Published : 03 Dec 2017 12:26 PM
Last Updated : 03 Dec 2017 12:26 PM

மகளிர் திருவிழா: மதுரை வாசகிகளின் மனம் நிறைத்த திருவிழா

மதுரையில் ஆட்டம், பாட்டம், கொண்டாடமாக ‘தி இந்து’ மகளிர் திருவிழா 136 ஆண்டு பழமைவாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் நவம்பர் 26-ம் தேதி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளியாகும் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த வாசகிகள் குடும்பம், குடும்பமாகக் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், முதிய பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் எனப் பலரும் இந்த விழா நமக்கான விழா என்ற உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்குத்தான் விழா தொடங்கியது. ஆனால், அதிகாலை 7 மணி முதலே விழா அரங்குக்கு வாசகிகள் ஆரவாரமாக வரத் தொடங்கிவிட்டனர்.

வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் உதவும் சாதித்த பெண்கள், சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பெண்களது விழிப்புணர்வுக் கருத்துகள், கண்டுகளிக்க, கலை நிகழ்ச்சிகள் என, பல்வேறு அம்சங்களுடன் கோலாகலமாக மதுரையில் இந்த மகளிர் திருவிழா நடந்தது.

03CHLRD_MT_.9 நீதிபதி நிஷாபானு

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இத்திருவிழாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ஜெ. நிஷாபானு குத்துவிளக்கு ஏற்றி இனிதே தொடங்கி வைத்தார்.

பசுமலை சிஎஸ்ஐ செவிலியர் கல்லூரி முதல்வர் சி. ஜோதி ஷோபியா, மகளிர் தொழில்முனைவோர் மையத்தின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்திப் பேசினர்.

மாற்றி எழுதப்படும் தீர்ப்புகள்

விழாவில் பேசிய நீதிபதி நிஷாபானு “தாய், மனைவி, சகோதரி, மகள், தோழி எனப் பன்முகத்தன்மை கொண்டவர்கள். ஆனால், பெண்கள் தங்கள் உரிமையைப் பெற விரும்புவதில்லை. எல்லாப் பெண்களும் நீதித்துறையை நாடி வருவதில்லை. அவர்களுடைய கஷ்டங்களை அவர்களுக்குள்ளாகவே வைத்துக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு மோட்டார் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு வேலைசெய்யாதவர்கள், வீட்டு நிர்வாகி எனக் கூறி வருமானப் பாதிப்பு நஷ்டஈடு கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றி எழுதிக் கொண்டு இருக்கிறோம். இதேபோல், நிறைய விஷயங்கள் நடக்கின்றன. அதற்காகப் பெண்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியவில்லை.

பெண்களுக்கான எல்லா உரிமைகளும் கிடைத்த பிறகே பெண்மைக்கான நீதி அவர்களை முழுமையாகச் சென்றடையும்” என்றார்.

03CHLRD_JYOTHI_ சி. ஜோதி ஷோபியா rightதாய்மையின் முக்கியப் பங்கு

சி. ஜோதி ஷோபியா பேசும்போது, “உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை சுத்தமாக இருப்பது மட்டும் போதாதது. மனநலமும் முக்கியம். தாயின் சொல்லைத்தான் பிள்ளைகள் அதிகம் கேட்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும். பிறருடன் அன்பு பாராட்டுவதும் பிறரை நேசிக்கக் கற்றுத்தருவதும் முக்கியம்.

ஒரு குழந்தையை நாடாளும் ஆளுமையுடன் உருவாக்குவது பெற்றோர், ஆசிரியர்கள் கையில் மட்டுமே இருக்கிறது. அதனால், உங்கள் பிள்ளைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தாம் எதிர்காலச் சமுதாயத்துக்குத் தேவை. குழந்தைகளைச் சிறப்பானவர்களாக உருவாக்குவதில் தாய்மைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது ’’ என்றார்.

உழைத்தால் உரிமைகள் கிடைக்கும்

“வாழ்க்கையில் முட்டுக்கட்டை இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் பெண்கள் தூரமாய் வீசிவிட்டுப் போக வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தான் யார் என்பதை தன்னுடைய குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் அடையாளப்படுத்த வேண்டும். சமையலறை மட்டுமே வாழ்க்கை என்று இருக்கக் கூடாது. அதைத் தாண்டி ஒரு பெண்கள் பொருட்களை உற்பத்தி செய்கிறவர்களாக. தொழில் தொடங்குபவர்களாக மாற வேண்டும். ‘எந்த வேலையாக இருந்தாலும் என்னால் செய்ய முடியும்’ என்ற தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மனதை சவால்களுக்குத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். கடமையைச் செய்யுங்கள். உழைத்திடுங்கள். உரிமை தானாகக் கிடைக்கும் ” என்றார் ராஜகுமாரி ஜீவகன்.

