வேலை நேரத்தில் ஃபேஸ்புக் பாக்கறீங்களா?

வேலை நேரத்தில் ஃபேஸ்புக் பாக்கறீங்களா?
Updated on
1 min read

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊகத்திற்கு அப்பால் உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற பல சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. அலுவலகங்களில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டும் விஷயங்களில் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் தனிப் பட்ட விஷயங்களுக்காக இத்தகைய வலைத்தளங்களை மேய்ந்துகொண்டிருப்பதுதான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்தைச் சமூக வலைத்தளங்கள் அபகரித்துக் கொள்வதாக நினைக்கின்றன. எனவே அலுவலகத்தில் சமூக வலைத்தளங்களை முடக்கிவைத்துள்ளன.

இது பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்குத்தான். ஏனெனில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவே எப்போதும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படித் தடையேதும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த எண்ணத்தைப் பொய்யாக்கியுள்ளது நார்வேயில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. தலைமைப் பீடங்களில் உள்ள அதிகாரிகளே அதிகமாகச் சொந்தத் தேவைகளுக்காகத் தனிப்பட்ட ப்ரௌஸிங்கில் ஈடுபடுவதாக அது தெரிவித்துள்ளது.

நார்வேயில் உள்ள பெர்கன் பலகலைக்கழகத்தின் சமூக உளவியல் அறிவியல் துறை இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் 11 ஆயிரம் பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் வேலை நேரத்தில் தனிப்பட்ட ப்ரௌஸிங் செய்வதை எதிர்க்கும் அதிகாரிகள் பலர் சொந்தத் தேவைகளுக்காக அலுவலக நேரத்தில் ப்ரௌஸிங் செய்பவர்களாக உள்ளனர் என்பதுதான்.

அதிகாரிகளின் பணிநேரம் ஊழியர்களின் பணி நேரத்தைவிட அதிகமாக உள்ளதால் பணி நிமித்தமான உளவியல் சுமை அவர்களுக்கு அதிகம் உள்ளது. மேலும் ஊழியர்கள் அதிக அளவில் தனிப்பட்ட ப்ரௌஸிங்கில் ஈடுபடுவதால் அது அலுவலக முன்னேற்றத்தைப் பாதிக்குமோ எனக் கவலை கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால்கூட அவர்கள் தனிப்பட்ட ப்ரௌஸிங்கில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

அலுவலங்களில் வேலை பார்க்கும் மூத்தவர்களைவிட இளையவர்களும், பெண்களைவிட ஆண்களும் அதிகமாகச் சொந்தக் காரணங்களுக்காக ப்ரௌஸ் செய்வதாக அது கூறுகிறது. உயர் கல்வி படித்தவர்களின் சமூக வலைத்தள ஈடுபாடு மிக அதிகமாக உள்ளதாகவும், அடுத்தவர் விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுபவர்களும், பதற்றமான மனம் கொண்டவர்களும் சமூக வலைத்தளங்களில் விருப்பத்துடன் உலவுவதாகவும் கண்டறிந்துள்ளார்கள்.

அலுவலகங்களில் வேலை செய்யும் சூழலும் தனிப்பட்ட ப்ரௌஸிங்கை அதிகமாக்குகிறது. தனியறை கொண்ட அலுவலக உயர் அதிகாரிகள் பொதுவான பணியிடத்தில் பணிபுரிபவர்களைவிட அதிகமாகச் சொந்தக் காரணங்களுக்காக வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

அலுவலகங்களில் தொடக்கக் கட்ட நிலைகளில் உள்ளவர்களைவிட உயர் பதவி வகிப்பவர்கள் வேலை குறித்த பயம் இல்லாதவர்கள் என்பதால் அவர்கள் அதிகமாகச் சொந்த காரணங்களை முன்னிட்டுத் துணிச்சலாக ப்ரௌஸ் செய்வதாகக் காரணம் கூறுகின்றனர். நேரம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களும் சுய கட்டுப்பாடு கொண்டவர்களும் அதிக நேரத்தைச் சமூக வலைத்தளங்களில் செலவிடுவதில்லை என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in