Last Updated : 12 Jul, 2014 09:10 AM

 

Published : 12 Jul 2014 09:10 AM
Last Updated : 12 Jul 2014 09:10 AM

நில விற்பனையும் கட்டுமானமும்

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகள் பல. இந்தியாவின் தென்கோடி முனை, இதமான தட்பவெப்பநிலை, பத்மாநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, தொட்டிப் பாலம் என சுற்றிலும் சுற்றுலாத் தலங்கள் இவை எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பம்சங்களில் சில. ரப்பரும், பாக்கும், பலாவும், ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னைகளும், மலையாளம் - தமிழ் என இரு மொழியினர் இணைந்து வாழும் பண்பாடு என இன்னும் பல சிறப்பம்சங்களும் உண்டு. இது மட்டுமல்ல திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட இந்தப் பகுதிகள் அந்தக் காலத்தின் செல்வச் செழிப்பை இன்றைக்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

இந்தச் செல்வச் செழிப்புதான் கன்னியாகுமரி மாவட்டத்தின் ரியல் எஸ்டேட் தொழிலையும் செழிப்பாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது இந்தத் தொழில் தொய்வடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ரமேஷ். தமிழக அரசு வழிகாட்டி மதிப்பை (Guideline Value) உயர்த்தியிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம் என்கிறார். ஆனால் பரவலாகத் தமிழ்நாடு முழுக்க இந்தத் தேக்கநிலை நிலவுகிறது. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலை மையமாக வைத்துத்தான் அங்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில காலத்திற்கு முன்பு கொடிகட்டிப் பறந்தன. இங்கு வீட்டு மனைகளின் விலையை விசாரித்துப் பார்த்தால் வாய்பிளக்க வைத்துவிடுகிறார்கள்.

“நாகர்கோவிலில் வீட்டு மனைகள் விலை சென்னை அளவுக்கு இருக்கும். இதற்குக் காரணம் இடத் தட்டுப்பாடு” என்கிறார் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ். இவர் தேசியக் கட்டுமானச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர். இதற்கான காரணங்களில் ஒன்றாக அவர் சொல்வது கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் நடக்கும் ரப்பர் விவசாயம். ஆனால் இவை இல்லாமல் கன்னியாகுமரி பகுதியில் இட நெருக்கடியும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட இங்கு குடியிருப்புக்கான நிலப் பகுதி குறைவு எனச் சொல்கிறார் ரமேஷ். மேலும் இங்கு பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரிவதால் சில முக்கியமான இடங்களில் முதலீடு செய்யப் போட்டி போடுகிறார்கள். இவர்களின் இந்தப் போட்டி சந்தை மதிப்பை சாமானியனுக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிட்டது. நகரின் முக்கியப் பகுதியான கோட்டாறில் 15-20 லட்சம் மதிப்புள்ள இடம் இம்மாதிரியான போட்டி உருவாகும்போது அந்த நிலத்தின் விலை கோடியைத் தாண்டிவிடுகிறது என்கிறார் சிறில்.

நாகர்கோவிலில் இப்போது விற்பனைக்குச் சாத்தியம் உள்ள இடங்களில் முக்கியமானது திருவனந்தபுரம் சாலையில் உள்ள பார்வதிபுரம். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை நில மதிப்பு வெவ்வேறு வகையில் உள்ளது. திருவனந்தபுரம் சாலையை ஒட்டி ஒரு சென்டுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து விற்பனையாகிறது. பார்வதிபுரத்திலேயே மிகக் குறைந்த விலையிலும் மனைகள் கிடைக்கின்றன என்கிறார் சிறில். வடிவீஸ்வரம், கோட்டாறு, ராமன் புதூர், பங்களா தெரு, வடசேரி, செட்டிகுளம் போன்ற நகரின் மையப் பகுதிகளில் மனைகள் வாங்குவதற்கான பெரிய வாய்ப்புகள் இல்லை. எனினும் இந்தப் பகுதிகளில் பழைய வீடுகள் விற்பனைகள் நடக்கின்றன. இவை தவிர பிரபா காலனி, ராஜக்கமங்கலம் சாலை,கிறிஸ்டோபர் காலனி, புத்தேரி, வெள்ளமடம், பீமநேரி பகுதிகளில் ரியல் எஸ்டேட் பிளாட்டுகள் விற்பனை நடக்கின்றன.

நாகர்கோவிலில் இப்போது விற்பனைக்குச் சாத்தியம் உள்ள இடங்களில் முக்கியமானது திருவனந்தபுரம் சாலையில் உள்ள பார்வதிபுரம். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை நில மதிப்பு வெவ்வேறு வகையில் உள்ளது. திருவனந்தபுரம் சாலையை ஒட்டி ஒரு சென்டுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து விற்பனையாகிறது. பார்வதிபுரத்திலேயே மிகக் குறைந்த விலையிலும் மனைகள் கிடைக்கின்றன என்கிறார் சிறில். வடிவீஸ்வரம், கோட்டாறு, ராமன் புதூர், பங்களா தெரு, வடசேரி, செட்டிகுளம் போன்ற நகரின் மையப் பகுதிகளில் மனைகள் வாங்குவதற்கான பெரிய வாய்ப்புகள் இல்லை. எனினும் இந்தப் பகுதிகளில் பழைய வீடுகள் விற்பனைகள் நடக்கின்றன. இவை தவிர பிரபா காலனி, ராஜக்கமங்கலம் சாலை,கிறிஸ்டோபர் காலனி, புத்தேரி, வெள்ளமடம், பீமநேரி பகுதிகளில் ரியல் எஸ்டேட் பிளாட்டுகள் விற்பனை நடக்கின்றன.

