Published : 25 Dec 2017 03:45 PM
Last Updated : 25 Dec 2017 03:45 PM

ஜெர்மன் நிறுவனத்தின் குறைந்த விலை பேட்டரி கார்!

பே

ட்டரி வாகனத் தயாரிப்பில் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் டொயோடா, சுஸுகி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்களும் பேட்டரி வாகனம் தொடர்பான ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளன. 2030-ம் ஆண்டில் பேட்டரி வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் செயல்படும் என்ற மத்திய அரசின் இலக்கை எட்டுவதற்காக பேட்டரி வாகனத் தயாரிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது.

பொதுவாகவே பேட்டரி வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால் இதை பலரும் வாங்குவதில்லை. இதனால் பேட்டரி வாகனங்களுக்கு அரசு தாராளமாக சலுகைகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பேட்டரி வாகனத்தை இந்திய சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மாக்னம் பைரெக்ஸ் என்ற இந்த நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலத்தில் ஒரு உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. துறைமுகத்துக்கு அருகே 22 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு ஆந்திர மாநில அரசிடம் இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. உற்பத்தித் திறனை படிப்படியாக ஒரு லட்சமாக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலையில் பேட்டரி கார்களை தயாரிப்பதே தங்களது நோக்கம் என்று நிறுவன பிரதிநிதிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்கினர். விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி முதல்வரும் கோரியுள்ளார்.

இந்த ஆலை அமையும்பட்சத்தில் குறைந்தவிலை கார்கள் உருவாவது நிச்சயம். ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே இஸுஸு, கியா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. டொயோடா நிறுவனம் ஆந்திர தலைநகர் அமராவதியில் பேட்டரி வாகனங்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

பேட்டரி வாகனத் தயாரிப்பில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் ஈடுபடும்பட்சத்தில் இதன் விலை நிச்சயம் குறையும். சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x