

உலகின் மிகச் சிறந்த தன்முனைப்பு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர், பிரையன் டிரேசி (BRIAN TRACY). அவர் எழுதிய EAT THAT FROG, THE PSYCHOLOGY OF SELLING, THE POWER OF SELF-DISCIPLINE போன்ற நூல்கள் உலகப் புகழ் பெற்றவை. ‘வெற்றிக்கான ஐந்து உத்திகள்’ என்ற தலைப்பில் அவர் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் இருந்து சில குறிப்புகள், உங்களுக்காக....
1. தெளிவு (CLARITY) - உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நீங்கள் யாரையும் தேடிச் சென்று ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கிறார்கள். அதை நிகழ்த்தியும் காண்பிக்கிறார்கள். எனவே ‘உங்கள் இலக்கு என்ன ?’ அல்லது ‘நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்?’ என்கிற முடிவை முதலில் எடுங்கள்.
முடிவுகள் எடுக்கிறபோது அதுசரியாக இருக்குமா என்று நீங்கள் ஐயப்படத் தேவையில்லை. வெற்றியாளர்கள் எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதில்லை. அவர்கள் எடுக்கிற முடிவை சரியாக்கிக் காண்பிக்கிறார்கள்.
2. திறன் (COMPETENT) - உங்கள் இலக்குகளை அடைவதற்கான திறன்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். திறன்களைக் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. திரும்பத், திரும்பத், திரும்ப.. அதைச் செய்து பழகி, அதில் நிபுணத்துவம் பெற வேண்டும். நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் பிராக்டீஸ் செய்ததால் தான் விராட் கோலி என்கிற ஆளுமை உருவாக முடிந்தது. இந்த உலகம், துறை சார்ந்த நிபுணர்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
3. கவனம் (CONCENTRATION) - மொத்தமே இரண்டு சதவீத மக்கள்தான் எடுத்த காரியத்தை கவனம் சிதறாமல் செய்து முடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இலக்கை நிர்ணயிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது, அதில் கவனம் செலுத்தி, அதனை நிறைவேற்றுவது. கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. அதில் ஒரு வேகமும் இருக்க வேண்டும். பட்டறிவைப் பயன்படுத்தி விவேகத்தோடும் செயல்பட வேண்டும். தோல்விகள் வரத்தான் செய்யும். அதிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
4. அர்ப்பணிப்பு (COMMITMENT) - அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் எந்த வெற்றியையும் பெற முடியாது. உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி இருக்கலாம். சொகுசு வட்டத்திலிருந்து வெளியே வந்து களமாட வேண்டி இருக்கலாம். வெற்றி பெறும் வரை எல்லாவற்றுக்கும் தயாராகுங்கள். இது ஒரு போர்க்களம். வெற்றி பெற்றவருக்கு மட்டுமே இங்கு மணிமகுடம் சூட்டப்படும்.
5. நம்பிக்கை (CONFIDENCE) - தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டாவது பக்கம் மாதிரி. பல நேரங்களில் தவிர்க்க இயலாதது. ஆனால் தோல்வியுற்ற போதெல்லாம், வெற்றியாளர்கள் மீண்டும் வெறிகொண்டு எழுந்து சாதித்திருக்கிறார்கள். 100 சதங்கள் அடித்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூட, 34 முறை டக் அவுட் ஆகி–உலகின் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எத்தனை முறை தோல்விகள் வந்தாலும், போர்க்களத்தில் உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை பிறர் உணரச் செய்யுங்கள். தைரியத்தோடு முன் சென்று போரிடுங்கள். முன்னேற, முன்னேற தடைகள் விலகும். வழிகள் தோன்றும். ஆம்.. நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் !
- rkcatalyst@gmail.com