Last Updated : 20 Dec, 2017 11:34 AM

 

Published : 20 Dec 2017 11:34 AM
Last Updated : 20 Dec 2017 11:34 AM

ருட்யார்ட் கிப்ளிங் கதை: காண்டாமிருகத்தின் தோல் ஏன் இப்படி இருக்கிறது?

 

செ

ங்கடலின் கரையோரம் உள்ள தீவில் ஒரு பார்சிக்காரர் வாழ்ந்துவந்தார். கேக் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தினமும் செய்து சாப்பிடுவார். ஒருநாள் வழக்கம்போல் மாவு, சர்க்கரை, உலர்ந்த திராட்சைகள் ஆகிவற்றுடன் கொஞ்சம் தண்ணீரைக் கலந்து, 2 அடி நீளமான கேக்கைச் செய்து முடித்தார்.

கேக்கின் வாசனை மூக்கைத் துளைக்க, பார்சிக்காரரின் நாவில் எச்சில் ஊறியது. ’என்ன இருந்தாலும் என் கைப்பக்குவமே தனிதான்’ என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு கேக்கைச் சிறு துண்டாக வெட்டி, சாப்பிடப் போனார். அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய உருவம் வரவே, பயத்தில் கேக்கை அப்படியே போட்டுவிட்டு அருகிலிருந்த மரத்தில் ஏறிவிட்டார்.

வந்தது காண்டாமிருகம். மூக்கின் மீது கூரிய கொம்பு, இரண்டு பெரிய கண்கள். வாயைப் பிளந்தவாறே கனத்த உருவத்துடன் அசைந்து அசைந்து நடந்துவந்தது. அப்போதைய காண்டாமிருகத்துக்கும் இப்போதைய காண்டாமிருகத்துக்கும் நிறைய வித்தியாசம். இப்போது இருப்பதைப் போன்று பட்டை பட்டையான தோல் இல்லை. மடிப்புகளும் இல்லை.

அடுப்பைப் பார்த்ததும் காண்டாமிருகத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. கொம்பால் அடுப்பை முட்டித் தள்ள, கேக் தரையில் விழுந்து சிதறியது. கேக்கின் வாசனை காண்டாமிருகத்தின் மூக்கைத் துளைக்கவே, கொம்பினால் பெரிய கேக் துண்டைக் குத்தி மேலே தூக்கிப் போட்டது. மிகச் சரியாக அந்தக் கேக் அதன் வாய்க்குள் விழ, ‘ஆஹா, என்ன சுவை!’ என்று சப்புக் கொட்டியவாறே தீவுக்குள் ஓடி மறைந்தது.

கீழே இறங்கிய பார்சிக்காரர் நசுங்கிய அடுப்பையும் சிதறிய கேக் துண்டுகளையும் பார்த்து, ‘எவ்வளவு ஆசை ஆசையாகத் தயாரித்தேன். காண்டாமிருகம் எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டதே’ என்று வருந்தினார். பொறுமையுடன் கீழே சிதறிய கேக் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேகரித்தார். காண்டாமிருகத்தைப் பழி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

மறுநாள் திடீரென்று அனல் காற்று வீசியது. வெப்பத்தைத் தணித்துக்கொள்ளக் கடலில் குளிக்கத் தொடங்கினார் பார்சிக்காரர். அப்போது கேக்கைத் தின்ற காண்டாமிருகம் அங்குவந்தது. அந்தக் காலத்து காண்டாமிருகங்களுக்குத் தோலைக் கழற்றவும் மீண்டும் அணிந்து கொள்ளவும் வசதி இருந்ததால், தனது தோலைக் கழற்றிக் கீழே வீசிவிட்டுக் கடலில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பார்சிக்காரரைக் கண்டு கொள்ளவேயில்லை. அவர் தயாரித்த கேக்கைத் திருடித் தின்றோமே என்ற வருத்தம் சிறிது கூட இல்லாமல், மூக்கு வழியே நீர்க்குமிழிகளைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியுடன் நீந்திக் கொண்டிருந்தது.

பார்சிக்காரர் பயந்துகொண்டு, பாதிக் குளியலிலேயே வெளியேறினார். கரைக்கு வந்தவரின் கண்களில் காண்டாமிருகம் கழற்றிப் போட்ட தோல் தென்படவே, சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். அவசரமாக வீட்டுக்குச் சென்று மீதியிருந்த கேக்கை எடுத்து வந்து காண்டாமிருகம் கழற்றிப் போட்டிருந்த தோல் முழுவதும் தேய்த்தார். பிறகு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் காண்டாமிருகம் கரையிலிருந்த தனது தோலை எடுத்து அணிந்துகொண்டது. தோல் மீது திணிக்கப்பட்டிருந்த கேக், அதன் கண்களுக்குப் புலப்படவில்லை.

மகிழ்ச்சியாக நடந்தது காண்டாமிருகம். நேரம் செல்லச் செல்ல வெப்பம் அதிகமானது. தோலில் இருந்த கேக் உருகத் தொடங்கி, சருமத்தோடு ஒட்டிக்கொண்டது. பிறகு கெட்டியாகி அரிக்க ஆரம்பித்தது. காண்டாமிருகம் அப்படியும் இப்படியுமாக நெளிந்தது. கடற்கரை மணலில் விழுந்து உருண்டது. ஆனாலும் அரிப்பு விடவில்லை. அருகில் இருந்த மரங்களின் மீது உடலை அழுத்தித் தேய்த்தது. ஒவ்வொரு முறை அழுத்தும்போதும் காய்ந்து போன கேக் துண்டு துண்டாக, நீள் சதுரமாக உடைந்து தோலின் மீது பட்டை பட்டையாக இன்னும் கெட்டியாக ஒட்டிக்கொண்டது.

சீராகவும் அழகாகவும் இருந்த காண்டாமிருகத்தின் தோல் அன்று முதல் தடிமனாகவும் பட்டை பட்டையாகவும் மாறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x