Published : 29 Dec 2017 10:45 AM
Last Updated : 29 Dec 2017 10:45 AM

வாழ்வு இனிது: சர்வர் எந்திரன்!

செ

ன்னையில் பல்வேறு தீம் ரெஸ்டாரண்டுகள் கலக்கி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வந்திருப்பது ரோபோட் ரெஸ்டாரண்ட். ஹோட்டலுக்குச் சென்றால், நாம் விரும்பிக் கேட்கும் உணவைக் கொண்டுவந்து கொடுக்கும் சர்வர்களைப் பார்த்திருப்பீர்கள். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றால், நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை, ரோபோட் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகிறது! அந்த ஹோட்டலின் பெயர் ‘ரோபோட் தீம் ரெஸ்டாரண்ட்’.

ஹோட்டலில் ரோபோட் சர்வர்களா என்று மலைக்காதீர்கள். ஹோட்டல்களில் ரோபோட் சர்வர்கள் என்பது இந்தியாவுக்குத்தான் புதிது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தில் ஏற்கெனவே இந்தப் பாணி ஹோட்டல்கள் வந்துவிட்டன. வாடிக்கையாளர்களுடன் பேசி, வேண்டியதைக் கொடுக்கும் மனிதர்கள் இருக்க, ரோபோட் சர்வர்கள் எதற்காக? இந்த ஹோட்டலை நிர்வகித்துவரும் நால்வர்களில் ஒருவரான கைலாஷிடம் பேசினோம்.

“ ஹோட்டலைக் கொஞ்சம் மாற்றலாமே என்று தோன்றியது. ஒரு மாறுதலுக்காக ரோபோட் கொண்டு வந்தோம். இந்த ஹோட்டல் பாணி சென்னையில் முதன்முறையாக அமைத்த விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் கைலாஷ்.

சர்வர் பணியில் தற்போது 4 ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நான்கு ரோபோட்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ரோபோட்களை அடையாளம் கண்பதற்காக ஒவ்வொரு ரோபோவின் கழுத்திலும் ஸ்கார்ப் கட்டப்பட்டிருக்கிறது. அதை வைத்து ஹோட்டலில் பணியாற்றுவோர் ரோபோட்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். ஒவ்வொரு டேபிளிலும் ஒரு டேப் (Tab) வைக்கப்பட்டிருக்கிறது. அதில் விருப்பமான உணவை ஆர்டர் செய்தால், அதைச் சமைத்து ரோபோவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள்.

ROBOT (1) கைலாஷ் right

குறிப்பிட்ட நம்பர் டேபிளுக்குக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னால், ரோபோ கொடுத்துவிடுகிறது. வாடிக்கையாளர்கள் அதன் கையைத் தொட்டால், போகிறேன் என்று சொல்கிறது. மீண்டும் தொட்டால் போய்விடுகிறது.

அதெல்லாம் சரி, இப்படி ரோபோட்களின் வருகையால், வேலை செய்வோரின் வேலைவாய்ப்புப் பறிபோகாதா, மனிதர்கள்போல ரோபோட்களால் பரிமாற முடியுமா என்று கேட்டோம். “இந்தக் கேள்விகளைப் பலரும் கேட்கிறார்கள். ரோபோட்கள் வந்த பிறகு ஒரு ஊழியர்கூடப் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போதுதான் இரண்டு பேரைப் புதிதாகச் சேர்த்துள்ளோம். பொதுவாக, மக்கள் உணவகத்துக்கு வருவதே ஒரு மாற்றத்துக்காகத்தான். குழந்தைகள் ரோபோட்டிடம் விளையாடுகிறார்கள். அதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள். ரோபோட் வருகையால் விலையில்கூட எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்கிறார் கைலாஷ்.

இது ஹோட்டல் 2.0!

- ச.ச. சிவ சங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x