துப்போனது. அதன் பின்னர் நடந்த பல நிகழ்வுகளில் கடன், காப்பீடு, வாடிக்கையாளர் விழிப்புணர்வு எனப் பல்வேறு தலைப்புகளில் குமரனே பேச அழைக்கப்பட்டான். அவன் பேச்சில் கவரப்பட்ட முக்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் நிறுவன நிகழ்வுகளிலும் குமரனைப் பேச அழைத்தனர். மாலைப் பொழுதுகளிலும் விடுமுறை தினங்களிலும் அவன் பேசும் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் நிரந்தரப் பணி, நிறைவான ஊதியம் போதாதற்குச் சமூகத்தில் வளரும் செல்வாக்கு போன்ற குமரனின் சந்தோஷ பலூன்கள் அனைத்திலும் மனைவி கலாவின் நீடிக்கும் மௌனம் ஊசியாகப் பாய்ந்துவருகிறது.

மனைவியின் மௌனப் போராட்டத்தை குமரன் தாமதமாகவே உணர்ந்தான். பேச மறுத்துப் பெரிதாக அவள் முரண்டு பிடிப்பதெல்லாம் இல்லை. ஆனால், ‘உம், இல்லை’ என்பதே அவளது அதிகபட்ச தகவல் பரிமாற்றமாக இருந்து அவனை நோகடித்துக்கொண்டிருந்தது. வீட்டுக் கடமைகள் எதிலும் அவள் பிசகியதாகவும் தெரியவில்லை. இல்லத்தரசியாக, குழந்தைகளின் தாயாக, பொறுப்பான மனைவியாகக் குறைவைக்கவும் இல்லை. ஆனால், அவளது விகசிக்கும் மெல்லிய குரலையும் அதன் வழியே நீளும் உரையாடல்களையும் குமரன் கேட்டு எத்தனை நாட்களாகின்றன? மற்றவர்களிடம் பேசுவதில் குறைந்த அளவில்கூடத் தன்னிடம் பேசுவதில்லை என்று உணர்ந்தபோது அவனுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால், அவளது மௌன அணுகுமுறையும் அதில் தெறித்த தெளிவுக் கூர்மையும் குமரனை வீழ்த்திச் சுவரில் முட்டிக்கொள்ளச் செய்தன.

பேசிக் களித்த கடந்த காலம்

மனைவியுடன் பேசிக் களித்த கணங்கள் கண் முன்னே வந்து போயின. புதுமணக் கிறக்கம் கழிந்த பிறகும் அவர்கள் விடியவிடிய வெறுமனே கதை பேசிக் கழித்ததுண்டு. அதிலும் குமரன், மனைவி கலா பேசும் அழகே தனி என்று மயங்கிக் கிடப்பான். அவளது குரலும் அதன் தொனியும் உரையாடலுக்கு ஏற்ப மாறும் முகபாவங்களுமாக அவள் பேச ஆரம்பித்தால் டிவியை அணைத்துவிட்டு மனைவி பக்கம் திரும்பிக்கொள்வான்.

புறநகர் பகுதியில் புதிதாகக் கட்டிய வீட்டில் நாளெல்லாம் தனிமையில் தவிக்கும் கலா, கணவனோடு பேசும் அந்தப் பொன் தருணங்களுக்காகவே காத்திருப்பாள். குழந்தைகள் உறங்கிய பிறகு உணவருந்தியபடியும் பிறகு படுக்கையில் சாய்ந்தபடியும் பேசுவதற்கு என ஏதாவது இருக்கும். அன்று நடந்தவை, அவை உணர்த்திய பாடங்கள், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்பத்தின் எதிர்காலக் கனவுகள் என்று எதையாவாது பேசிக் களிப்பார்கள். சில நேரம் ஒன்றுமில்லாதவை குறித்தும் பேச்சு சுவாரசியத்துக்காகவும் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள். அதெல்லாம் பழங்கனவாகிப் போனதில் குமரனுக்கு மிகுந்த வருத்தம். மேலும், ஊரெல்லாம் வாய்கிழியப் பேசி கைத்தட்டல் வாங்கும் தன்னால், மனைவியிடம் பேசி அவளது விநோத மௌனத்தை உடைக்க முடியவில்லையே என்ற இயலாமை உணர்வு விரக்தியைக் கூட்டியது.

