ஷீரடி சாய்: முக்கோலங்களில் காட்சியளிக்கும் பாணி பாபா கோயில்

அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் பாபா
அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் பாபா
Updated on
2 min read

பாபா நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயனக் கோலம் ஆகிய மூன்று கோலங்களில் காட்சி தரும் சிறப்புக்கு உரியது ஷீரடி சாய் பாணி பாபா கோயில். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோயிலை மருத்துவர்கள் முத்தையா - விசாலாட்சி தம்பதி 2018ஆம் ஆண்டு கட்டினர்.

அன்ன பாபாவும் ஆமை சிலையும்: கோயில் முன்புறம் கடல் பைரவர் என்று அழைக்கப்படும் ஆமை உருவச் சிலை உள்ளது. யாருக்கும் தீங்கு இழைக்காத ஆமை, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தன் எண்ணங்களாலேயே குட்டிகளைக் காத்திடும் தன்மை உடையது. அதேபோல் இங்குள்ள பாபாவும் குடிமக்களைக் காக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்தச் சிலை அமைந்துள்ளது.

அதன் அருகில் பசிப்பிணியைப் போக்கும் அன்னபாபா சிலை உள்ளது. இவர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பாபா மக்களுக்கு பெரிய பானையில் உணவு சமைப்பது போன்று இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வலதுபுறம் கண்ணாடி அறைக்குள் சயனக் கோலத்தில் ஊஞ்சலில் பாபா அருள்பாலிக்கிறார்.

பாபாவின் சிலையை தத்ரூபமாக மெழுகுச் சிலையாகச் செய்து வைக்கப்பட்டுள்ளது. மைய மண்டபத்தில் அமர்ந்த நிலையில் பாபா அருள்பாலிக்கிறார். இங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

பாணி பாபா கோயில் வெளி முகப்பு தோற்றம்
பாணி பாபா கோயில் வெளி முகப்பு தோற்றம்

குடிநீராகும் அபிஷேக நீர்: இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் குடங்களில் தண்ணீர் நிரப்பி தங்களது வீட்டின் பூஜை அறையில் 3 நாள்கள் வைத்திருந்து, அதைக் கொண்டு வந்து பாணி பாபாவுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேக நீர் அருகேயுள்ள ராசாத்தி கிணற்றில் சேகரமாகிறது.

கோயிலில் உள்ள என்றும் வற்றாத ராசாத்தி கிணற்றில் இருந்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். மனதை மயக்கும் கண்ணுக்கினிய தவழும் கிருஷ்ணனின் சிலையும் உள்ளது. குழந்தை வரம் வேண்டுவோர் கிருஷ்ணரைப் பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வருகின்றனர்.

பானி பாபா
பானி பாபா

தூணி எரிப்பு பீடம்: கோயில் வளாகத்தில் தெற்கு வாயில் வழியாக வெளியே சென்றதும், அங்கே தூணி எரிப்புப்பீடம் உள்ளது. பக்தர்கள் அனைத்து வித நோய்களும் தீர பாபாவை நினைத்து ‘தூணி’ எரிக்கின்றனர். இதில் நவசமித்துகள், நவதானியம், நெய், சாம்பிராணி, சூடம், ஊதுபத்தி, தென்னை நெத்து ஆகிய 7 பொருள்களை வைத்து எரிக்கின்றனர். கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனாக ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு என தூணி எரிக்கின்றனர். அதன் அருகே தென்மேற்கு மூலையில் மாணிக்க விநாயகர் அருள்பாலிக்கிறார்.

மாவு அரைக்கும் திரிகை: ஆமை சிலைக்கு அருகில் மாவு அரைக்கும் திரிகை உள்ளது. இக்கோயிலுக்கு வருவோர், பிறவித் துயர்களில் இருந்து விடுபடவும், உற்றார் பிணி விலகவும், பசிப்பிணி அகலவும் கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை அரைக்கின்றனர். பின்னர் அவற்றை அங்குள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அளிக்கின்றனர். இதன் மூலம் தங்களது பாவங்கள், அகந்தை அழிவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு நந்தவனம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தூணி - எரிப்பு பீடம்
தூணி - எரிப்பு பீடம்

பசுமடம்: கோயிலுக்கு அருகே பசுமடம் உள்ளது. இங்கு 24 பசுக்கள், கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு கோ பூஜை நடத்தப்படுகிறது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். சுற்றுப் பகுதி கிராமங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

விழாக்கள்: ஆண்டில் குருபூர்ணிமா, விஜயதசமி, ராமநவமி, வருஷாபிஷேகம் என நான்கு முக்கிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கு அனைத்து நாள்களிலும் பாபாவுக்குப்படைக்கப்பட்ட நைவேத்தியம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அமைவிடம்: ஷீரடி சாய் பாணி பாபா கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து, மானகிரி வழியாக திருப்பத்தூர் செல்லும் வழியில் நாச்சியாபுரம் கம்பனூரில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 7.50 மணி வரை திறந்திருக்கும். காலை 7 மணி, பிற்பகல் 12 மணி, மாலை 6 மணி, இரவு 7.20 மணி என 4 வேளை ஆரத்திகள் நடைபெறுகின்றன.

- jeganathan.i@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in