Published : 18 Dec 2017 10:00 AM
Last Updated : 18 Dec 2017 10:00 AM

வாகனத் துறையில் `வளை’ கரங்களுக்கு முன்னுரிமை: புதிய உத்தியில் களமிறங்கும் பிரிட்டன்-சீன நிறுவனம்!

ட்டோமொபைல் துறை இன்றளவிலும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையாகத்தான் இருக்கிறது. இதை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முடிவெடுத்துள்ளது எம்ஜி.

இங்கிலாந்தின் எம்ஜி மோட்டார் இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. மோரிஸ் காரேஜஸ் என்பதன் சுருக்கம்தான் எம்ஜி எனப்படுகிறது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்து குஜராத் மாநிலம் ஹலோலில் உள்ள ஆலையை மூடிவிட்டது. அந்த ஆலையிலிருந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது எம்ஜி.

பிரிட்டனைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் யுகே லிமிடெட் நிறுவனம் 2005-ம் ஆண்டில் மிகப் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து சீனாவின் நான்ஜிங் ஆட்டோமொபைல் நிறுவனம் எம்ஜி நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2007-ம் ஆண்டில் நான்ஜிங் ஆட்டோமொபைல்ஸை சீனாவின் மற்றொரு நிறுவனமான எஸ்ஏஐசி வாங்கியது. அன்றிலிருந்து தற்போது வரை எம்ஜி மோட்டார் சீன நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படுகிறது.

சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனம் தனது துணை நிறுவனமான எம்ஜி மோட்டார் ஆலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டது. இந்த சமயத்தில்தான் இந்தியாவில் இனி தனது தயாரிப்புகளை விற்கப் போவதில்லை என்ற முடிவுக்கு அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வந்தது. இந்த நிறுவனத்தின் 170 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஹலோல் ஆலையை வாங்கி அதை புதுப்பித்து செயல்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாகவும் எம்ஜி அறிவித்துள்ளது. செப்டம்பரில் தனது ஆலை அமைக்கும் பணியை தொடங்கிவிட்டது.

புதிய உத்தி…

ஆட்டோமொபைல் துறையைப் பொருத்தமட்டில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம். ஆனால் அந்த நடைமுறையை மாற்ற எம்ஜி திட்டமிட்டுள்ளது. தனது ஆலையில் 30 சதவீதம் பெண்களை நியமிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒருவேளை நிறுவனம் நிர்ணயித்துள்ள இலக்கின்படி பெண்கள் நியமிக்கப்பட்டால் இத்துறையில் அதிக பெண்களை பணியமர்த்தியுள்ள நிறுவனமாக எம்ஜி திகழும்.

2019-ம் ஆண்டில் தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் இறக்கத் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் திறமையான பெண்களை தங்களது ஆலைகளில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

பெண்கள் அணி வகுப்பு

பணிகள் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் தற்போது முக்கிய பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் சட்டத்துறை மற்றும் நிறுவன செயலராக 39 வயதாகும் நமிதா பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். முற்றிலும் புதிதான ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண களமிறக்கப்பட்டுள்ளார்.

பம்பார்டியர் இந்தியா நிறுவனத்திலிருந்து இந்நிறுவனத்தின் கொள்முதல் திட்டமிடல் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் 35 வயதான பிரிஷ்டீனா தத்தா. சரக்கு கொள்முதலில் நிலவும் சிக்கலுக்குத்தீர்வு காணும் பணிகளை இவரது தலைமையிலான குழு மேற்கொள்கிறது. நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவராக 35 வயதான பல்லவி சிங் பொறுப்பேற்றுள்ளார். மற்ற இருவரை விட ஆட்டோமொபைல் துறையில் இவருக்கு அனுபவம் அதிகம். ஆம் இவர் இதற்கு முன்பு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

மனித வள பிரிவு மற்றும் பயிற்சி பிரிவின் தலைவராக மனுஸம் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார். ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மரபுசாரா எரிசக்தி பிரிவில் பணியாற்றி வந்த இவர் தற்போது ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வாயிலாக. பணிபுரிவதற்கு மிகச் சிறந்த இடமாக எம்ஜி மோட்டாரை மாற்றுவதுதான் இவரது லட்சியம் என்கிறார்.

நிறுவனத்தின் நிர்வாக பிரிவின் தலைவராக கிராவிதா சாந்து பொறுப்பேற்றுள்ளார். நிறுவனத்தின் குர்காவ்ன் அலுவலகத்தில் தனியொரு பெண்ணாக நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்துகிறார்.ஆட்டோமொபைல் துறையில் பெண்களின் பங்கேற்பு தற்போது கணிசமாக உள்ளது. எம்ஜி நிறுவன வருகைக்குப் பிறகு இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும். ஆட்டோமொபைல் துறையில் `வளை’ கரங்கள் வலுப்பெறுகிறது.

டெய்ல் பீஸ்: இந்தியாவிலிருந்து வெளியேறியது ஜிஎம். இப்போது வரப்போகிறது எம்ஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x