Published : 05 Dec 2017 11:43 AM
Last Updated : 05 Dec 2017 11:43 AM

வேலை வேண்டுமா? - பிளஸ் 2 முடித்தால் மத்திய அரசுப் பணி

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் உள்ளிட்ட குரூப்-சி ஊழியர்களும் குரூப்-பி சார்நிலைப் பணியாளர்களும் எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், கீழ்நிலை எழுத்தர், இளநிலைச் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தேர்வுக்கான (Combined Higher Secondary Level Examination) அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி

பிளஸ் 2 முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு மட்டும் அறிவியல் பிரிவில் கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 32, ஓ.பி.சி. பிரிவினருக்கு 30, மாற்றுத் திறனாளிகள் 37.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு, டேட்டா என்ட்ரி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு (Tier-I), 2-வது நிலைத் தேர்வு (Tier-II) என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இதில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் 100 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.

இரண்டாம் நிலைத் தேர்வு, விரிவாகப் பதில் எழுதும் வகையில் (Descriptive Type) அமைந்திருக்கும். இதற்கு 100 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பதவிக்கு ஏற்ப திறன் தேர்வுக்கு (Skill Test) அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குக் கணினித் தேர்வும் இதர பதவிகளுக்குத் தட்டச்சு லோயர் கிரேடு தரத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படும். இறுதியாக முதல்நிலைத் தேர்வு மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஆன்லைன்வழி முதல்நிலைத் தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகியவை தேர்வு மையங்கள் ஆகும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் www.ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள்

முதல்நிலைத் தேர்வு: மார்ச் 4 - 26, 2018

இரண்டாம்நிலைத் தேர்வு: ஜூலை 8, 2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 18, 2017

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x