Published : 06 Dec 2017 11:07 AM
Last Updated : 06 Dec 2017 11:07 AM

டிங்குவிடம் கேளுங்கள்: வால் நட்சத்திரத்தின் ‘வால்’ எப்படித் தோன்றுகிறது?

வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்கிவிடும் என்னால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அப்படி வாங்க முடிவதில்லை. தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஏற்படும் பதற்றம்தான் காரணம். தெரிந்த விஷயங்கள் கூட நினைவுக்கு வருவதில்லை. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு என்பதால், பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்று பயம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. என்ன செய்வது டிங்கு?

- ஆர். கெளசல்யா, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

உங்களுக்குத் தேர்வு எழுதுவதில் பயமில்லை. நீங்கள் முக்கியமாகக் கருதும் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளை எழுதும்போதுதான் பதற்றம் வருகிறது, அப்படித்தானே? நீங்கள் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகள் வரப் போகின்றன. அதிலும் பத்தாம் வகுப்புக்குத் தினம் ஒரு தேர்வு வைத்து, பொதுத் தேர்வுக்குத் தயாராக்கிவிடுகிறார்கள். அதனால் எந்தத் தேர்வு குறித்தும் நீங்கள் பயப்படவோ, பதற்றமடையவோ தேவையே இல்லை.

அரையாண்டு, பொதுத் தேர்வுகளையும் வகுப்பு தேர்வுகளாக நினைத்துக்கொள்ளுங்கள். எப்படிக் கேள்வி கேட்டாலும் என்னால் எழுதமுடியும் என்று நம்புங்கள். இந்த நம்பிக்கை உங்களைப் பதற்றமடைய வைக்காது. இந்த அரையாண்டு தேர்வில் நான் சொன்னதைச் செயல்படுத்திப் பார்த்தால், பொதுத் தேர்வுக்குத் தயாராகிவிடுவீர்கள். அரையாண்டு தேர்வு முடிந்ததும் உங்கள் அனுபவத்தை மறக்காமல் எழுதுங்கள், கெளசல்யா.

வால் நட்சத்திரத்துக்கு ‘வால்’ எப்படி உருவாகிறது, டிங்கு?

- எம். வருண் குமார், அம்மாபேட்டை.

வால்நட்சத்திரம் என்பது பனிக்கட்டியைப் போன்றது. இதில் தூசு, மண், பாறைகள், பல வகை வாயுக்கள் போன்றவையும் இருக்கும். சூரிய மண்டலத்தின் எல்லையில், சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வால் நட்சத்திரத்துக்கு வால் இருக்காது. தலை மட்டுமே இருக்கும். சூரியனைச் சுற்றிவிட்டு, மீண்டும் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து, சூரியனை நோக்கிச் செல்லும்போதுதான் வால் உருவாகும்.

சூரியனின் ஈர்ப்பு விசையால் வேகம் அதிகரிக்கிறது. சூரியனின் வெப்பமும் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்கத் துகள்களும் வால்நட்சத்திரத்தைத் தாக்க ஆம்பிக்கும்போது, அவற்றிலுள்ள தூசுகளும் வாயுக்களும் வெளியேறுகின்றன. அப்போது இந்த வால் போன்ற பகுதி தோன்றுகிறது. சூரியனைச் சுற்றிவிட்டு, வெகு தொலைவுக்குச் செல்லும்போது வால் மறைந்துவிடுகிறது. அதாவது சூரியனுக்கு அருகில் வரும்போது வால் தோன்றுகிறது, தொலைவில் இருக்கும்போது வால் மறைந்துவிடுகிறது, வருண் குமார்.

ஜெர்மனி என்றதும் சர்வாதிகாரி ஹிட்லர்தான் நினைவுக்கு வருகிறார். அந்த நாட்டைச் சேர்ந்த வேறு சில பிரபலங்கள் குறித்துச் சொல்ல முடியுமா, டிங்கு?

–எஸ். என். நவநீதகிருஷ்ணன், சேலம்.

உலகையே கதிகலங்க வைத்த ஹிட்லர் உங்கள் நினைவுக்கு வருவதில் வியப்பு ஒன்றும் இல்லை நவநீதகிருஷ்ணன். ஜெர்மனியைச் சேர்ந்த எத்தனையோ பிரபலங்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். உலகத்துக்கு அளப்பரிய விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜோஹன்னஸ் கெப்ளர், நிகோலஸ் கோப்பர்நிகஸ், அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூட்டன்பர்க், பொதுவுடைமைத் தத்துவங்களின் பிதாமகர்கள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், பிரபல இசைக் கலைஞர் லுத்விக் வான் பீத்தோவன், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷு மாக்கர், டென்னிஸ் வீரர்கள் ஸ்டெபி கிராஃப், போரிஸ் பெக்கர், எழுத்தாளர் ஆன் ஃபிரான்க் போன்றவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபலங்களில் சிலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x