அக அழகே உயர்வுதரும்

சிறப்பு விருந்தினர்கள் பேசி முடிந்ததும், பட்டிமன்றம் நடந்தது. ‘பெண்களுக்கு அழகு வேண்டுமா, வேண்டாமா?’ என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், மதுரை செந்தமிழ் கல்லூரி உதவிப் பேராசிரியை ஜி.ரேவதி சுப்புலட்சுமி நடுவராக வீற்றிருக்க, அழகு வேண்டும் என, பேராசிரியை எம்.தமிழ்ச்செல்வியும் வேண்டாமே எனத் தமிழாசிரியை எஸ்.அன்பு கார்த்திகாயினியும் காரசாரமாக வாதிட்டனர். நடுவர் ரேவதி சுப்புலட்சுமி, ‘‘ பெண்களுக்கு அழகு என்பது முக்கியம் என்றாலும், புற அழகைவிட, அக அழகு மகளிரை உயர்த்தும்’’ எனத் தீர்ப்பளித்தார். அதைக் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர் வாசகிகள்.

ஆடவைத்த பறையிசை

விழாவில் பங்கெடுத்த ஒவ்வொருவரும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு நாடகம், விளையாட்டு, ஆட்டம் பாட்டம் என ஒரே கொண்டாட்டம்தான். மாலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா தொகுத்து வழங்கினார். முதலில் திண்டுக்கல் சக்தி கலைக்குழுவின் பறையாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்களுடைய நடன நளினமும் அதிரும் பறையிசையும் விழாவில் பங்கேற்ற பெண்களை எழுந்து ஆட வைத்தன.

‘பறையாட்டக் கலை பெண்களிடம் ஒளிந்து கிடக்கும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். இந்தக் கலை பாமரர்களுக்கானது என ஒதுக்காமல் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டு’மென்ற கோரிக்கையைக் கலைஞர்கள் முன்வைத்தனர். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்தப் பறையாட்டம் இன்னும் கொஞ்சம் நீடிக்கலாமே என, ‘ஒன்ஸ்மோர்’ கேட்கும் அளவுக்கு வாசகிகளை ஈர்த்தது. அவர்களது கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.

5 நிமிடங்களில் 10 இட்லிகள்

தொடர்ந்து மதுரை அண்ணாச்சி இட்லி மாவு நிறுவனத்தினர், பெண்களுக்கு ஒரு சுவாரசியமான போட்டி வைத்தனர். அது ‘இட்லி சாப்பிடும்’ போட்டி. போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் 10 வாசகியர் மேடை ஏறினர். போட்டிபோட்டு இட்லி சாப்பிட்டனர். அரங்கத்தில் இருந்த வாசகிகள் அவர்களை உற்சாகப்படுத்த போட்டியாளர்கள் சாப்பிடுவதில் மட்டுமே கவனமாக இருந்தனர். 5 நிமிடத்தில் 10 இட்லிகளைச் சாப்பிட்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றார் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வேதவள்ளி. ஒன்பதரை இட்லிகள் சாப்பிட்ட ரேவதி என்பவர் இரண்டாம் பரிசும் 9 இட்லிகள் சாப்பிட்ட வேளாங்கண்ணி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அடுத்த போட்டி, ‘ஏதாவது ஒரு முக்கியமான கருத்தை எடுத்துக்கொண்டு மவுன நாடகம் (மைம்) வாயிலாகப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் நடித்துக் காட்ட வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டவுடன் கைதேர்ந்த நாடக நடிகர்கள் போல் மாறிவிட்டார்கள் நம் வாசகிகள். குமரிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இயல்பாக நடித்தனர்.

நீட்தேர்வு, ஈவ்டீசிங், கந்துவட்டி, மதுப் பழக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் கருத்துகளில் நடந்த மவுன நாடகப் போட்டிகள் வாசகிகளைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. அடுத்து கயிற்றில் முடிச்சுப் போடுதல் என்னும் போட்டி. குறிப்பிட்ட நிமிடத்தில் அதிக முடிச்சுகளைப் போட்டவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போடியில் விஜி என்பவர் முதலிடம் பெற்றார். அம்பிகா என்பவர் இரண்டாமிடமும் விஜயலட்சுமி என்பவர் மூன்றாமிடமும் பெற்றனர்.

