Published : 25 Dec 2017 03:46 PM
Last Updated : 25 Dec 2017 03:46 PM

டெஸ்லாவுக்கு சவால் விடும் சீன நிறுவனம்

பே

ட்டரி கார் என்றாலே டெஸ்லா பெயர்தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் டெஸ்லா காருக்கு போட்டியாக தங்களது தயாரிப்புகளை களம் இறக்குகிறது சீன நிறுவனமான என்ஐஓ. தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில் டெஸ்லாவுக்குப் போட்டியாக குறைந்த விலையில் கார்களை தயாரித்து சந்தையில் இறக்கியுள்ளது என்ஐஓ.

இஎஸ்8 என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மாடல் எஸ்யுவி ரகமாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். இதன் விலை 67,783 அமெரிக்க டாலர்கள். சீன மதிப்பில் 4.48 லட்சம் யுவான். ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் காரின் விலை 5.96 லட்சம் யுவான் ஆகும்.

என்ஐஓ நிறுவனத்தின் தாய் நிறுவனம் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகும். இந்நிறுவனம் 100 கோடி டாலரை முதலீட்டாளர்களிடமிருந்து பேட்டரி கார் தயாரிப்புக்காக திரட்டியுள்ளது.

முதல் கட்டமாக உள்நாட்டில் பேட்டரி கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஒய்டி நிறுவனத்தை எதிர்கொள்வது அடுத்து ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்புகளுக்கு சவால் விடுவதுதான் தங்கள் இலக்கு என்கிறார் இதன் நிறுவனர் வில்லியம் லீ.

இந்நிறுவனம் முதலில் நெக்ஸ்ட்இவி என்றழைக்கப்பட்டது. சீனாவில் தொடங்கப்பட்ட வெகு சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நிறுவனங்களும் தங்களது கவனத்தை பேட்டரி கார் தயாரிப்பு பக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.

கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 118 கோடி டாலரை முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. அன்ஹுய் ஜியான்ஹுயாய் ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பேட்டரி வாகனத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதேபோல ஃபோர்டு நிறுவனமும் 500 கோடி யுவான்களை முதலீடு செய்து அன்ஸுல் ஸோடெய் ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

மணிக்கு 100 கி.மீ வேகம்

சீனாவின் என்ஐஓ உருவாக்கியுள்ள இஎஸ் 8 ரக வாகனத்தில் 7 பேர் பயணிக்க முடியும். இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இந்த வேகத்தை 4.4 விநாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் பிரேக் மிகவும் துல்லியமானது. இது 5 மி.மீ ரேடாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 33.8 மீட்டர் தூரத்திலேயே இதை நிறுத்த முடியும்.

பேட்டரி ரீ சார்ஜ் செய்யும் மையத்தில் பேட்டரியை மாற்றிக் கொடுத்து எடுத்துச் செல்லும் வசதியையும் இந்நிறுவனம் அளிக்கிறது. அதாவது 3 நிமிஷத்திலேயே பேட்டரியை மாற்றிவிடலாம். காரின் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு பின்னர் அளிக்கப்படும். இத்தகைய வசதிகளை செய்வதற்கு பேட்டரி சார்ஜிங் மையங்களை (ஸ்வாப் ஸ்டேஷன்) ஏற்படுத்தியுள்ளது.

இந்த காரில் மொபில்ஐ எனப்படும் க்யூ4 சிப் உள்ளது. இது செயற்கை நுண்ணறிவுத் திறனாகும். இதன் மூலம் காரினுள் நிலவும் ஏசியின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

2020-ம் ஆண்டுக்குள் சீனாவில் 1,100 பவர் ஸ்வாப் மையங்களை அமைக்கவும் என்ஐஓ திட்டமிட்டுள்ளது. அதேபோல 1,200 நடமாடும் பேட்டரி சேவை மையங் களையும் என்ஐஓ நிறுவனம் உருவாக்கஉள்ளது.

டெஸ்லாவில் மிக அதித முதலீடுகளைச் செய்துள்ள பெய்லி கிஃபோர்டு அண்ட் கோ நிறுவனம் என்ஐஓவிலும் முதலீடு செய்துள்ளது. லோன் பைன் கேபிடல் எல்எல்சி, சிஐடிஐசி கேபிடல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சீன சொத்து நிர்வாக நிறுவனங்கள் ஆகியவை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

சீன நிறுவன தயாரிப்புகள் என்றாலே அதன் தரம் கேள்விக்குறியாகவிடும். டெஸ்லாவுக்குப் போட்டியாக விலை குறைவில் வாகனங்களை தயாரித்து வரும் என்ஐஓ, தொழில்நுட்பம், தரத்தில் கவனம் செலுத்துமானால் சீன தயாரிப்புகளும் வரவேற்பைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x