Last Updated : 08 Dec, 2017 11:05 AM

 

Published : 08 Dec 2017 11:05 AM
Last Updated : 08 Dec 2017 11:05 AM

ஹாலிவுட் ஜன்னல்: ஓடும் ரயிலில் உடையும் புதிர்கள்

யில் போன்ற அன்றாட அலுவலகப் பயணங்களில் அறிமுகமாகும் சாதாரண முகங்களின் பின்னே நமக்கு வேட்டு வைக்கும் மர்மங்கள் ஒளிந்திருந்தால் என்னவாகும்?. இந்த ஒற்றைக் கேள்வியிலிருந்து ‘த கம்யூட்டர்’ (The Commuter) திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படம் ஜனவரி 12 அன்று திரைக்கு வருகிறது.

படத்தின் நாயகன் பல ஆண்டுகளாக அலுவலகம் செல்லும் அதே ரயிலில் வழக்கம் போல அன்றும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறார். எதிர் இருக்கையில் திடீரென அறிமுகமாகி புதிர் ஒன்றைப் பற்ற வைத்துவிட்டு மறையும் பெண்ணொருத்தியால் அவரது அன்றைய தினம் அடியோடு தடம் புரள்கிறது. கடைசி நிறுத்தம் வருவதற்குள் உடன் பயணிக்கும் சந்தேக நபரையும் அவரது மர்ம பின்னணியையும் நாயகன் கண்டுபிடிப்பதில், அந்த ரயில் பயணிகளின் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ஊசலாட்டம் தொடங்குகிறது.

இவரா அவரா எனச் சந்தேகத்துக்கு ஆளாகும் சக பயணிகளால் புதிரின் மடல்கள் அடுத்தடுத்து அவிழ, வெளிப்படும் குற்றச் சதியை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது மிச்சத் திரைப்படம். ஹிட்சாக்கின் ‘நார்த் பை நார்த்வெஸ்ட்’ மற்றும் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெய்ன்’ படங்களின் பாதிப்பிலான த்ரில்லரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை கலந்து ‘த கம்யூட்டர்’ படத்தை உருவாக்கி உள்ளார்களாம். படத்தின் நாயகன் லியம் நீஸன். வெரா ஃபர்மிகா, பாட்ரிக் வில்சன், ஜானதன் பேங்க்ஸ், சாம் நெய்ல் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

‘65 வயதாகிவிட்டதால் இதுவே எனது கடைசி ஆக்‌ஷன் திரைப்படம்’ எனக் கூறியதன் மூலம் லியம் நீஸன் ஏற்கெனவே இப்படத்துக்கு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார். ‘நான் ஸ்டாப்’ உட்பட இயக்குநர் ஜாம் கொலெட் செர்ரா (Jaume Collet-Serra) உடன் லியம் நீஸன் இணையும் நான்காவது படம் இது. ‘த கம்யூட்டர்’ படத்தின் ட்ரைலர் கூட ‘நான் ஸ்டாப்’ படத்தை நினைவூட்டுகிறது. அதில் கதை நிகழும் களம் விமானம் என்றால் இதில் விரைவு ரயில். ஆனால், பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x