மதுரை என்ற பெயருடன் இருக்கக்கூடிய இரண்டு ஊர்கள் எவை? மீனாட்சி அம்மன் கோயிலில் எத்தனை கோபுரங்கள் உள்ளன? திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு என்ன? மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பரதநாட்டியப் பெண் கலைஞர்கள் யார்? மதுரையில் பிறந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யார்? உள்ளிட்ட மதுரையை மையப்படுத்திய ஏராளமான கேள்விகள் வாசகியரிடம் கேட்கப்பட்டன. வாசகியர் அனைவரும் கைகளை உயர்த்தி மிகுந்த ஆர்வத்துடன் பதில் அளித்தனர். பதில் அளித்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்டிரா கொண்டைகள்

தலையில் ஸ்டிரா செருகுதல் போட்டி தொடங்கியதும், பெண்கள் வேகவேகமாக ஆளுக்கொரு ஸ்டிராவை எடுத்துத் தலையில் செருகிக்கொண்டனர். எல்லோர் தலையிலும் இருந்த ஸ்டிராக்களைப் பார்த்தபோது அனைவரும் ஸ்டிராவில் கொண்டை போட்டிருப்பது போல இருந்தது. கொடுத்த நேரத்துக்குள் 57 ஸ்டிராக்களைச் செருகிய லட்சுமிபிரியா முதல் பரிசும் 29 ஸ்டிராக்களைச் செருகிய ஊர்மிளா இரண்டாம் பரிசும் 28 ஸ்டிராக்களைச் செருகிய காவ்யாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அதைத் தொடர்ந்து முகத்தில் பொட்டு ஒட்டும் போட்டி நடந்தது. போட்டி தொடங்கியவுடன் நெற்றி, கன்னம், நாடி என முகம் முழுவதும் பொட்டுக்களை வேகமாக ஒட்டினர். இந்தப் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. முகத்தில் 11 பொட்டுகள் ஒட்டிய முருகேஸ்வரி முதலிடமும், 9 பொட்டுகள் ஒட்டிய பழனியம்மாள் இரண்டாமிடமும், 8 பொட்டுகள் ஒட்டிய அனீஷ்பாத்திமாபேகம் மூன்றாமிடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுடன் பங்கேற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

அனைவருக்கும் பரிசு

விழாவில் பங்குபெற்ற வாசகிகளிலிருந்து ஸ்ரீமதி, ஹரிலட்சுமி, ஜலீனா, இன்பஜோதி, அபிநயா, வள்ளியம்மை, மரகதமணி, பிரேமா, அக்சரா, சித்ரா, மதுமிதா, சசிகலா ஆகிய 12 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, சுங்குடி புடவை அணிந்தவர்கள், கிராப் தலை வைத்திருந்தவர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

scl students madurai tiruvizha விழாவில் பாடிய சேர்மன் மாணிக்கம் பள்ளி மாணவிகள்

விழா நடந்த அன்று பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிவகாமி, ஆண்டம்மாள், சண்முகவள்ளி ஆகிய மூவருக்கும் சிறப்பு பம்பர் பரிசு வழங்கப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் இந்தப் பரிசுகளை வழங்கினார்.

வாசகிகளின் ஆர்வார கோஷத்துடன் மகளிர் திருவிழா நிறைவுபெற்றது. விழாவுக்கு அரங்கை வழங்கிய அமெரிக்கன் கல்லூரியும் விழா கொண்டாட்டங்களில் ‘தி இந்து’வுடன் இணைந்து கொண்டது.

சென்னை சில்க்ஸ், அண்ணாச்சி விலாஸ், விஐபி இட்லி மாவு, சாஸ்தா கிரைண்டர், ஹேமா, கண்ணன் புட்ஸ், பாண்டியன் ஊறுகாய் மற்றும் மசாலா, எஸ்விஎஸ் மாவு, பூர்ணகும்பம் தீப எண்ணெய், மெட்ரோபோல் ஹோட்டல், ராகா ரைஸ்பிரான் ஆயில், பிரித்வி இன்னர் வேர், தைரோகேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பரிசுகளை வழங்கினர்.

 

Muneeswariright“நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பெற்றோம்”

- மாற்றுத் திறனாளி வாசகி முனீஸ்வரி

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் மேம்பாட்டுக்காக மதுரை நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் தியாகம் பெண்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த 17 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவரான முனீஸ்வரி, “நான் பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளி நிகழ்ச்சிகளுக்குச் சென்றதில்லை. முதன்முறையாக இந்த மகளிர் திருவிழாவில் கலந்துகொண்டது புதிய அனுபவமாக இருந்தது. வேன் மூலம் இங்கே வந்தோம். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன.

போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களை பார்க்கும்போது நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பதற்குத் தயாராக இருப்போம். தியாகம் பெண்கள் அறக்கட்டளைக்கு பம்பர் பரிசாக வழங்கப்பட்ட கிரைண்டர் எங்கள் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு நன்றி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x