கிறிஸ்டோபர் காலனி நகரை ஒட்டி வளர்ந்துள்ள பகுதி என்பதால் இங்கு நல்ல விலை போவதாகச் சொல்கிறார் நாகர்கோவில் கட்டுமானச் சங்கத் தலைவரான ரஜீஸ்குமார். ஒரு சென்டுக்கு கிட்டத்தட்ட ரூ.7-10 லட்சம் வரை இங்கு விற்பனை ஆவதாகச் சொல்கிறார் இவர். கன்னியாகுமரி சாலையைப் பொறுத்தமட்டில் ஆஸ்ரமம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளிலும் நில விற்பனை நடக்கிறது. இங்கு நிலம் ஒரு சென்டுக்கு ரூ.3 - 6 லட்சம் வரை விற்பனையாகின்றன. நாகர்கோவில் முழுக்கப் பார்த்தால் நில மதிப்பு இப்போது அதிகமாகவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் நடுநிலையாக இருக்கிறது. அரசின் வழிகாட்டி மதிப்பு கிட்டத்தட்ட சந்தை மதிப்பிற்கு அடுத்து உள்ள காரணத்தால் பத்திரக் கட்டணம் மிக அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் இந்த மந்த நிலை ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் ரஜீஸ்குமார். அதனால் வருமானவரி விலக்குக்காக இப்போது வசதி படைத்தவர்கள் மட்டும்தான் நிலம் வாங்கத் துணிகிறார்கள் என்றும் சாமானிய மக்களால் நிலம் வாங்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கிறார் தனியார் வீட்டுக் கடன் பிரிவில் பணியாற்றும் செந்தில்குமார்.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அதன் செல்வச் செழிப்பு காரணமாகத்தான் இந்த விலையேற்றம் இருப்பதாகக் கொள்ளலாம். ரஜீஸ் நிலம் வாங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்கிறார். நிலத்தில் பணம் படைத்தவர்கள் மிக அதிகமாக முதலீடு செய்வதால் சாமானிய மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்கிறார் அவர். உணவுப் பயிர்களை விளைவித்து வந்த விவசாயிகள் பணப் பயிர்களை விளைவிக்கத் தூண்டப்பட்டதைப் போல, இப்போது வாழ்வதற்கானது வீடு என்பதைத் தாண்டி அது வர்த்தகமாக ஆகிவிட்டது. வர்த்தகம் சரிதான். ஆனால், வர்த்தகமயமாவது ஆரோக்கியமானது அல்ல.

கன்னியாகுமரி மாவட்டக் கட்டுமானத் தொழில்?

கன்னியாகுமரி மாவட்ட ரியல் எஸ்டேட்டின் தேக்க நிலை காரணமாகக் கட்டுமானத் தொழிலும் பாதிப்படைந்துள்ளது என்கிறார் கட்டுமானச் சங்கத்தின் தேசியச் செயலாளரான சிறில் கிறிஸ்துராஜ். மேலும் சிமெண்ட் விலை ஏற்றமும் கட்டுமானத் தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது என்கிறார் கட்டுமானச் சங்கத்தின் தலைவரான ரஜீஸ்குமார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கட்டுமானக் கூலி சதுர அடிக்கு அதிகமாகவே உள்ளது. தொடக்க விலை சதுர அடிக்கு ரூ. 1,700 என்கிறார் சிறில். இது இடம் வசதிகளைப் பொருத்துகூட, குறைய வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த விலை அதிகம்தான் என்பதை சிறில் ஒத்துக்கொள்கிறார். அதற்காக ரஜீஸ்குமார் இரு முக்கியக் காரணங்களை முன்வைக்கிறார். அதாவது கட்டுமானத்திற்குப் பயன்படும் ஆற்று மணலைப் பொறுத்தவரை நாகர்கோவிலிலோ அருகில் உள்ள மாவட்டங்களிலோ எங்கும் மணல் குவாரிகள் இல்லை. திருச்சியில் இருந்தே கட்டுமானத்திற்கு மணல் கொண்டு வரப்படுகிறது. அப்படிக் கொண்டு வரப்படும்போது போக்குவரத்துச் செலவு சேர்த்து மணல் விலை மிக அதிகமாகிவிடுகிறது. யூனிட் ரூ. 6 ஆயிரம் வரை ஆகிறது. அதுபோல இங்கு செயல்பட்டு வந்த கல்குவாரிகளுக்கான அனுமதிகளை, மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. இதனால் ஜல்லிக் கல்லுக்கு அருகில் இருக்கும் திருநெல்வேலியை நம்பியிருக்க வேண்டியுள்ளது என்கிறார் ரஜீஸ்குமார். இதனாலும் கட்டுமானக் கூலியை அதிகரிப்பது தவிர்க்க முடியாது என்கிறார்.

சிமெண்ட் விலை அடிக்கடி உயர்ந்துவருவதும் கட்டுமானத் தொழிலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் சிறில் கூறுகிறார். சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அரசு தலையிட்டுக் காலக் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என ரஜீஸ் கோரிக்கை விடுக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x