Published : 01 Dec 2017 11:11 AM
Last Updated : 01 Dec 2017 11:11 AM

வேட்டையாடு விளையாடு 11: நிஜமான கற்பனை!

1. நிஜமான கற்பனை!

அறிவியல் புனைவு எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் எழுதிய ‘தி சென்டினல்’. சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் உருவாக்கிய திரைப்படம் ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’. பூமிக்கு அப்பால் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆராயும் ஒரு குழு, செயற்கை நுண்ணறிவுகொண்ட கணிப்பொறியான ஹால் உடன் வியாழன் கிரகத்துக்குச் செல்லும் கதை இது. விலங்குகளிலிருந்து பரிமாண வளர்ச்சியை அடைந்ததாகச் சொல்லப்படும் மனிதனின் அடுத்த நிலை என்ன என்ற கேள்வியை முன்வைத்த இத்திரைப்படம் 1968-ல் வெளியானது.

செயற்கை நுண்ணறிவுத் துறை, கணிப்பொறியியல் ஆகியவற்றில் வருங்காலத்தில் நடக்கப் போகும் முன்னேற்றங்களைக் கணித்த திரைப்படம் என இன்றும் விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. ஸ்பெஷல் எஃபக்டுகளுக்காக மட்டுமே ஆஸ்கர் வென்ற இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஷாட்கள் 205. நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் நிலவுக்குள் அடி வைப்பதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட படம் இது. பெரும்பகுதியும் உரையாடல் இல்லாத இத்திரைப்படத்தில் வசனமே இல்லாத பகுதி எவ்வளவு நேரம்?

 

2. அரசு இயந்திரத்தை அசைத்த படம்

கடந்த நூற்றாண்டின் இறுதியில் எய்ட்ஸ் என்ற நோய் உலகையே அச்சுறுத்திய சூழலைப் பற்றிய ஆவணப்படம் ‘ஹவ் டூ சர்வைவ் எ ப்ளேக்’. வறிய நிலையில் வாழும் மக்கள் எய்ட்ஸ் நோய் தாக்கினால் இறப்பதைத் தவிர வேறு வழியில்லாத சூழ்நிலையில் அமெரிக்க மருத்துவச் சூழல், அந்நாட்டு அரசின் பாராமுகம் பற்றி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் டேவிட் பிரான்ஸ். 80-களின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் எய்ட்ஸ் என்ற பெயர் அறிமுகமானதிலிருந்து அது தொடர்பான தகவல்களைப் பத்திரிகையாளராகச் சேகரித்த டேவிட்டின் முதல் படைப்பான இந்த ஆவணப்படம், ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும் அந்நோய் பாதித்தவர்களுக்கான கவுரவம், சிகிச்சைக்காகவும் போராடிய ACT UP அமைப்பின் உறுப்பினர்களுடனான நேர்காணல்கள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், கருத்தரங்குகள் என 700 மணிநேரம் ஒளிப்பதிவு செய்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் இது. ஒருகட்டத்தில் எய்ட்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி அமெரிக்க அரசு எய்ட்ஸ் ஆராய்ச்சிக்காக நிதியொதுக்குவதற்கும் காரணமாக அமைந்த படம் இது. எய்ட்ஸ் தாக்கிய யாருடைய மரணம் டேவிட் பிரான்ஸை இப்படத்தை எடுக்கத் தூண்டியது?

3. வாய்மொழி வரலாற்றின் ராணி

ராஜஸ்தானைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. ஆனாலும், ராணி பத்மினி என்பவர் மக்களின் வாய்மொழிக் கதைகள் வழியாக, ஓவியங்களின் வழியாக மக்கள் மனதில் நிலைத்த கற்பனைக் கதாபாத்திரம் என்று வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னாட்களில் இயக்குநராகப் பெரும்புகழ்பெற்ற சி.வி.ஸ்ரீதர், கதை வசனகர்த்தா இளங்கோவுடன் சேர்ந்து எழுதி, சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கத்தில் 1963-ல் வெளியான திரைப்படம் ‘சித்தூர் ராணி பத்மினி’.

சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ்.பாலையா எனப் பெரிய நட்சத்திரங்களின் பட்டாளமே நடித்த படம் இது. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆசைக்கு ஆட்படாமல், மரணம் மூலம் தப்பிக்கும் ராணி பத்மினியின் கதை இது. அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற கலை இயக்குநரான ஏ.கே.சேகர் இப்படத்துக்காக உருவாக்கிய செட்களும் உடைகளும் மிகவும் பேசப்பட்டன. ஜி.ராமநாதனின் இசையில் மிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தின் பாதிப்பில் இந்தியில் எடுக்கப்பட்டுத் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் திரைப்படம் எது?

 

4. ஆஸ்கர் படத்துக்கு ஆதர்சம்!

நிழலுலக தாதாக்களைப் பற்றி கொலைகள் நடக்கும்போதோ அவர்கள் கொல்லப்படும்போதோ கேள்விப்படுகிறோம். மற்றவர்களைக் கொல்வதற்கும் அவர்களே இறந்துபோவதற்கும் நடுவில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதில்தான் ராம் கோபால் வர்மா இயக்கி 1998-ல் வெளியான ‘சத்யா’ திரைப்படம். மும்பையின் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பம், உறவுகள், நண்பர்கள், காதல், ஆசாபாசங்கள் என அவர்களது தனிப்பட்ட அன்றாட வாழ்க்கையை மிக நெருக்கமாகச் சித்தரித்த திரைப்படம் இது. ஜே. டி. சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர்களில் ஒருவர், பின்னர் ‘தேவ் டி’ என்ற புகழ்பெற்ற இந்திப் படத்தின் இயக்குநராகப் பிரபலமான அனுராக் காஸ்யப்.

‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற சந்தீப் சவுதாவின் பின்னணி இசை, பாலிவுட் சினிமா ஒரு தரத்தை அடைந்ததன் அடையாளமாகப் பாராட்டப்பட்டது. இதே படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் விஷால் பரத்வாஜ். சிறந்த திரைப்படமென்று விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்று வசூலிலும் வென்றது ‘சத்யா’. ‘சத்யா’வை உந்துதலாகக் கொண்டு, மும்பையைக் கதைக் களமாக்கி, டேனி பாயல் இயக்கிய ஆஸ்கர் விருதுப் படம் எது?

5. ஓவியம்போல் ஆன ஒளிப்பதிவு!

சர்வதேச சினிமாவில் இரண்டாயிரத்துக்குப் பிறகு தன் படைப்புகளின் வழியாக அதிகம் பேசப்பட்டவர் தென் கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் கிம் கி டுக். காமம், குற்றம், வன்முறை வாயிலாக ஞானத்தை அடையும் பவுத்த மடாலயத்தில் வளரும் சிறுவனின் கதையைப் பருவங்களினூடாகச் சொன்ன ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ திரைப்படம் 2003-ல் வெளியானது.

மலைகளுக்கு நடுவே நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களின் நிழல்கள் தெள்ளியதாகத் தெரியும் அழகிய ஏரி ஒன்றில் அமைந்திருக்கும் பவுத்த மடாலயச் சூழலில் தொடங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு கீழைநாடுகளின் ஓவிய பாணி கலைவண்ணத்தை ஞாபகப்படுத்தியது. காட்சிகளின் வாயிலாகவே உணர்வுகளைச் சொல்லத் தெரிந்தவர் என்று புகழப்படும் கிம் கி டுக், இந்தப் படத்தில் எந்தக் காட்சிப் படிமத்தை அதிகமாகப் பயன்படுத்தினார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x