

நம் வார்த்தைகளிலிருந்து கற்பதைவிட நம் செயல்களில் இருந்துதான் பிள்ளைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் என்பதை வளர்ந்துவிட்ட நாமே புரிந்துகொள்ளவில்லை. நான் என் பிள்ளை முன்பு கணவரிடம் ஒரு பொய் சொல்கிறேன். ஆனால், அதே பிள்ளைக்குப் பொய் சொல்வது தவறென போதிக்கிறேன் என்றால் நான் பொய் சொல்பவள் மட்டுமல்ல; நான் ஏமாற்றுக்காரியும்கூட. இதைத்தானே என்னைப் பார்த்து வளரும் பிள்ளை கற்றுக்கொள்ளும்? பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக உருவாகவேண்டும் என்கிற எண்ணம் நமக்கிருந்தால், நாம் முதலில் நல்லவிதமாக நடக்க வேண்டும். இதுதான் ஒரு நல்ல வளர்ப்புக்கு அடிப்படை.
எக்காரணம் கொண்டும் பிள்ளைகள் மனதில் எதற்காகவும் அச்சத்தை ஏற்படுத்தாமல் இருப்பது அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளரவும், மற்றவருக்குப் பயந்து பொய் சொல்லாமல் இருக்கவும், அவர்களை அவர்களாக வாழ்வைக்கவும் உதவும். சாமி கண்ணைக் குத்திடும் என்றோ, புளிய மரத்துல பேய் இருக்கு என்றோ சொல்லிச் சில காலம்தான் பிள்ளைகளை ஏமாற்ற முடியும். அப்பா திட்டுவார் அல்லது அடிப்பார் என்றோ டாக்டர் ஊசி போடுவார் என்றோ சொல்லி அப்போதைக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், காலத்துக்கும் அது வேலை செய்யுமா?
நட்பெனும் பாலம்
பிள்ளைகள் வளர்ப்பில் தற்காலிகத் தீர்வை மட்டுமே சிந்திக்காமல், அது நாளை அவர்களுக்கு எந்த விதமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு செயல்படுத்துதல் அவசியம். முதலில் பிள்ளைகளுக்கும் அறிவு இருக்கிறது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோம், ஏன் ஒன்றைச் செய்யச் சொல்கிறோம் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டால் அவர்கள் புரிந்து செயல்படுவார்கள். அதை விட்டு அவர்களை மிரட்டி, அச்சுறுத்திப் பயம் காட்டிச் செய்யவைப்பது அவர்களுக்குள் பலவிதமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
நட்பை அடித்தளமாகக் கொள்ளும் எந்த உறவும் வலிமையாக இருக்கும். வேண்டாத அழுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், அதிகாரமும், அடிமைத்தனமும் இல்லாத ஒரே இடம் நட்பு மட்டுமே. அப்படிப்பட்ட அடித்தளத்தை நாம் பிள்ளைகளுடன் ஏற்படுத்திக் கொண்டுவிட்டால், அவர்கள் வாழ்வில் எதுவும் தவறாகமல் இருக்க நாம் உதவலாம். முக்கியமாகப் பிள்ளைகள் பதின்ம வயதை அடையும்போது பொதுவாக அவர்கள் பெற்றோரின் சொல்பேச்சு கேட்பதில்லை, என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க முடியவில்லை என்றெல்லாம் புலம்புவதைக் கேட்கிறோம். இந்தப் பருவத்துப் பிள்ளைகள் நமக்கு மிகவும் கஷ்டம் கொடுக்கிறார்கள் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறோம். ஆனால், அது உண்மையல்ல. இந்த வயது அவர்களுக்குத்தான் மிகவும் கடினமான வயது.
நம்மைப் போல் அல்ல அவர்கள்
உடல் மாற்றங்களால் குழப்பம், உள்ள மாற்றங்களால் தடுமாற்றம், திணிக்கப்படுபவையால் போராட்டம், தாங்கள் பெரியவர்களா, சிறியவர்களா எனப் புரியாமல் திண்டாட்டம் எனப் பலவகையான அழுத்தங்கள் அவர்களுக்கு ஏற்படும் நேரம் இது. அவர்களது வயதைக் கடந்து வந்திருக்கும் நமக்குத்தான் அவர்களின் நிலை புரிய வேண்டும். அவர்கள் இந்த வயதைப் பிரச்சினைகள் பெரிதும் இல்லாமல் கடக்கத் துணைபுரிய வேண்டும். ஒரே ஒரு நிமிடம் அவர்கள் வயதில் நாம் எப்படி இருந்தோம், எப்படிப்பட்ட அழுத்தங்கள் இருந்தன, எப்படி அவற்றைக் கடந்தோம் என்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவர்களைப் புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கும். அதே நேரம், அவர்கள் நம் காலத்தில் இல்லை என்பதையும் உணர்ந்து இன்றைய காலத்துக்குத் தகுந்தார்போல் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் சிந்தித்து அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுடன் பயணிக்க வேண்டும். இதற்குப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் நட்பென்ற பாலம் கண்டிப்பாக அவசியம். எதுவாக இருந்தாலும் தன் பெற்றோருடன் பேசினால் தீர்வை நோக்கிச் செல்ல வழி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கும் பிள்ளைகள் எப்படித் தவறான பாதையில் செல்வார்கள்?
