

‘Stunt’ என்றால் சண்டை. ‘Stunt’ அடிக் காதே என்றால் அர்த்தம் வேறு விதமாக இருக்கிறதே.
நண்பரே, ‘stunt’ அல்லது ‘stuntman’ என்பவர் சண்டை போன்ற கடினமான, ஆபத்தான செயல்களை நடிகர்களுக்காகத் திரைப்படத்திலும் சின்னத்திரையிலும் செய்பவர். அதே நேரம் பிறரது கவனத்தைக் கவர்வதற்காக ஒன்றைச் செய்யும்போது அதையும் ‘stunt’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ‘His act is a cheap publicity stunt’ என்றால் அவனுடைய செயல் மலிவான விளம்பர உத்தி என்று பொருள். ‘Stunt’ என்ற வார்த்தையை ‘verb’ஆகப் பயன்படுத்தும்போது அது ‘ஒன்றின் முறையான வளர்ச்சி தடைப்படுதல்’ என்று பொருள் தருகிறது. ‘A poor diet can stunt a child's growth’.
தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்து வர்கள் ரத்த நாளம் சுருங்கியுள்ள அல்லது அடைபட்ட பகுதியில் ஒரு சிறு பொருளை (உறைகுழாயை) பொருத்துவார்கள். இதனால் இந்த ரத்த நாளம் தொடர்ந்து அடைப்பின்றி விரிவடைந்த நிலையில், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இப்படி வைக்கப்படும் பொருளை ‘stent’ என்பார்கள்.
***
‘Moustache' என்பதன் பிற்பகுதியான ‘ache' என்பது வலியைக் குறிக்கிறது. வலிக்கும் மீசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? -இல்லை ஐயா, இல்லை. ‘துடிக்கிறது என் மீசை. அடக்கு அடக்கு என நட்பு நாடி வந்த உறவுமுறை தடுக்கிறது' என்ற கட்டபொம்மனின் மன வலி வசனத்தையெல்லாம் ஆதாரத்துக்கு அவிழ்த்து விடாதீர்கள்.
கிரேக்க மொழியில் உதடு என்பதைக் குறிக்கும் ஒரு சொல் ‘moustacio'. உதட்டுக்கு மேலே இருக்கும் அடர் கறுப்பு ரோமக் கற்றையைப் பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலிய மொழியில் ‘moustacio’ என்று குறிப்பிட்டனர். இது மருவி ஆங்கிலத்தில் ‘moustache’ என்றாகி விட்டது.
***
‘Vendatta’ என்பது பகை உணர்வைக் குறிக்கும் சொல்தானே? - அது அதையும் தாண்டிய நிலை. இரண்டு நபர்கள் அல்லது குழுக்களிடையே நீண்ட காலம் தொடரும் பகைமை. இரு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படும் அளவுக்கான ஆழ்ந்த வெறி. இந்திய திரைப்படக் கதாசிரியர்களின் அமுதசுரபி.
‘Grudge’, ‘Hostility’, ‘Revenge’ போன்றவை இதன் சம வார்த்தைகள். ‘ஒரு கைதியின் டைரி’, ‘தளபதி’, ‘நீ எங்கே என் அன்பே’ (இந்தியில் கஹானி) என்றெல்லாம் மிக நீண்ட பட்டியலிடுவதைவிட ஆவி, இச்சாதாரிப் பாம்பு ஆகிய இரண்டைக் குறிப்பிட்டால் ‘vendatta’வின் முழுப் பொருளும் புரிந்துவிடும்.
***
தெரிந்தவர்கள் நான்கு பேர் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது வெளிநாட்டில் குடும் பத்துடன் குடியேறிய ஒருவர், ‘அங்கே எல்லாம் ‘conscription' ஒரு பெரிய சிக்கல். என்ன செய்யறதுன்னு தெரியலை' என்று அங்கலாய்த்தார். பிறர் அதைப் புரிந்து கொண்டதுபோல் தலை அசைத்ததால், அந்தச் சொல்லுக்கு என்ன பொருளென்று கேட்கத் தயக்கமாக இருந்தது. அவர் சொல்லவந்தது என்ன?
கட்டாயப்படுத்துதல் என்பதை ‘conscription' எனலாம். என்றாலும் நடைமுறையில் அது உணர்த்துவது வேறொன்றை. சில நாடுகளில் ராணுவப் பயிற்சி என்பது இளைஞர்களுக்குக் கட்டாயமாக்கப்படுகிறது. முதல் முதலாக முதலாம் உலகப் போரில் கனடாவில் இப்படி கட்டாயமாக்கப்பட்டது.
ஓர் அவசர நிலை ஏற்பட்டால் தேசிய ராணுவத்துக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் ராணுவப் பயிற்சி பெற்றாக வேண்டும். இது குறுகிய காலத்துக்கானதாக இருக்கும். இதைத்தான் உங்கள் நண்பர் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு பதின்ம வயதில் ஒரு மகன் இருக்க வாய்ப்பு உண்டு.
- aruncharanya@gmail.com