 

அலைபேசி, அவனது சிந்தனையைக் கலைத்தது. அரிதாக போனில் அழைக்கும் மனைவியின் பெயரை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘விளையாடும்போது மகனுக்கு அடிபட்டதில் காயம்’ என்று போனில் அவள் பதற்றமாகச் சொன்னதைக் கேட்டுப் பதறியடித்து விரைந்தான். பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. முதலுதவியில் குணமாகும் சாதாரண சிராய்ப்புதான். இருந்தாலும், மகனின் ரத்தம் பார்த்து கலா கலங்கியிருந்தாள். அந்தப் பதற்றத்தில் கணவனுடனான ஊமை நாடகத்தை மறந்து படபடப்புடன் பேச்சைத் தொடர்ந்தாள். குமரன் விழித்துக்கொண்டு ஆவலுடன் அவளை ஆராய ஆரம்பித்தான். அப்போது டிவி ரிமோட்டில் சேனல் மாற்றி விளையாடிக்கொண்டிருந்த மகன், உள்ளூர் சேனல் ஒன்று குமரனின் முன்தினப் பேச்சு ஒளிபரப்பாகவும் கைதட்டி ஆர்ப்பரித்தான். கலா திடீரெனப் பேச்சறுத்தாள். அவள் முகத்தில் இருளின் கலவை படிந்தது. குமரன் அந்த நுட்பமான மாற்றங்களை மனதில் குறித்துக்கொண்டான்.

மீண்ட சொர்க்கம்

அடுத்த தினங்களில் குமரன் பொது நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு நேரத்துக்கு வீடு திரும்ப ஆரம்பித்தான். நிகழ்வுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை மனைவி முன்பாகவே மறுதலித்துத் துண்டித்தான். கலாவிடம் மெல்ல மாற்றம் வந்து, பழையபடி பேசத் தொடங்கினாள். நாட்கள் சென்றதும் அவளே மனம் திறந்து தனது மனத்தாங்கலையும் கணவனிடம் போட்டுடைத்தாள். கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என்று குமரன் தினசரி தாமதமாக வீடு திரும்புவதும், தந்தையை எதிர்பார்த்துக் குழந்தைகள் காத்திருந்து உறங்கிப்போவதும் தொடர்வதை கலா விரும்பவில்லை. வார விடுமுறை தினத்திலும் குமரன் ஏதேனும் ஒரு நிகழ்வுக்குச் சென்றுவிடுவது தொடரவே அவளது எரிச்சல் அதிகரித்தது. வீட்டில் உடனிருக்கும் சொற்பப் பொழுதுகளிலும் மேடைப் பேச்சுகளுக்குக் குறிப்பெடுக்கவும் வாசிக்கவும் அதிக நேரத்தை அவன் செலவிட்டான். வீட்டின் அமைதியைக் கெடுக்கும் வீண் சண்டைகளை கலா தவிர்த்தாள். அதேநேரம் மனம் சுருங்கி உள்ளுக்குள் இறுகிப்போனவளாக, இயந்திரகதியில் தனது கடமைகளை நிறைவேற்றுவதுடன் தனது இயல்பை சுருக்கிக்கொண்டாள். அவை கலாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும் புகழ் மயக்கத்தில் குடும்பத்தைப் புறக்கணிக்கும் கணவனுக்குப் பதிலடி கொடுத்த திருப்தியையும் தந்திருக்கின்றன.

கணவன், மனைவி உறவில் பரஸ்பர பேச்சுக்கான இடம் முக்கியமானது. தாம்பத்தியத்தின் ஆரோக்கியத்தை இருவருக்கும் இடையிலான பேச்சின் தன்மையே தீர்மானிக்கும். பல குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தறிகெட்ட பேச்சோ பேச்சு இல்லாததோ காரணமாக இருக்கக்கூடும்.

பழைய குமரனாக கணவன் மாறிய பின், மேடை நிகழ்வுகளின் மீது தணியாத அவனது ஈடுபாட்டை கலாவும் உணர்ந்தாள். இது குறித்து இருவரும் பேசி முடிவெடுத்ததில், வார விடுமுறையில் நடக்கும் ஓரிரு முக்கியமான கூட்டங்களில் மட்டும் குமரன் பங்கேற்கிறான். முதல் வரிசையில் மனைவியும் குழந்தைகளும் அமர்ந்து ரசிக்க, அந்த மகிழ்ச்சியில் குமரனின் செறிவுகூடிய பேச்சுக்கு இப்போது கைதட்டல் அதிகரித்திருக்கிறது.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x