எல்லாம் நமக்குத்தான் தெரியும் என்கிற இறுமாப்பைத் தொலைத்துப் பிள்ளைகளுடன் சேர்ந்து நாமும் பெற்றோராக வளரும்போது, நாம் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கும். நாம் கடந்துவந்த பாதைதான் சிறந்தது என்றால், இங்கே புதிய பாதைகள் எப்படி உண்டாகும்? அவர்கள் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள நன்மை தீமையை அவர்களுடன் நாம் அலசலாம். அவர்கள் தனிப் பாதையில் போக முடிவெடுத்தால், அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு தோள் கொடுக்கலாம்; உடன் நிற்கலாம். அதை விட்டு நாம் சொல்லும் பாதையில்தான் அவர்கள் போக வேண்டும் எனத் திணிப்பதும் அவர்களின் வாழ்வை நம் கையில் எடுப்பதும் அந்தத் தனி உயிருக்கு நாம் செய்யும் அநியாயம் என்பதை நாம் உணர வேண்டும்.
சிறு வயதிலிருந்து நம் கஷ்ட நஷ்டங்களைப் புரிய வளர்ப்பதுடன், அந்தந்த வயதில் அவர்களால் முடிந்த சிறு சிறு வீட்டுவேலைகளில் பங்கெடுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்குள் பொறுப்புணர்வைக் கொண்டு வரலாம். படித்து முடிக்கும் வரை அவர்களை ஒரு வேலையும் வாங்காமல் எந்தக் கஷ்டத்தையும் புரியவைக்காமல் வளர்த்து விட்டுத் திடீரென ஒரே இரவில் அவர்கள் வளர்ந்து வீட்டின் பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நம் சமூகத்துப் பெற்றோர்களின் சிறப்பு.
வேண்டாமே பாகுபாடு
முக்கியமாகப் பாலியல் கல்வியைப் பெற்றோராக நாமே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். நமக்கு அதைச் செய்வது கடினமாக இருந்தால் அது சார்ந்த நல்லதொரு புத்தகத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்துப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்வது நலம். டிஜிடல் உலகில் இருக்கிறோம் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாம் சொல்லிக்கொடுக்க வில்லையெனில் அவர்களாகத் தேட முற்படும்போது தவறான பாதையில் போக அது வழிவகுக்கலாம்.
எல்லாவற்றைவிட இந்தக் காலத்தில் நாம் மிக முக்கியமாகச் செய்யவேண்டியது ஆண்/பெண் பாகுபாடு இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது. மகனுக்கும் வீட்டு வேலைகள், சமையல் உள்பட அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். மகளுக்கும் வெளி வேலைகளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இப்படி வளர்த்தால் மட்டுமே நம் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் இணையருடன் வாழும்போது பிரச்சினைகள் இல்லாமல் வாழ இயலும்.
பிள்ளைகள் தன்னையும் மதித்துப் பிறரையும் மதித்து வாழ வேண்டும் என்றால், நாம் (இணையர்) ஒருவரை மற்றவர் மதித்து வாழவேண்டும். நமக்குள் பரஸ்பர மரியாதை இல்லையெனில், பிள்ளைகள் நம்மையும் மதிக்க மாட்டார்கள்; தன்னையும் மதிக்கமாட்டார்கள். பின்னால் அவர்களுக்கு ஏற்படும் உறவுகளையும் மதிக்க மாட்டார்கள். பிள்ளைகள் நம் கைபொம்மையல்ல; அவர்களுக்கு என்று ஒரு மனம், அறிவு என்று எல்லாம் இருக்கின்றன என்பதைப் புரிந்து அவர்கள் வாழ்வை அவர்கள் வாழ நாம் துணை நின்றால் அவர்கள் குணமும் நற்குணமாகவே அமையும்.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
mail.knowrap@gmail.com