சுரங்கத்தை எதிர்த்த செயற்பாட்டாளர்: சர்ச்சைக்குரிய வகையில் கைது!
சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பிரபுல்லா சமந்தரா (72), கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். பிரபுல்லா சமந்தரா, 2017ஆம் ஆண்டு மதிப்புமிக்க கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பழங்குடியினரின் குரலை ஒடுக்க சுரங்கப் பகுதிகளில் ஒடிசா அரசும் எதிர்க்கட்சிகளும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக விடுதலைக்குப் பிறகு அவர் குற்றம்சாட்டினார்.
கைது குறித்து பிரபுல்லா சமந்தரா கூறியபோது, “ராயகடா, கலஹண்டி, அதன் அருகமை பகுதிகளில் சுரங்க நடவடிக்கைகளை எதிர்க்கும் பழங்குடி யினரின் துயர் குறித்து ராயகடாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நான் பேச இருந்தேன். ஆனால், அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்றனர்.
என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லும் வழியில்தான், அவர்கள் சாதாரண உடையில் இருந்த போலீஸ் என்பது தெரியவந்தது. போலீஸார் மனரீதியாக என்னைக் கடுமையாகத் துன்புறுத்தினர்.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் பெர்ஹாம்பூரில் உள்ள எனது வீட்டில் போலீஸார் என்னை விட்டுச் சென்றார்கள். சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிய 24 பழங்குடியினர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேதாந்தா, அதானி குழுக்களுக்கு பாக்சைட் (கனிமம்) சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
